சவுத் வேல்சிடம் வீழ்ந்தது ஈகிள்ஸ்

உள்ளூர் “டுவென்டி-20′ தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற 12 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த இரண்டாவது போட்டியில் “பி’ பிரிவில் இடம் பெற்ற நியூ சவுத் வேல்ஸ் புளூஸ், டைமண்ட் ஈகிள்ஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த சவுத் வேல்ஸ் அணி கேப்டன் காடிச், பேட்டிங் தேர்வு செய்தார்.
காடிச் அதிரடி:
சவுத் வேல்ஸ் அணி, துவக்க வீரர் ஹியுஸ் விக்கெட்டை விரைவில் இழந்தது. பின்னர் வார்னர், காடிச் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வார்னர் (23) எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்க வில்லை. காடிச் அரை சதம் கடந்தார். இவர் 53 (6 பவுண்டரி 2 சிக்சர்) ரன்களுக்கு அவுட்டானர்.
ஹென்ரிக்ஸ் விளாசல்:
பின்னர் பெய்லி, சபாலாலா பந்து வீச்சில் மிரட்ட, ரன் சேர்க்க திணறியது சவுத் வேல்ஸ் அணி. 3 சிக்சர்கள் விளாசிய ஹென்ரிக்ஸ் (27) ஆறுதல் அளித்தார். ஸ்டீவன் ஸ்மித் (10), பிரட் லீ (0) ஏமாற்றினர். இறுதியில் ரோஹ்ரர் 22 ரன்கள் குவிக்க, நியூ சவுத் வேல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.
பவுலிங் மிரட்டல்:
சவாலான இலக்கை விரட்டிய ஈகிள்ஸ் அணிக்கு, பந்து வீச்சில் நெருக்கடி கொடுத்தது நியூ சவுத் வேல்ஸ். பிரட் லீ வேகத்தில் ரோசோவ் (1) சொற்ப ரன்களுக்கு வீழ்ந்தார். அட்ரியன் மெக்லேரன் (11) ரன் அவுட்டானார். வான்விக் (0), கேப்டன் திப்பென்னர் (7) கிளார்க்கிடம் சரணடைந்தனர். எல்கெர் (2), பெய்லி (8) சோபிக்க வில்லை. 36 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஈகிள்ஸ்.
ரியான் ஆறுதல்:
பின்னர் களமிறங்கிய ரியான் மெக்லேரன் தனி ஆளாகப் போராடினார். இவருக்கு சால்க்விக் (3), டூ பிரீஸ் (7) ஒத்துழைக்க தவறினர். 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார் ரியான். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஈகிள்ஸ் அணி 91 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகனாக நியூ சவுத் வேல்ஸ் அணி கேப்டன் காடிச் தேர்வு செய்யப்பட்டார்.
0 Response to "சவுத் வேல்சிடம் வீழ்ந்தது ஈகிள்ஸ்"
แสดงความคิดเห็น