jkr

செய்தியறிக்கை

வீடு சோதனையிடப்படுகிறது
வீடு சோதனையிடப்படுகிறது

அமெரிக்க விமானத்தை தகர்க்க முயற்சித்ததாக நபர் கைது

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா சென்ற ஒரு விமானத்தை வெடிவைத்து தகர்க்க முயற்சி செய்ததாக குற்றம்சாட்டப்படும் நைஜீரிய பயணி ஒருவர் அமெரிக்காவில் விசாரிக்கப்பட்டுவருகிறார்.

நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸைச் சேர்ந்த விமானம் வெள்ளியன்று ஆம்ஸ்டெர்டாம் நகரிலிருந்து கிளம்பி டெட்ராய்ட் நகரில் தரையிறங்கும் நேரத்தில் இந்த நபர் ஏதோ ஒன்றை வெடிக்க முயற்சி செய்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நபர் செய்த முயற்சி முறியடிக்கப்பட்டு அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நபர் இலண்டனில் தங்கியிருந்தவர் என்று தகவல்கள் வெளியானதை அடுத்து புலன் விசாரணைகளில் பிரிட்டிஷ் பொலிசார் உதவிவருகின்றனர்.

நைஜீரியர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்படுவது தங்களது அரசாங்கத்தை சங்கடப்படுத்தியுள்ளது என நைஜீரிய தகவல்துறை அமைச்சர் கூறியுள்ளார்.


அமெரிக்காவுக்கு செல்லும் விமானங்களில் கூடுதல் பாதுகாப்பு

அமெரிக்க விமானங்கள்
அமெரிக்க விமானங்கள்

அமெரிக்காவில் விமானத்தை தகர்ப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவுக்கு செல்லும் அனைத்து விமானங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. இந்தத் தகவலை நெதர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நடவடிக்கை காலவரையின்றி நடப்பில் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

பிரிட்டனில் இருந்து செல்பவர்கள் கை பைகளின் அளவை குறைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். கேத்தே பசிபிக் விமான நிறுவனம் அமெரிக்காவுக்கு செல்லும் அனைத்து பயணிகளையும் சோதனையிடவுள்ளனர்.


டெஹ்ரானில் வன்கலவரங்கள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

இரானியத் தலைநகர் டெஹ்ரானில் பாதுகாப்புப் படையினர் எதிர்க்கட்சியின் ஆதரவாளர்கள் இடையில் தொடர்ச்சியாக வன்கலவரங்கள் நடந்துள்ளதாக அந்நாட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தியதாகவும் அவர்களது கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதாகவும் எதிர்க்கட்சி இணையதளங்களும் சுயாதீன சாட்சிகளும் கூறுகின்றனர்.

தெஹ்ரானின் மத்திய பகுதி மற்றும் தெற்குப் பகுதிகளில் கலவரங்கள் மூண்டுள்ளன.

ஷியா முஸ்லிம் பண்டிகையான அஷுராவுக்கு முதல்நாள் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இரானில் அரசு எதிர்ப்பு மதகுருவான அயதுல்லா ஹுசைன் அலி மொண்டஸாரி கடந்த ஞாயிறன்று காலமானதன் பின்னர் அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசாங்கத்தினர் இடையில் பதற்றம் நிலவி வருகிறது.


இராக்கின் கெர்பாலாவில் பலத்த பாதுகாப்பு

கெர்பாலா
கெர்பாலா

இராக்கின் கெர்பாலா நகரத்தில் அஷுரா மத பண்டிகையை கொண்டாடுவதற்கு பல்லாயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் குவிந்து வருகின்றனர்.

ஆயுத்தாரிகளின் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்காக சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

பெண் தற்கொலைத்தாரிகளை தடுத்து நிறுத்துவதற்காக நூற்றுக்கணக்கான பெண் பொலிஸாரும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சோதனை சாவடிகளில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுகின்றன.

