அத்வானிக்கு நெருக்கடி : 3 மாநில தேர்தலில் தோல்வி எதிரொலி

மராட்டியம், அரியானா, அருணாசலபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மராட்டியத்தில் சிவசேனா-பா.ஜனதா கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
எனவே, எப்படியும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றவேண்டும் என்ற வேகத்தில் இரு கட்சிகளும் கைகோர்த்து களம் இறங்கின. ஆனால், தொடர்ந்து 3ஆவது தடவையாக பா.ஜனதா-சிவசேனா கூட்டணி, ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் தோல்வியடைந்தன.
ராஜ்தாக்கரே தலைமையிலான மராட்டிய நவ நிர்மாண் சேனா, சிவசேனா-பா.ஜனதா கூட்டணியின் வாக்குகளை சிதறச் செய்தது, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு பெரிதும் சாதமாக அமைந்து விட்டது.
அரியானா மாநிலத்தை பொறுத்தவரை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓம்பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், இரண்டு கட்சிகளுக்கும் ஒரு சீட்டு கூட கிடைக்கவில்லை.
சட்டசபை தேர்தலில் உள்ளூர் தலைவர்களின் பேச்சைக் கேட்டு பா.ஜனதா மேலிடம் தனது கூட்டணியில் இருந்து இந்திய தேசிய லோக்தளத்தைக் கழற்றி விட்டுத் தனித்து தேர்தலை சந்தித்தது. இதனால் இரண்டு கட்சிகளுமே தோல்வியைத் தழுவின. இதில் அதிக பாதிப்பு பா.ஜனதாவுக்குத்தான்.
அருணாசல பிரதேசத்தில் பா.ஜனதா வலிமையான கட்சியாகத் திகழவில்லை. தேர்தலுக்கு முன்பாகவே சில முக்கியத் தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகிவிட்டனர். இங்கு 5 தொகுதிகளையாவது கட்சி கைப்பற்றும் என்று பா.ஜனதா தலைவர்கள் கருதினார்கள். ஆனால் 2 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கவில்லை.
இப்படி 3 மாநில தேர்தல்களும் காலை வாரி விட்டிருப்பது, பா.ஜனதாவுக்கு குறிப்பாக அதன் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜ்நாத் சிங்கும், அத்வானியும் பதவி விலகவேண்டும் என்று பலத்த கோஷங்கள் கட்சியில் எழுந்தன. இதனால், பா.ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலையிட்டு நெருக்கடியைத் தணித்தது.
இந்த நிலையில் 3 மாநில தேர்தல் தோல்வி எதிரொலியால் பா.ஜனதாவில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. ராஜ்நாத் சிங்கின் தலைவர் பதவி வருகிற டிசம்பர் மாதம் முடிவடைகிறது.
இதனால் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் எல்.கே. அத்வானிக்குத்தான் சிக்கல். அவருக்கு எதிராக அதிருப்தியாளர்கள் மீண்டும் போர்க்கொடி பிடிக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
0 Response to "அத்வானிக்கு நெருக்கடி : 3 மாநில தேர்தலில் தோல்வி எதிரொலி"
แสดงความคิดเห็น