தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்களின் கருத்துக்கள் பற்றி பா.அரியநேந்திரன் விளக்கம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வெளியிடும் மாறுபட்ட கருத்துக்களாலும் செயற்பாடுகளினாலும் தமிழர்கள் குழப்பமடைந்திருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களினால் தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையானது பேரினவாத செயற்பாடுகளுக்கு தீனிபோடும் நடவடிக்கையாகவே கருத வேண்டியிருப்பதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி - 03, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் - 01, டெலோ - 04 , ஈ.பி.ஆர்.எல்.எப் - 02 என கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரும் கட்சிசாராத நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12பேரும் என மொத்தம் 22பேர் அங்கம் வகிக்கின்றனர். 2004 ஏப்ரல் முதல் இன்றுவரை குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடனும் ஒற்றுமையுடனும் செயல்பட்டு வந்தனர். தற்போது ஜனாதிபதித் தேர்தல் அறிவித்த நாளிலிருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம், செயற்பாடுகள் தன்னிச்சையான முடிவுகளினால் குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன்காரணமாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஒருமித்த தீர்மானம் எடுக்க முடியாதநிலை ஏற்பட்டுவிடுமோ என குழப்பமானநிலை ஏற்பட்டுள்ளதை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும். ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்லது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இருவரில் ஒருவர்தான் தெரிவாவார்கள் இருவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பௌத்த சிங்களவர்கள். இந்நிலையில் வீணான வேண்டத்தகாத செயல்பாடுகளையும் கருத்து முரண்பாடுகளையும் விட்டு தமிழினத்தின் நிரந்தர அரசியல்தீர்வு மற்றும் அரசியல் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு ஒற்றுமையுடன் செயல்படுவதே இன்றைய தேவையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Response to "தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்களின் கருத்துக்கள் பற்றி பா.அரியநேந்திரன் விளக்கம்"
แสดงความคิดเห็น