சமீப நாட்களில் இராக்கில் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

செய்தியரங்கம்
புதிய வீடுகள்
புதிய வீடுகள்

இந்தியப் பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவு

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் சுனாமி பேரலை ஏற்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகி விட்ட போதும் இன்னமும் தங்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை என்று அப்பகுதியின் மீனவர்கள் கூறுகிறார்கள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் சுனாமி தாக்குதல் இடம்பெற்ற போது, நூற்றுக்கணக்கான மக்கள் பலியாயினர், ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்தனர். அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுத்திருந்தாலும், அது தங்களுக்கு முழுமையான பலனைத் தரவில்லை என்றும் மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பல்வேறு பகுதிகளில் கடற்கரைப் பிரதேசத்துக்கு பலமைல்கள் தூரத்துக்கு அப்பால் நிவாரண நடவடிக்கையாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதால், அது தங்களது தொழிலை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இதன் காரணமாக தங்களது வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் தமிழோசையிடம் தெரிவித்தனர்.

மேலும், சுனாமியின் பாதிப்பால் தமது பகுதியை ஒட்டியப் பகுதிகளில் மீன்வளமும் மிகவும் குறைந்து விட்டதாகவும் அதனால் தாங்கள் தொழிலுக்காக கடலில் பல மைல்கள் கடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பில் தமிழோசையின் திருகோணமலை செய்தியாளர் ரட்ணலிங்கம் வழங்கும் பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்


சுனாமியை அடுத்து போரினாலும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்கள்

அஞ்சலி
அஞ்சலி

இலங்கையின் வடக்கே சுனாமியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை யுத்தச் செயற்பாடுகளும் வெகுவாகப் பாதித்திருக்கின்றன.

யுத்தம் காரணமாகக் குடும்பத்தினரைப் பிரிந்து சிறுவர் இல்லங்களில் தஞ்சமடைந்தவர்களில் முல்லைத்தீவு செல்வபுரத்தைச் சேர்ந்த ஞானசேகரம் ஜென்சனும் ஒருவர். அவருக்கு 16 வயது. சுனாமி அவரது பெற்றோரைப் பறித்துச் சென்று விட்டது.

பின்னர் போர் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்து தனது சகோதரர்களையும் பெரியம்மா குடும்பத்தினரையும் பிரிந்த அவர் தற்போது வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அருளகம் சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு சிறுவனாகிய தவபாலச்சந்திரன் அஜந்தன் முல்லைத்தீவு உண்ணாபிலவு கிராமத்தைச் சேர்ந்தவர். பேரலைகள் தாக்கியபோது அவருக்கு வயது 9. சாதாரணக் கல்வியோடு மிருதங்கமும் கற்று வருகின்ற அவர் எதிர்காலத்தில் சிறந்த மிருதங்க வித்துவானாக வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருக்கின்றார்.

இச்சிறுவர்கள் உட்பட சுனாமியால் பாதிக்கப்பட்ட வேறு 200க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியரை வவுனியா சிவன்கோவில் அருளகம் சிறுவர் இல்லத்தினர் பராமரித்து வருகின்றனர்.

நினைவு நாள் நிகழ்வுகள்

5ஆம் ஆண்டு சுனாமி நினைவையொட்டி வவுனியா பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்திற்கு சுடரேற்றி மலர் மாலை சூட்டி இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கப்பட்டது. வவுனியா அந்தணர் ஒன்றியத்தினால் சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டதுடன் யாழ்ப்பாணம் உடுத்துறை மணற்காடு ஆகிய இடங்களிலும் சுனாமி நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.


வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

மழையால் பாதிப்பு
மழையால் பாதிப்பு

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசாங்க நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என அம்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சுமத்துகின்றார்.

இம்மாத நடுப்பபகுதியிலும் இந்த வாரத்திலும் இரண்டு தடவைகள் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் சமார் 80 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கும் அவர் இது தொடர்பாக அரசாங்க அதிபரின் கவனத்திற்கு தன்னால் கொண்டு வரப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கின்றார்.

முதலாவது வெள்ளம் ஏற்பட்டு இரண்டு வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும், இது வரை எந்தவொரு குடும்பத்திற்கும் நிவாரண உதவிகள் கிடைத்ததாக தான் கேள்விப்படவில்லை என பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார்.

மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் இது தொடர்பாக கேட்ட போது அனர்த்த நிவாரண அமைச்சிடமிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்குவதற்கு நிதி உதவி கிடைத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் விபரங்கள் திரட்டப்பட்டு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக உலர் உணவு நிவாரணம் வழங்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதிலளித்தார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates