போரினால் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உதவித்தேர்தல் ஆணையாளர் வடக்கு விஜயம்
போரினால் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து ஆராய்வதற்காக உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.சிறிவர்தன திங்களன்று வவுனியா மற்றும் யாழ் மாவட்டங்களுக்கு விஜயம் செய்து நிலைமைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
உதவித் தேர்தல் ஆணையாளருடன் இடம்பெயர்ந்த வாக்காளர்களின் வாக்களிப்பு ஏற்பாடுகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.சண்முகமும் வடபகுதிக்கு விஜயம் செய்துள்ளார்.
வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதியைச் சந்தித்து இடம்பபெயர்ந்த வாக்காளர்களுக்கான வசதிகள் குறித்து பேசியதுடன், இடம்பெயர்ந்த வாக்காளர்களின் விண்ணப்பங்கள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் பின்னர் உதவித் தேர்தல் ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, யாழ் அரச அதிபர் மற்றும் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்களில் 22 ஆயிரம் பேரளவில் மாத்திரமே தாங்கள் இடம்பெயர்ந்துள்ள பகுதிகளில் தமக்கு வாக்களிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனக்கோரி விண்ணப்பித்துள்ளதாகத் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இடம்பெயர்ந்த வாக்காளர்கள் விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி கடந்த வியாழக்கிழமையுடன் முடிவடைந்துள்ளதையடுத்து பெரும் எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வடபகுதியில் வாக்களிக்க முடியாமல் போகக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களின் வாக்களிப்பு வசதிகள் குறித்து எந்த ஓர் அரசியல் கட்சியும் இதுவரையில் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை என்றும் இந்தக் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
0 Response to "போரினால் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உதவித்தேர்தல் ஆணையாளர் வடக்கு விஜயம்"
แสดงความคิดเห็น