நடிகர் விவேக்கிற்கு கொடுக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும்: சினிமா பிரஸ் கிளப்

நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் விவேக் அந்த விருதின் தன்மையையும், கவுரவத்தையும் சீர்குலைக்கும் வகையில் பொது நிகழ்ச்சியில் பேசி வருவதை மத்திய அரசுக்கு உரிய ஆதாரங்களுடன் தெரியப்படுத்தி, அந்த விருதை திரும்பப் பெற வேண்டுகோள் விடுப்பது உள்ளிட்ட பல தீர்மானங்களை சினிமா பிரஸ் கிளப் நிறைவேற்றியுள்ளது.
சினிமா பிரஸ் கிளப் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள செக்கர்ஸ் ஓட்டலில் சங்கத்தின் மூத்த உறுப்பினர் ராவணன், தலைவர் சக்திவேல் தலைமையிலும், பொதுச்செயலாளர் எம்.பி.ஆபிரகாம் லிங்கன் முன்னிலையிலும் நடைபெற்றது.
திரையுலகினால் கடுமையான அவமரியாதைக்கு உட்பட்டிருக்கும் பத்திரிகையாளர்களின் உணர்வுகள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்ட முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்
1. நாளிதழ் ஒன்றில் திரையுலகினர் பற்றி வந்த செய்தியால் திரையுலகினர் குறிப்பாக சம்மந்தப்பட்ட நடிகைகள் மன வருத்தத்தை சினிமா பிரஸ் கிளப் புரிந்து கொள்கிறது. இதுதொடர்பாக 7.10.09 அன்று நடிகர் சங்கத்தில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் திரையுலகில் மதிப்பு மிக்க இடத்தில் இருக்கும் சத்யராஜ், சூர்யா, விவேக், சேரன் ஆகியோர் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் இழிவு படுத்தி பேசியது எங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு சினிமா பிரஸ் கிளப் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.
2. எங்கள் உறுப்பினர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இனி நடைபெறும் சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் சம்மந்தப்பட்டவர்கள் தரும் விருந்தோம்பலை ஏற்றுக் கொள்வதில்லை என சங்கம் தீர்மானித்துள்ளது.
3. பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய விவேக், சேரன், சூர்யா, சத்யராஜ் ஆகியோர் தொடர்பான செய்திகள் புறக்கணிப்பது தொடர்பாக அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும், உரிமையாளர்களையும் சந்தித்து வேண்டுகோள் வைப்பது.
4. இந்த பிரச்சனை தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையில் இறங்கியிருக்கும் சென்னை பிரஸ் கிளப், சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் உள்ளிட்ட பத்திரிகையாளர் கூட்டுக்குழு நடவடிக்கைகளுக்கு சினிமா பிரஸ் கிளப் முழு ஆதரவு தெரிவிக்கிறது.
5. நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் விவேக் அந்த விருதின் தன்மையையும், கவுரவத்தையும் சீர்குலைக்கும் வகையில் பொது நிகழ்ச்சியில் பேசியிருப்பதையும், அவருடைய திரைப்படங்களில் ஊனமுற்றோர்களையும், பெண்களையும் இழிவுபடுத்தி வசனம் பேசி வருவதையும் மத்திய அரசுக்கு உரிய ஆதாரங்களுடன் தெரியப்படுத்தி, அந்த விருதை திரும்பப் பெற வேண்டுகோள் வைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 Response to "நடிகர் விவேக்கிற்கு கொடுக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும்: சினிமா பிரஸ் கிளப்"
แสดงความคิดเห็น