| | கடைசிச் செய்திகள் |
டாக்டர் சிவபாலனை நீதிமன்றம் விடுவித்துள்ளது இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதியில் போரின் இறுதி வாரங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் செயல்பட்டுவந்த ஒரே மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர்களில் ஒருவரான சிவபாலன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். வன்னியில் மருத்துவ சேவை வழங்கிவந்த மருத்துவர்கள் அங்கு இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை, அரசின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு கொடுத்தது தொடர்பாக இவர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த பிறகு கைதுசெய்யப்பட்டனர். பிறகு கொழும்பில் நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, விடுதலைப் புலிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தாம் இந்த விபரங்களை அளித்ததாக இந்த டாக்டர்கள் தெரிவித்தனர். அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு மருத்துவர்கள், அக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்டிருந்தனர். ஐந்தாவது டாக்டரான சிவபாலன், முன்பு அரச சேவையில் இருந்திருந்தாலும், பிறகு அவர் புலிகளுக்காக வேலை பார்த்தாக அரசு முன்பு குற்றம்சாட்டியிருந்தது. இன்று கொழும்பு நீதிமன்றம் ஒன்று அவரை வழக்கில் இருந்து விடுவித்துவிட்டதாகவும், ஆனால் அவர் மீண்டும் பணியில் சேர்வது தொடர்பான அலுவல்களை மேற்கொள்வதற்காக இராணுவத்தினருடன் சென்றுள்ளதாகவும், டாக்டர் சிவபாலனின் சகோதரர் சின்னதுரை சிவானந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார். அவர் இன்னும் இரு தினங்களில் வீடு திரும்புவார் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.
27/12/09 செய்தியறிக்கை அமெரிக்காவில் பாதுகாப்பு நடைமுறைகளில் பெரியளவில் மாற்றங்கள் | | அமெரிக்காவில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படுகிறது | அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் சென்றிரங்கவிருந்த ஒரு விமானத்தை வெடிவைத்து தகர்க்க நைஜீரியப் பிரஜை ஒருவர் இரண்டு நாட்கள் முன்பு முயன்றதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு நடைமுறைகளில் பெரிய அளவிலான மாற்றங்களுக்கு அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.பரந்துபட்ட கொள்கை மீளாய்வுகளுக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க தொலைக்காட்சியில் உரையாற்றிய வெள்ளை மாளிகை அதிகாரி ராபர்ட் கிப்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவினால் கண்காணிக்கப்படுவோர் பட்டியல் பயன்படுத்தப்படும் விதம் மீளாய்வு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தாக்குதல் நடத்த முயன்ற உமர் ஃபாரூக் அப்துல் முதல்லப் கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றிருந்தும், அவருக்கு ஏன் அமெரிக்க விசா வழங்கப்பட்டது என்று குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இராக்கில் ஷியா பண்டிகையையை ஒட்டி பலத்த பாதுகாப்பு | | இராக்கில் அஷுரா பண்டிகையின் போது ஷியா முஸ்லிம்கள் | ஷியா இஸ்லாத்தின் மிகப் புனித நகரங்களில் ஒன்றான இராக்கின் கர்பலா நகரில் நடந்துவருகின்ற அஷுரா பண்டிகையின் நிறைவுச் சடங்கில் லட்சக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் பங்குகொண்டு வருகிறார்கள்.கடந்த காலங்களில் இந்த நிகழ்வில் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடந்திருப்பதையிட்டு இவ்வாண்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பொலிசாரும் படையினரும் வீதிகளில் பாதுகாப்பு பணியாற்றிவருகின்றனர். வெடிகுண்டுகளை அடையாளம் காண்பதற்காக சோதனைச் சாவடிகளில் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களின் உடலை சோதனையிடுவதில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக நாட்டின் வடக்கிலுள்ள கிர்குக் நகரில் அஷுரா பண்டிகை ஊர்வலம் சென்றவர்கள் நான்கு பேர் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டில் சிக்கி பலியாகியுள்ளனர்.
