jkr

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஜனாதிபதி எதற்காக 2 வருடங்கள் பாதுகாத்தார்: ரணில் கேள்வி


புரிந்துணர்வு உடன்படிக்கை பகிரங்கமானது. ஆனால், புலிகளுடனான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தை தான் இரகசியமானது. முடியுமெனில், இந்த இரகசியத்தை அம்பலப்படுத்த வேண்டும். இதன் பின்னரே தேசத்துரோகி யார் என்பதை அறிந்துகொள்ள முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யுத்த நிறுத்த உடன்படிக்கையில் புலிகளுக்கு உயில் எழுதிக் கொடுக்கப்பட்டதாகக் கூறிய ஜனாதிபதி, அதனை இரண்டு வருடங்களுக்குப் பாதுகாத்தது எதற்காக? உண்மைகளை மூடிமறைக்க முற்பட வேண்டாம் என்றும் அவர் சொன்னார்.

கொழும்பு கேம்பிரிட்ஜ் டெரசில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 2006 2007 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் அவரது செயலாளர் லலித் வீரதுங்க கிளிநொச்சிக்கு சென்று பேச்சு நடத்தினார். இவரின் ஓமந்தையூடான பயணத்துக்கு படையினரின் தடைகள் எதுவும் இருக்கவில்லை. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன் பின்னர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர் அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் புலிகளுடன் பேசுவதற்கு அங்கு சென்றிருந்தார். உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இன்றைய அரசாங்கம் புலிகளுடனான இரகசியத் தொடர்புகளைப் பேணி வந்தது. 2002 ஆம் ஆண்டில் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் அது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் உடன்படிக்கை என்று கூறி என்னை தேசத் துரோகி எனக் கூறினர்.

ஐக்கிய தேசியக்கட்சி புலிகளுடன் எந்த சந்தர்ப்பத்திலும் இரகசியத் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை பகிரங்கமானது. அரசாங்கம் காத்து வந்த புலிகளுடனான இரகசியத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பணமும் பரிமாறப்பட்டது. இதனை மங்கள சமரவீர எம்.பி. உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். இவ்வாறு இரகசிய உறவுகளை வைத்திருந்த அரசாங்கம் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கு மக்களின் வாக்குரிமையையும் பறித்தெடுத்திருந்தமை தெரிந்த விடயமாகும்.

இது இவ்வாறிருக்க ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் தலைமையில் கூட புலிகளுடன் அரசாங்கம் இரகசிய பேச்சுக்களை நடத்தி வந்துள்ளது. இவற்றை அரசாங்கத்தினால் மூடி மறைத்து விட முடியாது.

அரசாங்கத்தினால் புலிகளுடன் மேற்கொள்ளப்பட்ட சகல தொடர்புகளுக்கும் இரகசிய பேச்சுக்களுக்கும் அதன் பின்னணிகளுக்கு புலிகள் அமைப்பின் தயா மாஸ்ரர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்ரர் ஆகியோரே சாட்சிகளாக இருக்கின்றனர். அரசாங்கத்துக்கு உதவிய தயா மாஸ்ரரும் ஜோர்ஜ் மாஸ்ரரும் இன்று அரசாங்கத்தின் பார்வையில் தேசத் துரோகிகளாக அல்லாது தேசப் பற்றாளர்களாக பார்க்கப்படுகின்றனர்.

என்னைத் தேசத் துரோகி என்று அரசாங்கம் கூறுகின்றது. அப்படியானால் 2002 இல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்து மறுகணமே அதனை இரத்துச் செய்திருக்க வேண்டுமே. அப்படியானால் அவர் ஏன் அதனைச் செய்யவில்லை. இவ்வாறெல்லாம் தவறிழைத்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இந்நாட்டின் துரோகியாவார்.

இன்று அவர் செல்லுமிடமெல்லாம் யுத்தத்தை தானே தனியாக வென்றதாக மார்தட்டுகிறார். ஆனால் படையினர் இங்கு மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் வருகின்றனர். யுத்தம் வெல்லப்பட்ட பின்னர் படையினருக்கான கௌரவம் அரசினால் அலட்சியப்படுத்தப்பட்டு வருகின்றது.

மக்களும் சொல்லொணாத் துன்பம் அனுபவித்து வருகின்றனர். எனவே தேசத் துரோகி யார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. நான் தேசத் துரோகி இல்லை என்பதை உணர்த்தியிருக்கின்றேன். அதற்கான சக்தி ஜனாதிபதிக்கும் இருக்குமானால் அவர் அதனை நிரூபித்துக் காட்ட வேண்டும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஜனாதிபதி எதற்காக 2 வருடங்கள் பாதுகாத்தார்: ரணில் கேள்வி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates