செய்தியறிக்கை
| ||||||||||||||||||||||||||||||
ஆப்கானில் அமெரிக்காவுக்கு பெரும் இழப்பு ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள தளம் ஒன்றின் மீது புதனன்று பிற்பகல் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்டதாக தெரியவந்துள்ளது. கோஸ்ட் மாகாணத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் முழு நேரமாகவோ, அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ சி.ஐ.ஏவுக்காக பணியாற்றிய 8 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 6 அமெரிக்கர்கள் இதில் காயமடைந்தனர். ஆப்கானிய இராணுவ அதிகாரியாக பணியாற்றிய தமது ஆளே அந்த தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர். பல சோதனைச் சாவடிகளின் ஊடாக கடந்து சென்று, அந்த நபர் உடற்பயிற்சி நிலையத்தில் அந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இராக்கில் கடத்தப்பட்ட பிரித்தானியர்கள் தொடர்பில் குழப்பமான தகவல்கள் இராக்கிய அரசாங்க அமைச்சில் இருந்து 2007 ஆம் ஆண்டில் 5 பிரிட்டிஷ்காரர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் இரானிய தொடர்பு குறித்து குழப்பமான தகவல்கள் வந்திருக்கின்றன. இரானிய புரட்சிகர இராணுவத்தின் உத்தரவின் பேரில் அவர்களை தாம் கடத்தி வந்து இரானில் தடுத்து வைத்ததாக அந்த இரானிய புரட்சிகர இராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டி பிரிட்டிஷ் செய்தித்தாளான ''த கார்டியன்'' செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், அவர்களை விடுதலை செய்வதற்கான சமரச பேச்சுவார்த்தைகளில் உதவிய இராக்கிய அரசியல்வாதி ஒருவர் இரானுக்கு இந்த கடத்தல் விவகாரத்தில் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்று கூறியுள்ளார். இந்த ஐவரில் ஒருவரான பீட்டர் மூர் என்னும் கணினி நிபுணர் எதிர்பாராத வகையில் புதனன்று விடுதலை செய்யப்பட்டார். இவரது மூன்று மெய்ப்பாதுகாவலர்கள் கடத்தி வைக்கப்பட்டிருந்தபோது கொல்லப்பட்டு விட்டார்கள். நான்காவது நபரும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
பின்லாந்த் தாக்குதல்தாரி தற்கொலை பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கிக்கு வெளியே எஸ்போவில் 5 பேரைச் சுட்டுக்கொன்ற ஒரு ஆயுதபாணி தானும் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. ஒரு அங்காடியில் இவர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
அருகில் உள்ள ஒரு அடுக்குமாடிக்கட்டிடத்தில் ஐந்தாவது சடலத்தை பொலிஸார் பின்னர் மீட்டனர். அந்த அங்காடியில் வேலைபார்த்துவந்த அந்தப் பெண், அந்த துப்பாக்கிதாரியின் முன்னாள் தோழி என்று நம்பப்படுகின்றது. அவர்தான் அந்த துப்பாக்கிதாரியின் முக்கிய இலக்கும் என்று பொலிஸார் விபரித்துள்ளனர். ஆயுதபாணியின் சடலம் மற்றுமொரு அடுக்குமாடி கட்டிடத்தில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ள அந்த நபர் 43 வயதான இப்ராஹிம் சுக்பொலி என அடையாளம் காணப்பட்டார். 2007 மற்றும் 2008 இல் நடந்த பரவலான சூட்டுச் சம்பவங்களை அடுத்து துப்பாக்கிக்கான உரிம நிபந்தனைகளை பின்லாந்து பொலிஸார் கடுமையாக்கியயுள்ளனர்.
கடவுளை குறிக்க அல்லா என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம் மலேஷியா நீதிமன்றம் தீர்ப்பு கடவுளைக் குறிக்கின்ற போது அல்லா என்ற சொல்லைபயன்படுத்த கிறிஸ்தவர்களுக்கு அரசியலமைப்பு அடிப்படையிலான உரிமை இருக்கிறது என்று மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இந்த சொல்லை பயன்படுத்துவதற்கான அரசாங்கத் தடையை இந்த தீர்ப்பு நிராகரிக்கிறது.
இது தொடர்பான வழக்கு றோமன் கத்தோலிக்க வார சஞ்சிகையான ஹெரோல்டினால் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டது. இனத்தாலும், மதத்தாலும் பிரிக்கப்படாமல், ஒன்றுபட்ட மலேசியாவை விரும்பும் அனைவருக்கும் இது ஒரு வெற்றி என்று இந்த சஞ்சிகையின் ஆசிரியர் லோரண்ஸ் அண்ட்ரூ பிபிசியிடம் தெரிவித்துள்ளார். கத்தோலிக்க திருச்சபை முஸ்லிம் மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதை ஊக்குவிக்கின்றது என்று அங்குள்ள முஸ்லிம் குழுக்கள் சந்தேகிப்பதாக பிபிசியின் கோலாலம்பூர் நிருபர் கூறுகிறார். இத்தகைய மதமாற்ற நகர்வு மலேசியாவில் சட்ட விரோதமானதாகும்.
|
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น