சரணடைந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட விவகாரம்: கோத்தபாய மற்றும் தளபதி சவேந்திர சில்வா விசாரிக்கப்படும் ஆபத்து உண்டு - பீரிஸ்
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான றோம் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்து இட்டிருக்கவில்லை. ஆனாலும், போர்க் குற்றங்கள் தொடர்பாக இந்த நீதிமன்றத்தின் முன்பாக இலங்கை நிறுத்தப்படக்கூடிய சாத்தியம் உள்ளது என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.
அவ்வாறு நடைபெறவில்லை என்றாலும் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் 58 வது படையணியின் முன்னாள் தளபதி ஆகியோர் வெளிநாடு செல்லும் சந்தர்ப்பங்களில் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து காணப்படுவதாகவும் பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.
அத்தோடு - இவை அனைத்துக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாதான் காரணம் எனவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
போர்க் குற்றங்கள் தொடர்பாகத் தமக்குக் கிடைக்கும் முறைப்பாடு ஒன்றை அடிப்படையாகக் கொண்டு - அதனையிட்டு விசாரணை நடத்துமாறு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதம விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடுவதற்கான அதிகாரம் ஐ.நா.வுக்கு இருக்கின்றது எனவும் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.
வெள்ளைக் கொடிகளுடன் சரணடையத் தயாராக வந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் அண்மையில் பெரும் சர்ச்சையாகக் கிளம்பியிருந்தது.
முன்னாள் இராணுவத் தளபதியும் இலங்கை அரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடுபவருமான சரத் பொன்சேகா இந்தக் குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு நீதிக்கு முரணான படுகொலைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப்ஸ் அல்ஸ்டன் [Philip Alston] இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் இவ்வாறு கேட்டிருப்பது - இவ்வாறான ஒரு விசாரணைக்கான ஒரு முன்னோடி நடவடிக்கையாகவே உள்ளது எனவும் பீரிஸ் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பொறுப்பாளர் சீ.புலித்தேவன், தளபதி ரமேஷ் ஆகியோர் தமது குடும்பத்தினர் சகிதம் சரணடைவதற்குத் தயாராக வந்த போது சுட்டுக்கொல்லப்பட்டதாக சரத் பொன்சேகா பத்திரிகைப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாகவே இவர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் படையினரிடம் சரணடைந்ததாகவும் சொல்லப்பட்டது.
இருந்த போதிலும், பின்னர் - தான் தெரிவித்ததாக வெளியான செய்தியை பொன்சேகா மறுத்திருக்கின்ற போதிலும், அது தொடர்பாக விளக்கமளிக்குமாறு ஐ.நா. கேட்டுக்கொண்டிருப்பது இலங்கை அரசுக்குப் பெரும் சங்கடமான நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
அனைத்துலக சமூகத்தின் முன்பாக பொன்சேகா நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்ற பிரச்சாரத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ள அதே வேளையில், கோத்தாபாய ராஜபக்சவை அனைத்துலக நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்துவதற்கான முன்னோடி நடவடிக்கையாகவே இது அமைந்திருக்கின்றது என அமைச்சர் பீரிஸ் இப்போது தெரிவித்திருக்கின்றார்.
கோத்தபாய ராஜபக்ச மற்றும் 58 வது படையணியின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் வெளிநாடுகளுக்குப் பயணங்களை மேற்கொள்ளும் போது - சரத் பொன்சேகா தெரிவித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விசாரணைக்கு உள்ளாக்கப்படக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் பீரிஸ் குறிப்பிடுகின்றார்.
0 Response to "சரணடைந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட விவகாரம்: கோத்தபாய மற்றும் தளபதி சவேந்திர சில்வா விசாரிக்கப்படும் ஆபத்து உண்டு - பீரிஸ்"
แสดงความคิดเห็น