ஏறாவூரில் மாணவர் திடீர் சுகவீனம்;பூர்வாங்க விசாரணை தேவை : கி.மா. உறுப்பினர் கோரிக்கை

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் பாடசாலை சுகாதார மற்றும் வைத்திய பரிசோதனையின் போது வழங்கப்பட்ட விட்டமின் மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் திடீர் சுகவீனமுற்ற சம்பவம் குறித்து பூர்வாங்க விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும்" என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் மாகாண முதலமைச்சரைக் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில்,
"மாகாண சுகாதார அமைச்சு உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய உயர் மட்டக் குழுவொன்று இதற்காக நியமிக்கப்பட்டு ,விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அக் கடிதத்தில் மேலும்,
"கடந்த 15ஆம் திகதி மாக்கான்மாக்கார் வித்தியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை வைத்திய பரிசோதனையின் போது வழங்கப்பட்ட விட்டமின் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்டவர்கள் மயக்கம்,வாந்தி, வயிற்றுவலி போன்ற திடீர் சுகவீன நிலைக்கு உள்ளாகியதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் காரணமாக பாடசாலை நடவடிக்கைகள் தொடர்ச்சியாகத் தடைப்பட்டுள்ளன.
காலை ஆகாரம் உட்கொள்ளாமல் இம்மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்களே திடீர் சுகவீனமுற்றதாக சுகாதார வைத்திய அதிகாரி கூறினாலும் இதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என பெற்றோர்களும் மாணவர்களும் தெரிவிக்கின்றனர்.
காரணம் காலை ஆகாரம் உட்கொண்டு பாடசாலைக்குச் சென்றிருந்த மாணவர்கள் கூட திடீர் சுகவீனமுற்றுள்ளார்கள். எனவே இது தொடர்பான விசாரணை நடைபெற்று உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும்.
விசாரணைகளின் போது, மாணவர்களுக்கு வேறு மாத்திரைகள் வழங்கப்பட்டனவா? அல்லது காலாவதியான மாத்திரைகள் வழங்கப்பட்டனவா? பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் நேரடியாகவா அல்லது ஆசிரியர்கள் ஊடாகவா மாத்திரைகள் வழங்கப்பட்டன?மாத்திரைகள் உட்கொள்வது தொடர்பாக சரியான அறிவுறுத்தல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதா?- என்பன போன்ற விபரங்கள் அறியப் பட வேண்டும்.
அது மட்டுமல்ல, மாணவர்களின் வாந்தி, இரத்த என்பனவற்றின் மாதிரி அரசாங்க மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதுவரை பகுப்பாய்வுக்கு அவை உட்படுத்தப்பட்டனவா? அவ்வாறு உட்படுத்தப்படாவிட்டால், அதற்கான காரணம் என்ன என்பது கண்டறியப்பட வேண்டும்" என்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் மாகாண முதலமைச்சரைக் கேட்டுள்ளார்.
0 Response to "ஏறாவூரில் மாணவர் திடீர் சுகவீனம்;பூர்வாங்க விசாரணை தேவை : கி.மா. உறுப்பினர் கோரிக்கை"
แสดงความคิดเห็น