jkr

தமிழர் மறுவாழ்வுக்கான நிதியை இலங்கை அரசுக்கு வழங்கக் கூடாது : திருமாவளவன்


தமிழர்களின் மறுவாழ்வுக்காக இலங்கை அரசுக்கு இந்திய அரசு நிதி உதவி வழங்கக்கூடாது. நேரடியாகத் தமிழ் மக்களுக்கு உதவுவதே நல்லது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜபக்ஷவை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதையும், மனித உரிமை மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்காக இலங்கை அரசின் மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சென்னை மெமோரியல் அரங்கம் முன் இன்று காலை (22. 10. 09) பத்து மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பேசிய தொல். திருமாவளவன்,

"நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தும் கோரிக்கைகளே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இதற்கும் சமீபத்திய இலங்கைக்கு பயணம் செய்த இந்திய நாடாளுமன்ற குழு சமர்பித்த அறிக்கைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

நாடாளுமன்ற அறிக்கையில் கூறுப்பட்டது அனைத்தும் உண்மையே. நாடாளுமன்ற குழுவின் பயணத்தைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த கோரிக்கைகளை விடுதலை சிறுததைகள் கட்சி முன்வைக்கிறது.

அதே தருணத்தில் நான் இலங்கைக்குச் சென்று, எம்முடைய தொப்புள் கொடி உறவுகளைச் சந்தித்து, ஆறுதல் கூறியபோது, அங்குள்ளவர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்த கருத்து என்னவெனில், தம்மைத் தமது சொந்த இடத்திலேயே மீள குடியமர்த்தவேண்டும் என்பதே.

எங்களுடைய பயணத்தின் போது இது குறித்து ராஜபக்ஷவிடம் பேசினோம். அதன் விளைவாக இதுவரை 58,000 தமிழர்கள் தங்களின் இருப்பிடத்திற்கு மீள குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

அதே தருணத்தில் இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கிறோம். எக்காரணத்தை முன்னிட்டும், ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுக்கென்று கூறி, இலங்கை அரசுக்கு நிதி உதவி அளிக்கக்கூடாது.

காரணம் அவை யாவும் முறையாக ஈழத்தமிழர்களுக்குச் சென்றடைவதில்லை என்பதை கண்கூடாக நான் கண்டிருக்கிறேன். எனவே நேரடியாகத் தமிழ் மக்களுக்கு உதவுவதே நல்லது. தற்போது அறிவித்துள்ள 500 கோடி ரூபா நிதி உதவியை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கவில்லை" என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தமிழர் மறுவாழ்வுக்கான நிதியை இலங்கை அரசுக்கு வழங்கக் கூடாது : திருமாவளவன்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates