கல்விக்கு வறுமை தடையல்ல : சுதத் இதற்கொரு முன்னுதாரணம்
“கல்வி கற்பதற்குப் பணம் இல்லை. பணம் மட்டும் இருந்தால் நான் சிறந்த சாதனையாளனாக இருப்பேன். ஆனால் வறுமை எனும் பிணி வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும்போது என்னால் எனது கல்வியைத் தொடர முடியவில்லை” என ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பலருக்கு ஒரு முன்னுதாரணமாய் விளங்குகின்றான் சிறுவன் சுதத் திலக்கரட்ண.
நுவரெலியா மாவட்டத்தின் றம்பொடை எனும் மலைக்குன்றின்மேல் அருளாட்சி நடத்திக்கொண்டிருக்கும் ஆஞ்சேநேயரின் தரிசனம் காணச் சென்ற வேளைதான் சுதத் திலக்கரட்ணவை சந்திக்கும் வாய்ப்பு எமக்குக் கிட்டியது.
வீதியோரத்தில் நின்றுகொண்டு, எதிரே வரும் வாகனங்களை நிறுத்துமாறு பவ்வியமாக சைகை மூலம் கேட்கும் அந்தச் சிறுவன் வல்லாரை விற்றுக் கொண்டிருந்தான். வீட்டு வறுமை காரணமாக கல்வியை இடைநிறுத்திவிட்டு இந்தத் தொழில் செய்வதாக எண்ணி சிறுவனை அண்மித்தோம்.
“ஒரு கட்டுக் கீரை பத்து ரூபா அண்ணா” என்றான் அந்தச் சிறுவன்.
அவனது தொழில் குறித்துக் கேட்க ஆவலாய் இருந்த எம்மிடம் சிறுவன் பரிமாறிய தகவல்கள் இவை:
“நான் பாடசாலைக்கு செல்கிறேன். பாடசாலை சென்று வந்ததும் இங்கு வந்து கீரை விற்கிறேன். கீரை விற்கும் பணத்தில் தான் நான் படிக்கிறேன்.
எனது அப்பா வேறொரு இடத்தில் தனியாக வசிக்கிறார். எனக்கு ஒரு தங்கையும் தம்பியும் இருக்கிறார்கள். தங்கை பாடசாலைக்குச் செல்கிறாள். தம்பி கைக்குழந்தை.
அம்மாவின் பராமரிப்பில் தான் நாம் வாழ்கிறோம். அம்மா கூலித் தொழில் செய்கிறார். அவரது வருமானம் போதாது. அதனால் நான் கீரை விற்கிறேன். எனக்கு பதினொரு வயதாகிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இவ்வாறு கீரை விற்று வருகிறேன்.
இங்கே தெரியும் மலைக்கு அப்பால் மற்றுமொரு மலை இருக்கிறது. அது அடர்ந்த காடு. அந்த காட்டுப்பகுதியில் இந்தக் கீரை விளைகிறது. நான் பாடசாலை விட்டு வீடு வந்ததும் அம்மாவிடம் சொல்லிவிட்டு மலைக்குச் சென்றுவிடுவேன். சில வேளைகளில் எனது தங்கையும் என்னோடு துணைக்கு வருவாள்.
தினமும் சுமார் ஐந்து மணிநேரம் வீதியில் நிற்பேன். ஒருசில நாட்களில் இந்தக் கீரைக் கட்டுக்கள் எல்லாவற்றையும் விற்க முடியாமல் போகும். எப்படியும் 200 ரூபா கிடைக்கும் வரை வீதியில் நின்று கொண்டிருப்பேன். இந்தக் கொஞ்ச நாட்களாக இரவு 8.00 மணிக்குத் தான் வீட்டுக்குச் செல்கிறேன்” என்றான் கவலை தோய்ந்த முகத்துடன்.
வறுமை காரணமாக தன்னுடன் கல்விபயிலும் மாணவர்கள் பலர் பாடசாலையை விட்டு இடைவிலகி கூலித் தொழில் செய்கின்ற போதிலும் வைத்தியராக வரவேண்டும் என்ற ஆவலுடன் கல்வி கற்றுவரும் இந்த மாணவனுக்கு வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.
உலகம் அபிவிருத்திப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. வளர்முக நாடுகளைப் பொருத்தவரை, பெரும்பாலான கிராமங்கள் இன்னமும் பின்தங்கியே காணப்படுகின்றன. அங்கு வாழும் மக்கள் ஒரு வட்டத்துக்குள்ளேயே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எவ்வாறிருப்பினும் அந்தத் தடைகளையும் தாண்டி சாதனை படைத்தோரை உலகம் இன்னும் பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறது. சுதத் திலக்கரட்ணவின் கல்வி ஆர்வம், சாதிக்கவேண்டும் என்ற அடித்தளத்தை அவன் மனதில் உண்டுபண்ணியிருக்கிறது. அதனால் அந்த நோக்கத்தை அடைவதற்காக சுயதொழில் செய்து பிழைத்து வருகிறான்.
வறுமையைக் காரணம் காட்டி பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களுக்கு மாணவன் சுதத் ஒரு நல்ல உதாரணம் என்றால் மிகையில்லை.
0 Response to "கல்விக்கு வறுமை தடையல்ல : சுதத் இதற்கொரு முன்னுதாரணம்"
แสดงความคิดเห็น