தெருவி்ல் உறங்கிய இளவரசர் வில்லியம்- லாரியில் அடிபட இருந்தார்..
இங்கிலாந்தின் அடுத்த மன்னராக கருதப்படும் இளவரசர் வில்லியம், லண்டன் தெருவில் படுத்துறங்கி, லாரி விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார். சென்டர்பாயின்ட் என்ற அமைப்பின் காப்பாளராக வில்லியம் உள்ளார். இது வீடில்லாத ஏழை மக்களுக்கான அமைப்பாகும். கடும் குளிர்காலத்தில் வீடில்லாத ஏழை மக்கள் தெருக்களில் தூங்கும் அவலம், அவர்கள் படும் சிரமங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட, இளவரசர் வில்லியம் மூலம் ஒரு நிகழ்ச்சிக்கு சென்டர்பாயின்ட் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி லண்டன் தெருவில் இரவில் வில்லியமுடன் படுத்துறங்கும் நிகழ்ச்சிக்கு அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதுகுறித்து வில்லியம் கூறுகையில், எப்படித்தான் இந்த கடும் குளிரில் ஏழை மக்கள் தெருவில் படுத்துத் தூங்குகிறார்கள் என்றே எனக்குப் புரியவில்லை. இந்தக் குளிரை என்னால் தாங்க முடியவில்லை. இப்படி ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் பல ஏழை மக்கள் தினசரி இதுபோன்ற ஒரு கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்து வருவதை நினைத்துப் பார்க்கும் போது எனக்கு மிகவும் கவலையாக உள்ளது என்றார். சென்டர்பாயின்ட் அமைப்பின் தலைமை நிர்வாகி செயி ஓபகின் கூறுகையில், இளவரசர் வில்லியம் இந்த நிகழ்ச்சியின்போது மோசமான லாரி விபத்தை சந்திக்கவிருந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார். நாங்கள் தெருவின் ஒரு ஓரத்தில் குழுமியிருந்தோம். அப்போது ஒரு குப்பை லாரி படு வேகமாக வந்தது. நாங்கள் இருந்தது நிச்சயமாக அந்த டிரைவருக்கு தெரிந்திருக்காது. இருப்பினும் லாரி எங்கள் மீது மோதமாமல் போய் விட்டது என்றார். வில்லியமின் தாயாரான மறைந்த இளவரசி டயானாவும் இந்த அமைப்பின் காப்பாளராக முன்பு செயல்பட்டவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தெருவில் படுத்துத் தூங்கும் நிகழ்ச்சியில் வில்லியமுடன் ஓபகின், வில்லியமின் செயலாளர் ஜேமி லோத்தர் பிங்கர்டன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அனைவரும் ஒரு கார்ட்போர்ட் அட்டையை கீழே விரித்து அதில் படுத்துத் தூங்கினர்.
இளவரசர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவாம். ஆனால் குளிரைத்தான் அவர்களால் தடுக்க முடியவில்லையாம்.
0 Response to "தெருவி்ல் உறங்கிய இளவரசர் வில்லியம்- லாரியில் அடிபட இருந்தார்.."
แสดงความคิดเห็น