jkr

காங்.கில் ரஜினியும் இணையலாம்; இளைஞர் காங்.கில் விஜய்க்கு இடமில்லை-ராகுல்


சென்னை: நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் வரவேற்போம் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.

தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: விஜய் உங்களை சந்தித்து பேசினாரே. அவர் காங்கிரஸில் இணைகிறாரா?

ராகுல்: நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியின்பால் ஆர்வம் கொண்டு எனது சகா ஜிதேந்தரை தொடர்பு கொண்டு பேசினார். அது ஒரு சம்பிரதாயமான, நட்புரீதியான சந்திப்புதான். காங்கிரஸ் கட்சியில் அவர் சேருவது பற்றி நாங்கள் பேசவில்லை. காங்கிரஸ் கட்சியில் அயோக்கியர்கள், மோசடி பேர்வழிகள், கடத்தல்காரர்கள் போன்றவர்களை தவிர யார் வேண்டுமானாலும் சேரலாம். நடிகர் விஜய்யும் காங்கிரசில் சேர்ந்தால் வரவேற்போம். ஆனால், 35 வயதை தாண்டியவர் என்பதால், இளைஞர் காங்கிரசில் அவருக்கு வாய்ப்பு இல்லை.

இளைஞர் காங்கிரசில் தலைவராக இதுவரை இளைஞர்கள் இருந்தது இல்லை. 39 வயதை தாண்டிய நானும் இளைஞர் அல்ல. நான் இளைஞர் காங்கிரசில் உறுப்பினர் அல்ல என்றாலும் அதை வலுப்படுத்தும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன்.

ரஜினியும் வரலாம்..

நடிகர் ரஜினிகாந்த் காங்கிரஸ் கட்சியில் சேர விரும்பினால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொள்வோம். அவரை வரவேற்க தயாராக இருக்கிறோம்.

கேள்வி: நாட்டின் இளம் பிரதமராக நீங்கள் வருவீர்களா?

ராகுல்: நமக்கு ஒரு பிரதமர் (மன்மோகன் சிங்) இருக்கிறார். அவர் சிந்தனையில் இளையவர்தான்.

கேள்வி: உங்கள் காதல், காதலி, திருமணம் பற்றி?

ராகுல்: நீங்கள்தான் ஒவ்வொரு நாளும் எனக்கு ஒவ்வொரு காதலியை உருவாக்குகிறீர்கள் (சிரிக்கிறார்). திருமணத்தைப் பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இனிமேல்தான் அதுபற்றி சிந்திக்க வேண்டும்.

கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரசும் சோனியாவும் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

ராகுல்: இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு மாறுபட்ட கருத்து இல்லை.

இலங்கை பிரச்சினையில் மற்ற நாடுகள் தலையிட்ட அளவுக்கு இந்தியா தலையிடவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. இந்தியா முதலில் தலையிட்ட பிறகுதான், மற்ற நாடுகள் இந்த பிரச்சனையில் தலையிட்டன. காங்கிரஸ் கட்சியும், எனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி, தாய் சோனியா காந்தி ஆகியோரும் இலங்கை தமிழர்களுக்காக அதிக அக்கறை செலுத்தி உள்ளனர்.

நானும் இந்த பிரச்சனையில் அக்கறை காட்டாமல் இருந்தது இல்லை. அப்படி இருந்திருந்தால் மதுரையில் எனக்கு இந்த அளவுக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்திருக்க மாட்டார்கள். வயதான பெண்கள் கூட நீண்ட நேரம் காத்திருந்து வரவேற்பு கொடுத்தனர். எனவே இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் மீது தமிழ்நாட்டில் தவறான கருத்து இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

கேள்வி: திமுக-காங்கிரஸ் உறவு எப்படி உள்ளது?

ராகுல்: திமுகவுடன் காங்கிரசுக்கு கருத்து ஒற்றுமை உள்ளது. அனுபவமிக்க மூத்த தலைவரான டாக்டர் கலைஞர் கருணாநிதியை நான் பெரிதும் மதிக்கிறேன்.

பேட்டியின்போது விடுதலைப் புலிகள் தொடர்பான கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை.

கோவையில் ராகுலுக்கு கறுப்பு கொடி-17 பேர் கைது:

இந் நிலையில் இன்று கோயம்புத்தூர் வந்த ராகுல் காந்தி க்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் நீதிமன்றம் முன்பாக ராகுலுக்கு எதிராக தமிழ் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அதே போல ராகுலுக்கு மதுரையிலும், விழுப்புரத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று தனது தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு அவர் டெல்லி திரும்புகிறார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "காங்.கில் ரஜினியும் இணையலாம்; இளைஞர் காங்.கில் விஜய்க்கு இடமில்லை-ராகுல்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates