செய்தியறிக்கை
![]() | ![]() |
காயமடைந்த ஒருவர் எடுத்துச் செல்லப்படுகிறார் |
பாகிஸ்தான் குண்டுத்தாக்குதல்களில் இருபதுக்கும் அதிகமானோர் பலி
பாகிஸ்தானில் ஆப்கான் எல்லைக்கு அருகே கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இராணுவம் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், வடக்கு பாகிஸ்தானில் நடந்த குண்டுத் தாக்குதல்களில் இருபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் இந்த மாதத்தில் நடந்த குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இருநூறையும் தாண்டிவிட்டது.
திருமண குழு ஒன்று பயணித்த பேருந்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் அதில் பயணித்த 15 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும், இராணுவ தளம் ஒன்றில் தற்கொலையாளி தாக்கியதில் 7 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும், மொஹ்மண்ட் பழங்குடியின பிராந்தியத்துக்கான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாசிரிஸ்தான் நிலைமை குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை
![]() | ![]() |
தெற்கு வசிரிஸ்தான் அகதிகள் |
ஆயுததாரிகளின் முகாம்களை நோக்கி பாகிஸ்தான் இராணுவத்தினர் படை நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பகுதிகளுக்கு செல்ல தமது நிவாரணப் பணியாளர்களால் முடியாதுள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைவர் ஜாக் த மயோ தெரிவிக்கின்றார்.
சுகவீனமுற்றுள்ளவர்களும் காயமடைந்துள்ள பொதுமக்களும் தடையின்றி அவசரமான மருத்துவ வசதிகளைப் பெறுவது அவசியம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அணு திட்டம் குறித்த சர்வதேச உடன்படிக்கையை இரான் ஏற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
![]() | ![]() |
இரானிய அணு ஆலை ஒன்று |
தனது இராணுவம் சாரா ஆய்வு ஆலைகளுக்கு தேவையான யுரேனிய செறிவாக்கலை வெளிநாடுகளில் வைத்துச் செய்வதை விட, அணுசக்தி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கே இரான் முன்னுரிமை கொடுக்கும் என்று அரச தொலைக்காட்சி கூறியுள்ளது.
உத்தேச உடன்படிக்கையை ஏற்பதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணு கண்காணிப்பு மையம் நிர்ணயித்திருந்தது.
இந்த உடன்படிக்கையை அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற ஏனைய தரப்புக்கள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டு விட்டதாகவும், இரானின் தற்போதைய பிரேரணையை அவை ஏற்காது என்றும் தெஃரானுக்கான பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
இராக்கிய அகதிகளை ஐரோப்பிய நாடுகள் திருப்பி அனுப்பியதை ஐ. நா விமர்சித்துள்ளது
![]() | ![]() |
மத்திய இராக்கிய பகுதி இன்னும் ஸ்திரமற்ற, பாதுகாப்பற்ற பிரதேசமாகவே இருந்துவருகிறது.
தஞ்சம் கோரும் அகதிகளுக்கு சர்வதேச பாதுகாப்பு வழங்கப்படுவதென்பது இப்போதும் கருத்தில் கொள்ளப்படவே வேண்டும் என ஐ.நா.அகதிகள் நலன் ஆணையம் கூறியுள்ளது.
