நாம் ஆட்சிக்கு வந்தால் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்போம் -எதிர்க்கட்சித் தலைவர!
நாம் ஆட்சிக்கு வந்தால் தோட்டத்தொழிலாளர் சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதோடு தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற சம்பளத்தினைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜெனரல் பொன்சேகாவை ஆதரித்து நோர்வூட்டில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 500ரூபா சம்பள உயர்வுக்கோரி தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டம் குறித்து எமக்கு நன்கு தெரியும். ஆனாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட சம்பளம் கிடைக்கவில்லை. இவ்வாறானதொரு நிலையில் நாம் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினைப் பெற்றுக் கொடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து வருகின்றோம். இந்நிலையில் தோட்டப்பகுதிகளில் வீடில்லாத பிரச்சினை பெரும்பிரச்சினையாக உள்ளது. இதனை தீர்க்கின்ற பட்சத்திலேயே இம்மக்கள் நிம்மதியாக வாழமுடியும். இந்நிலையில் தோட்டப்பகுதிகளில் கல்விப்பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாதுள்ளன. இன்று அமைச்சர் சந்திரசேகரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைவரில்லை. மாறாக பஷில் ராஜபக்ஷதான் தலைவராக இருக்கின்றார். பூசா முகாமில் சிறைப்படுத்தப்பட்ட மலையக இளைஞர் யுவதிகளை விடுதலை செய்வது தொடர்பில் கோத்தபாயவிடம் ஏச்சு வாங்கிய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு முன்வந்துள்ளார். அரசாங்கத்துடன் ஒட்டி உறவாடுகின்ற இந்தத் தலைவர்களால் இந்த மக்களுக்கு எவ்வித சேவையும் கிடைப்பதில்லை. நாம் ஆட்சியில் இருந்தபோது மலையகத்தமிழ் மக்களுக்கு பிராஜாவுரிமை வழங்குவதற்கு முன்வந்தபோது அப்போது பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அத்தகையவருக்கு எவ்வாறு மலையகத்தமிழ் மக்கள் வாக்களிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
0 Response to "நாம் ஆட்சிக்கு வந்தால் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்போம் -எதிர்க்கட்சித் தலைவர!"
แสดงความคิดเห็น