முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் நாளை ஆரம்பம்:முதற்கட்டமாக 1000பேர் குடியமர்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன் முறையாக இன்று 22 ஆம் திகதி மீள்குடியேற்ற நடவடிக்கைகள் வைபவரீதியாக ஆரம்பிக்கப்படுவதாக அம்மாவட்ட அரச அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்தார்.
சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் முதற் கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
அனிஞ்சியன்குளம் அரசினர் பாடசாலை, மல்லாவி மத்திய கல்லூரி, பாலிநகர் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு படிப்படியாக அவர்களது வீடுகளில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் எனவும் முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்தார்.
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
"மீளக்குடியமரும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் அங்கு செய்யப்பட்டுள்ளன. குடிநீர், மின்சார விநியோகம், வீதிப் போக்குவரத்து ஆகியன ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தமது கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் சென்று அவற்றைத் துப்புரவு செய்து, தேவையானால் தற்காலிகத் தகரக் கொட்டில் அமைத்து படிப்படியாக மீளக்குடியமர்வார்கள்.
இம்மக்கள் பலரது வீடுகள் சேதமடையாமல் இருக்கின்றன. பல வீடுகள் கூரைகள் மாத்திரம் சேதமடைந்துள்ளன. இவற்றை அவர்கள் படிப்படியாகத் திருத்தி அமைத்துக் குடியேறுவார்கள். இந்தப்பகுதியில் மக்கள் இல்லாத காரணத்தினால் அங்கு பற்றைகள் வளர்ந்துள்ளன. அவற்றைத் துப்பரவு செய்வதில் அவர்கள் முதலில் ஈடுபடுவார்கள்.
இவர்களுக்கு ஆரம்பத்தில் சமைத்த உணவு வழங்குவதற்கும், வேண்டிய ஏனைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்று ஆரம்பமாகும் நடவடிக்கையின் மூலம் 4450 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள். இது ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மக்கள் படிப்படியாகக் கட்டம் கட்டமாக அந்த மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தின் 2500 குடும்பங்களைச் சேர்ந்த 10,000 பேர் மீளக்குடியமர்த்தப்படவுள்ளார்கள். 30 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பூனகரி, ஜெயபுரம் ஆகிய பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன" என்றார்.
0 Response to "முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் நாளை ஆரம்பம்:முதற்கட்டமாக 1000பேர் குடியமர்வு"
แสดงความคิดเห็น