ஆளுநரின் தலையீடு எம்மை அதிருப்திக்குள்ளாக்குகின்றது: கிழக்கு மாகாண அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
எமது நியாயபூர்வமான பணிகளில் ஆளுநரின் தலையீடு எம்மை அதிருப்திக்குள்ளாக்குகின்றது. இவ்வாறு கிழக்கு மாகாண சபை முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான முழு அமைச்சரவையும் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கைகள் காரணமாக அமைச்சர்களும் மாகாண சபை உறுப்பினர்கள் பெரும்பாலானோரும் ஏமாற்றமடைந்துள்ளனர். நாம் புதிதாக எந்த அதிகாரத்தையும் கேட்கவில்லை. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவும் எமது மக்களின் ஒரு சில எதிர்பார்ப்புகளை மாத்திரமாவது பூர்த்தி செய்யவும் எமக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டுமென்றே கேட்கிறோம். எமது நியாயபூர்வமான பணிகளில் ஆளுநரின் தலையீடு எம்மை அதிருப்திக்குள்ளாக்குகின்றது.
ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரான சிவனேசதுரை சந்திரகாந்தன், அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.
ஹிஸ்புல்லாஹ், துரையப்பா நவரத்னராஜா, எம். எஸ். உதுமாலெப்பை, விமலவீர திஸாநாயக்க ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்தக் கடிதத்தின் பூரண விபரம் வருமாறு:-
கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சரும் அமைச்சர்களுமாகிய நாம் பின்வரும் தகவல்களை தங்கள் கவனத்திற்காகவும் சாதகமான பரிசீலனைக்காகவும் அனுப்பி வைக்கிறோம்.
30 வருடமாக நாட்டில் பரவியிருந்த பயங்கரவாதம் தங்கள் அறிவார்ந்த தலைமைத்துவத்தினால் ஒழிக்கப்பட்டுள்ளது. உடனடியாக நீங்கள் இம்மாகாணத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு சகல முயற்சிகளையும் மேற்கொண்டீர்கள். உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தல்களும் அதன்பின் மாகாணசபைத் தேர்தலும் நடத்தப்பட்டன.
ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதிலும் இம்மாகாண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதிலும் எமக்கு வழிகாட்டும் விளக்காக தாங்கள் இருப்பதற்கு நாம் நன்றியுடையவர்களாவோம். மஹிந்த சிந்தனைக்கேற்ப அபிவிருத்திகளுக்கான எமது அர்ப்பணிப்புகளில் நாம் உறுதியாக இருக்கவேண்டும் என்பதை நாம் முழுமையாகப் புரிந்து கொண்டுள்ளோம். அதேவேளை கடந்த வருட காலத்தில் நாம் பல அசெளகரியங்களை எதிர்நோக்கினோம். நாம் எதிர்கொண்ட பிரச்சினைகள் எமது மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்கான எமது நடவடிக்கைகளில் ஏமாற்றத்தை அளித்தன.
எனினும் நாம் தங்களுக்கு மேலும் பிரச்சினைகளைக் கொடுக்கக் கூடாது எனவும் அது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திலிருந்து தங்கள் கவனத்தைத் திருப்பிவிடும் எனவும் எண்ணினோம். தற்போது யுத்தத்தில் நாட்டிற்கு வெற்றி கிடைத்துள்ளது. எமது மக்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவுள்ளது. அவர்கள் தமது பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வை எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் எமது பணிகளுக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகள் காரணமாக எம்மால் அத்தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாமலுள்ளது. இந்த இடையூறுகள் மாகாணத்தில் வேறு எங்கிருந்தும் இல்லாமல் ஆளுநரிடமிருந்தே வருகின்றன.
எவ்வாறெனினும், றியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம முன்னர் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகவும் பின்னர் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகவும் இருந்தார். தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபை நிர்வாகம் பதவிக்கு வரும் முன்னர் அவர் மிகவும் எதேச்சதிகாரமான ஆளுநராக செயற்பட்டார். ஆனால், தற்போது தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு மேலும் எதேச்சதிகாரமாக செயற்படுவதற்கு அவர் விரும்புகிறார்.
அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு ஆளுநர் நேரடியாக உத்தரவுகளை பிறப்பிக்கிறார். தனது உத்தரவுகளை நிறைவேற்றாவிட்டால் சிறைக்கு அனுப்பி விடுவதாக சிரேஷ்ட அதிகாரிகளை அவர் எச்சரிக்கிறார் (பயறுத்துகிறார்).
அவர் முதலமைச்சரையும் அமைச்சர்களையும் புறக்கணித்துவிட்டு செயலாளர்கள் திணைக்களத் தலைவர்களுடன் தானே கூட்டங்களை நடத்துகிறார். அதனால் அமைச்சர்களுக்கு செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களிடமிருந்து எந்த மரியாதையும் கிடைப்பதில்லை. ஆளுநர் தானே அதிகாரம் மிக்கவர் எனக்கூறி அமைச்சரவையின் தீர்மானங்களை புறக்கணிக்கிறார்.
எவ்வாறெனினும் ஆளுநருடன் இணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் பல தடவை முயன்றபோதிலும் அதில் தோல்வியுற்றோம். அரசியலமைப்பும் மாகாண சபைகள் சட்டம் மாகாணத்தில் தனக்கே அனைத்து அதிகாரங்களையும் அளிப்பதாக அவர் வெளிப்படையாக எம்மிடம் கூறுகிறார்.
தற்போது ஆளுநரின் நடவடிக்கைகள் காரணமாக அமைச்சர்களும் மாகாண சபை உறுப்பினர்களில் பெரும்பாலானோரும் ஏமாற்றமடைந்துள்ளனர். கிழக்கு மாகாண சபையில் உள்ள நாம் புதிதாக கூடுதல் அதிகாரங்களை கேட்கவில்லை, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்தவும் எமது மக்களின் ஒரு சில எதிர்பார்ப்புகளை மாத்திரமாவது பூர்த்தி செய்யவும் எமக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்றே கேட்கிறோம்.
ஆனால், நியாயபூர்வமான எமது பணிகளில் ஆளுநரின் தலையீடு எம்மை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. ஏனைய மாகாண சபைகள் எப்படி இயங்குகின்றன என்பதை அவதானிக்கும்போது எமது பிரச்சினைகள் 13 ஆவது திருத்தச்சட்டத்துடன் அல்ல. மாறாக இம்மாகாணத்தில் ஆளுநர் பதவியை வகிக்கும் குறித்த கனவானுடனேயே எனத் தீர்மானிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இச்சூழ்நிலையில் றியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம கிழக்கு மாகாண ஆளுநராக நீடித்தால் கிழக்கு மாகாண சபையில் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாகிய நாம் எமது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாதவர்களாகி விடுவோம். அதன் விளைவாக அது கிழக்கு மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் அழித்து விடுவதுடன் கிழக்கு மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென தங்களால் எதிர்பார்க்கப்படும் கிழக்கு மாகாண சபை இந்நாட்டின் ஒரு கேலிப்பொருளாகிவிடும்.
இறுதியாக இத்தீவிர பிரச்சினை குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடிய நிலையில் நாம் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சரும் அமைச்சர்களும் கிழக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து றியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரமவை விடுவித்து எம்மை புரிந்துகொள்ளக்கூடிய எம்முடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றக்கூடிய மனிதத் தன்மையுள்ள ஒருவரை இம்மாகாணத்தின் அடுத்த ஆளுநராக நியமிக்குமாறும் தங்களை தாழ்மையுடன் கோருகிறோம்.










0 Response to "ஆளுநரின் தலையீடு எம்மை அதிருப்திக்குள்ளாக்குகின்றது: கிழக்கு மாகாண அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்"
แสดงความคิดเห็น