இலங்கை-இந்திய இறுதி டெஸ்ட் நாளை மும்பையில் ஆரம்பம்
சங்ககரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3-டெஸ்ட் போட்டித் தொடரில், அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் வெற்றி தோல்வி இன்றி முடிந்தது.
கான்பூரில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 144 ஓட்ட வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி மும்பை பிராபோன் மைதானத்தில் நாளை (புதன்கிழமை) ஆரம்பமாகிறது.
இந்த டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முவுற்றாலும் இந்திய அணி தொடரைக் கைப்பற்றிவிடும். இலங்கை அணியைப் பொறுத்த வரை தொடரை சமன் செய்ய வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இலங்கைக்கு எதிரான 2-டெஸ்ட்களிலும் சதம் அடித்து முத்திரை பதித்த காம்பீர் நாளைய போட்டியில் ஆடவில்லை. தங்கையின் திருமணம் காரணமாக அவர் விலகியுள்ளார்.
இதனால் தமிழக வீரர் முரளி விஜய்க்கு வாய்ப்புக் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷேவாக்குடன் இணைந்து தொடக்க வீரராக அவர் களம் இறங்கலாம். விஜய் ஒரே ஒரு டெஸ்ட் மட்டுமே விளையாடி இருக்கிறார்.
இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் டிராவிட் துணையாக இருக்கிறார். ஷேவாக், தெண்டுல்கர், தலைவர் டோனி, யுவராஜ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
கான்பூர் டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு ஸ்ரீசாந்த் முக்கிய பங்கு வகித்தார். ஒஜாவும் சிறப்பாக ஆடியதால் பந்துவீச்சில் மாற்றம் இருக்காது.
இலங்கை அணியில் முரளிதரன் சிறப்பாக பந்து வீசாதது அந்த அணியின் பவுலிங் பலவீனத்தைக் காட்டுகிறது. மும்பை டெஸ்ட்டில் அவர் சிறப்பாக பந்து வீசுவார் என்று சங்ககரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். சங்ககார-ஜெயவர்த்தன ஜோடிகளின் ஆட்டத்தைப் பொறுத்துத்தான் ஓட்ட குவிப்பும் இருக்கும்.
கான்பூர் டெஸ்டை போலவே நாளைய போட்டியிலும் இந்தியாவின் வெற்றி தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடுகளம் துடுப்பாட்டக்காரர்களுக்கும், பந்து வீச்சாளர்களுக்கும் (50-50) சாதகமாக இருக்கும்.
காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்தப்போட்டி நியோ கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
0 Response to "இலங்கை-இந்திய இறுதி டெஸ்ட் நாளை மும்பையில் ஆரம்பம்"
แสดงความคิดเห็น