ஆசிரியருக்காக வீட்டை தட்சணையாக வழங்கிய மாணவர்கள்

ராசிபுரம்: சொந்த வீடு இல்லாமல் வாடி வந்த தங்களது தமிழாசிரியருக்கு அவரிடம் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து அழகிய வீட்டைக் கட்டி அதை அவருக்கு ஆசிரியர் தினத்தன்று பரிசாக அளித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைபள்ளியில் 31 ஆண்டுகள் தமிழாசிரியராக பணி புரிந்து வந்தவர் புலவர் வெங்கட்டராமன்.
1954-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை இந்த பள்ளியில் அவர் பணி புரிந்தார். 1987-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை ராசிபுரத்தில் உள்ள வாசவி மெட்ரிக் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.
புலவர் வெங்கட்டராமன் எளிய நடையில் தமிழை கற்றுக் கொடுப்பதில் வல்லவராக திகழ்ந்தார். அதுவும் திருக்குறளுக்கு விளக்கம் அளிப்பதில் அலாதி ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
ஆசிரியர் பணியோடு அவர் நிற்க வில்லை. அந்த ஊரின் முன்னேற்றத்திலும் அக்கறை காட்டினார். கல்விப் பணியோடு ஆன்மிகத்திலும் அளவில்லாத ஈடுபாடு காட்டினார்.
ஓய்வு பெற்ற பிறகு ஏழ்மை அவரிடம் குடி கொண்டது. அவரிடமோ குடியிருக்க ஒரு சொந்த வீடு கூட இல்லை.
இப்படி சிரமப்பட்ட நிலையில் வசித்து வந்த அந்த ஆசிரியரின் நிலைமை அவரிடம் படித்த முன்னாள் மாணவர்களுக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து அவருக்கு வீடு ஒன்றைக் கட்டி பரிசாக அளிக்க 2 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டனர் அந்த மாணவர்கள். அன்று மாணவர்களாக இருந்த அவர்கள் இன்று பெரிய தொழிலதிபர்களாகவும், அரசு உயர் அதிகாரிகளாகவும் இருக்கின்றனர்.
அவர்களின் முயற்சியால் இன்று குருசாமிபாளையத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் அழகிய வீடு ஒன்றை கட்டி எழுப்பியுள்ளனர். குரு நிவாஸ் என்றும் பொருத்தமான பெயரை சூட்டியுள்ளனர்.
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி நேற்று இந்த வீட்டின் கிரகப் பிரவேசம் நடந்தது. புலவர் வெங்கட்டராமனும் அவரது மனைவி பொன்னம்மாளும் புத்தாடை அணிந்து வந்து இருந்தனர். விநாயகர் பூஜை, கணபதி ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதை தொடர்ந்து புலவர் வெங்கட்டராமனின் மனைவி பொன்னம்மாள் புதிய அடுப்பில் பால் காய்ச்சினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களை வெங்கட்டராமன் அட்சதை தூவி வாழ்த்தினார்.
விழாவில் முன்னாள் மாணவரும் உத்தரபிரதேச மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யுமான பழனிவேல், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் தனசேகரன், கவிஞர் சுப்பிரமணியம், உள்பட நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளை செங்குந்த சமுதாய கூடத்தில் வீடு ஒப்படைப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெறுகிறது. அப்போது புலவர் வெங்கட்டராமனிடம் வீட்டின் சாவியை முறைப்படி முன்னாள் மாணவர்கள் ஒப்படைக்கின்றனர்.
படைப்புகளை அனுப்ப:
கவிதை , கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:jeya9@truemail.co.th
0 Response to "ஆசிரியருக்காக வீட்டை தட்சணையாக வழங்கிய மாணவர்கள்"
แสดงความคิดเห็น