இரானில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு-4 பேர் பலி | | இரானில் அரசுக்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் | இரானில் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் கலவரம் மூண்டபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் குறைந்தபட்சம் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள் என அந்நாட்டின் எதிர்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கொல்லப்பட்டவர்களில் எதிர்க்கட்சித் தலைவர் மீர் ஹுசைன் முஸாவியின் உடன்பிறந்தவர் மகனும் ஒருவர் என தலைநகர் டெஹ்ரானிலிருந்து வருகின்ற தகவல்கள் கூறுகின்றன. ஷியா முஸ்லிம்களின் புனித தினமான அஷுராவை முன்னிட்டு லட்சக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் டெஹ்ரான் வீதிகளில் ஆர்ப்பம் செய்தபோது கலவரமும் பெருங்குழப்பமும் ஏற்பட்டதாக சாட்சிகள் கூறுகின்றனர். பொலிசார் பொறுமை இழந்து கூட்டத்தின் மீது நேரடியாகவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சில சாட்சிகள் தெரிவிக்கின்றனர். உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுவதை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இரானின் வேறு பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
காஸாப் பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து தடைகள் | | இஸ்ரேலியத் தடைகளின் காரணமாக பாலத்தீனத்தில் பெரும் பாதிப்புகள் | மத்தியகிழக்கின் காஸாவில் இஸ்ரேல் இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு ஓராண்டு பூர்த்தி அடைகின்ற தற்போதைய நிலையில், பாலஸ்தீன நிலப்பரப்புகளில் இஸ்ரேல் தொடர்ந்து கடைபிடித்துவரும் தடைகள், அங்கே பொது சுகாதார சேவைகள் அழிந்துபோகும் ஓர் அபாய நிலையை உருவாக்கியுள்ளதாக ஐ.நா. மன்றத்தின் நிவாரணப் பணிகள் நிறுவனம் கூறுகிறது.இஸ்ரேலியத் தடைகள் காரணமாக அசுத்தமான தண்ணீர் மூலமாக பரவும் நோய்களால் குழந்தைகள் உயிரிழக்கும் என்ணிக்கை அதிகரித்துள்ளது என அந்நிறுவனம் கூறுகிறது. இஸ்ரேல் ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதும் ஹமாஸ் காசாவின் முழுமையான கட்டுப்பாட்டை 2007ல் கைப்பற்றியதிலிருந்து அங்கே இஸ்ரேல் தடைகளை விதித்துள்ளது. காஸா தாக்குதலை நினைவுகூறும் விதமாக தாக்குதல் நடந்த 22 நாட்களுக்கும் அங்கு நினைவுக் கூட்டங்களை ஹமாஸ் நடத்தவுள்ளது.
பீஹார் மாநிலத்தில் பள்ளிக் கூடம் வெடி வைத்து தகர்ப்பு | | பீஹாரில் மாவோயிஸ்டுகளால் பள்ளிக் கூடம் தகர்ப்பு | இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் மாவோயிய கிளர்ச்சிகாரர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் அரசாங்கப் பள்ளிக்கூடக் கட்டிடம் ஒன்று வெடி வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.அவுரங்காபாத்தில் உள்ள இந்தப் பள்ளிக்கூடத்தை இறுநூறுக்கும் அதிகமான கிளர்ச்சிக்காரர்கள் சூழ்ந்து முற்றுகையிட்டு, பின்னர் அதனை டைனமைட் வெடிவைத்து தகர்த்துள்ளனர் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர். பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் துருப்பினர் இப்படியான பள்ளிக் கட்டிடங்களில்தான் தங்கவைக்கப்படுகிறார்கள் என்று மாவோயியவாதிகள் அரசாங்கத்தினரைக் குற்றம்சாட்டுகின்றனர். பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் நாற்பது பள்ளிக்கூடங்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திமிங்கிலங்களை காப்பாற்றினர் நியூசிலாந்து மக்கள் | | தத்தளித்த திமிங்கிலங்களை மக்கள் காப்பாற்றினர் | நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள ஒரு கடற்கரையில் கரை ஒதுங்கித் தத்தளித்த பைலட் வகைத் திமிங்கலங்கள் நாற்பதுக்கும் அதிகமானவற்றை சுற்றாடல் பாதுகாப்பு ஊழியர்களும் தன்னார்வலர்களுமாக சேர்ந்துக் காப்பாற்றியுள்ளனர்.சுற்றாலா வந்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் டஜன் கணக்கிலானோர், இந்த திமிங்கலங்கள் நீரை விட்டு வெளியே வந்து தத்தளிக்கவிடாமல் பார்த்துக்கொண்டதோடு, தண்ணீரின் அளவு உயர்ந்த நேரத்தில் அவை மீண்டும் கடலுக்குள் நீந்திச்செல்ல உதவியுள்ளனர். அறுபதுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கின, அவற்றில் சுமார் இருபது நிலத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டிருந்தன. திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதன் காரணம் தெளிவடையவில்லை என சுற்றாடல் பாதுகாப்பு பணியாளர்கள் கூறுகின்றனர். செய்தியரங்கம் | | | நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் |
இலங்கையின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருமான சிவாஜிலிங்கம் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமையன்று லண்டனிலிருந்து துபாய் வழியாக சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவரிடம், இந்திய மத்திய அரசின் ஆணையை அடுத்து அவருக்கு இந்தியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக, சென்னை விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக சிவாஜிலிங்கம் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார். இந்தத் தகவலை விமான நிலைய குடியேற்றப் பிரிவு வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன. தஞ்சாவூரில் இடம்பெற்ற ஈழத் தமிழிர் வாழ்வுரிமை மாநாட்டுக்காகவும், தனது மருத்து சிகிச்சைக்காகவும் அவர் இந்தியா வந்ததாகக் கூறுகிறார். சென்னையிலிருந்து துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்ட சிவாஜிலிங்கம், அங்கிருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தனக்கு மனிதாபிமான உதவிகள் கூட வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். திங்கட்கிழமை இந்த விடயம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திடம் தன்னுடைய கடுமையான ஆட்சேபணையை எழுத்துபூர்வமாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சகத்துக்கு தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து அநீதி குறித்தும் தெரியப்படுத்தவுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளருமான சிவாஜிலிங்கம் தமிழோசையிடம் கூறினார்.
நிவாரணப் பொருட்களை விற்று பிற அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் வவுனியா அகதிகள் | | நிவாரணப் பொருட்கள் வியாபாரம் நடக்கிறது | இலங்கையின் வடக்கே வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பவர்கள் தமக்கு நிவாரணமாக வழங்கப்படும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து தமக்குத் தேவையான ஏனைய அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமக்கு வழங்கப் பட்ட பொருட்களை விற்று பிறவற்றை வாங்கி வருவதற்காக கொட்டும் மழையிலும் அவர்கள் வவுனியா நகருக்குச் சென்று திரும்புகின்றார்கள். முகாம்களில் இருப்பவர்கள் தடையின்றி வெளியில் சென்று வரலாம் என்ற வசதியை அரசாங்கம் செய்துள்ளதையடுத்து, அவர்களில் பலர் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருபதாகத் தெரிகிறது. இதுகுறித்து எமது வவுனியா செய்தியாளர் வழங்கும் மேலதிகத் தகவல்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
சுனாமி மீள்கட்டுமானப் பணிகளில் உள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய இலங்கையின் அரசியல் தலைமைத்துவம் ஆர்வம் காட்ட வேண்டும்: டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இந்தியப் பெருங்கடல் சுனாமியின் ஐந்தாம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் என்ற ஊழல் ஒழிப்பு பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இலங்கையில் சுனாமி மீள்கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட பிரச்சினைகளில் இருந்து பாடம் கற்று, யுத்தத்தை அடுத்து வடக்கு கிழக்கு இலங்கையில் மீள்கட்டுமானப் பணிகளில் அவ்விதமான பிரச்சினைகள் மீண்டும் தோன்றுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.சுனாமியை அடுத்த மீள் கட்டுமானப் பணிகள் தொடர்பில் பலவிதமான புகார்கள் உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும், அந்தப் புகார்களுக்கும் கரிசணைககளுக்கும் அதிகாரிகள் உரிய பதில் தராமல் போயிருந்தது, அரசாங்கக் கட்டமைப்பின் மீது பொதுமக்கள் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்துப்போகச்செய்துள்ளது என்று டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை குற்றம்சாட்டுகிறது. சுனாமி மீள்கட்டுமானம் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் அரசியல் தலைமைத்துவம் ஆர்வம்காட்டவில்லை என்றால், யுத்தத்தைத் தொடர்ந்த வடக்கு கிழக்கின் புனர்நிர்மாணப் பணிகளிலும் இதே துரதிருஷ்ட நிலைமை தொடரும் என்றும் டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் எச்சரித்துள்ளது.
ஐந்து ஆண்டுகள் ஆகியும் மட்டக்களப்பு, அம்பாறை சுனாமி அகதிகளுக்கு நிரந்தர வீடுகள் இல்லை - சிறப்புப் பெட்டகம் | | ஐந்து ஆண்டுகளாக அரைகுறை வீடுகளில்... | 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின்போது இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வீடுகளை இழந்த குடும்பங்களில் ஒரு பகுதியினருடைய வீடில்லா பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என பல்வேறு தரப்பிலும் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றது.மட்டக்களப்பு மாவட்டததைப் பொறுத்தவரை சுனாமியினாலும் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டிருந்த வாகரைப் பிரதேசத்தில் மட்டும் தன்னார்வ தொண்டர் அமைப்புகளினால் நிர்மாணிக்கப்பட்டு வந்த 250க்கும் மேற்பட்ட வீடுகள் கைவிடப்பட்டு தொடர்ந்தும் அரைகுறை நிலையில் காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் சுனாமியினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கல்முனை மற்றும் சாய்ந்த மருது பிரதேசங்களில் ஆயிரத்திற்கும் மேற்டபட்ட குடும்பங்களுக்கு இதுவரை நிரந்தர வீடுகள் கிடைக்கவில்லை . இவ்விவகாரம் குறித்த சிறப்பு பெட்டகத்தை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்காலாம்.
ஆடுகளத்தின் எகிறும் தன்மை மோசமடைந்ததன் காரணமாக இந்தியா இலங்கை இடையிலான கிரிக்கெட் ஆட்டம் கைவிடப்பட்டது | | இலங்கை மட்டைவீச்சாளர்களிடம் களத்தில் பந்து எகிறும் தன்மை குறித்து விவாதிக்கிறார் இந்தியாவின் கவுதம் கம்பீர் | இந்தியா இலங்கை அணிகளுக்கிடையிலான ஒரு நாள் ஆட்டத் தொடரின் இறுதியாட்டம் பாதியில் கைவிடப்பட்டுள்ளது.தில்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தின் ஆடுகளம் விளையாட்டைத் தொடருவதற்குரிய நிலையில் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டதை அடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. களத்தின் மோசமான எகிறும் தன்மையால் விளையாட்டு வீரர்களுக்கு அடிபடலாம் என்பதன் காரணமாக இந்த ஆட்டத்தை அத்தோடு நிறுத்திக்கொள்வதாக இந்த ஆட்டத்திற்கான ஐ.சி.சி. பிரதிநிதியான ஆஸ்திரேலியாவின் அலன் ஹர்ஸ்ட் அறிவித்துள்ளார். ஆட்டம் கைவிடப்படவேண்டி வந்தது குறித்து தில்லி கிரிக்கெட் சங்கத்தினர் பார்வையாளர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர். கட்டணம் செலுத்தி ஆட்டத்தைக் காணவந்தவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும் என்றும் அவர்கள் வாக்குறுதி வழங்கினர். தில்லி மைதானத்தின் விக்கெட் கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்தது என்றாலும் கடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின்போதும், ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரின்போதும் இந்தக் களத்தில் பந்து போதிய அளவு எகிறவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதன் எதிரொலியாக பனிக்காலத்து புற்கள் இந்த ஆட்டத்திற்காக ஆடுகளத்தில் பதியப்பட்டிருந்தன. ஆனால் அது களத்தின் எகிறும் தன்மையை மேலும் மோசமாக்கிவிட்டுள்ளது. |
|
0 Response to "டாக்டர் விடுதலை"
แสดงความคิดเห็น