இராக்கியர்கள் 44 பேரை பிரிட்டனிலிருந்து திருப்பியனுப்ப அந்நாடு முயற்சித்திருந்த சம்பவமே, தாங்கள் இந்த அறிக்கையை வெளியிடக் காரணம் என்று ஐ.நா. அகதிகள் நலன் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனால் அனுப்பப்பட்டவர்களில் பத்து பேரை மட்டுமே இராக் ஏற்றுக்கொண்டது. மற்றவர்கள் பிரிட்டனுக்கு திருப்பியனுப்பப்பட்டு குடிவரவுத்துறை மையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
![]() | ![]() |
கேப்டன் அலி கப்பல் |
வணங்கா மண் உதவிப் பொருட்கள் வவுனியா முகாம்களுக்குள் செல்கின்றன
இலங்கையின் வடபகுதியில் போர் உக்கிரமடைந்திருந்த வேளையில், இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களால் அனுப்பப்பட்ட உதவிப்பொருட்கள் நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு தற்போது வவுனியாவில் உள்ள முகாம்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
கேப்டன் அலி என்ற கப்பலில் (வணங்காமண் கப்பல்) அனுப்பப்பட்ட இந்த உணவுப் பொருட்கள் முதலில் இலங்கை அரசாங்கத்தால், துறைமுகத்துக்குள் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பப்படவே, இந்த விவகாரத்தில் தலையிட்ட இந்தியா, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக அவற்றை கொழும்புக்கு கொண்டு செல்ல உதவியது.
இருந்தபோதிலும் சில மாதங்கள் வரை அந்தப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்திலேயே தேங்கிக்கிடந்தன.
ஆனால், தற்போது இலங்கை ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அவை துறைமுகத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு தற்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வவுனியாவில் உள்ள முகாம்களுக்கு விநியோகத்துக்காக அனுப்பப்படுவதாக, நிவாரண சேவைகளுக்கான இலங்கை அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.
27 வாகனங்களில் வவுனியாவுக்கு அனுப்பப்படும் இந்தப் பொருட்களில் பெரும்பாலானவை டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என்பதால், அவை கெடாமல் பயன்படுத்தக் கூடிய வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இவை குறித்து அமைச்சர் அமீர் அலியின் செவ்வியை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
மீளக் குடியமர்த்தப்படும் இடம்பெயர்ந்த மக்களின் மனோநிலை - பெட்டகம்
![]() | ![]() |
ஆயினும் அந்த மகிழ்ச்சியின் பின்னே மறக்க முடியாத ஒரு சோகமும் தவிப்பும் ஆதங்கமும் புதைந்து கிடக்கின்றன.
இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொருவருமே ஈடுசெய்ய முடியாத இழப்புக்களுக்கும், ஆறாத சோகங்களுக்கும் ஆளாகியிருக்கின்றார்கள். அவர்களது மனங்களில் ஏற்பட்டுள்ள துயர வடுக்களை வார்த்தைகளால் விளக்குவதென்பது இயலாத காரியமாகும்.
சண்டை நடைபெற்ற இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் அங்கு குடியேற்றுவதற்கு அங்கு மறைந்து கிடக்கும் கண்ணிவெடிகள் பெரும் தடையாக இருப்பதாக அரசாங்கம் கூறிவருகின்றது.
இந்த கண்ணிவெடி பற்றிய பீதியும் அச்சமும் மீளக்குடியமரச் சென்றுள்ளவர்களிடம் பிரதிபலிக்கிறது. இதுகுறித்த பெட்டகத்தை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கை சென்று திரும்பிய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவிக்கு விபரம் வழங்கியுள்ளனர்
இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ய, இலங்கை சென்று திரும்பிய தமிழக எம்.பி.க்கள் குழவினர் இன்று பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து அறிக்கை அளித்தார்கள்.
அப்போது, இலங்கையில் நிலக்கன்னிவெடிகளை அகற்ற இலங்கைக்கு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.
திமுக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களைக் கொண்ட அந்தக் குழு பிரதமருடன் நடத்திய ஆலோசனை குறித்து, திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறும்போது, மக்களை மீள்குடியமர்த்த இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அதற்குப் பிறகு அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம் என்றும் தெரிவித்தார்.
மாலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் எம்.பி.க்கள் சந்தித்துப் பேசினார்கள். அப்போது உள்துறை அமைச்சர் சிதம்பரமும் உடனிருந்தார்.
செல்லிட தொலைபேசி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு இல்லை: அமைச்சர் ஆ.ராசா
![]() | ![]() |
மத்திய அமைச்சர் ஆ.ராசா |
2ஜி என்று அழைக்கப்படும் இரண்டாம் தலைமுறை ஒளிக்கற்றை அலைவரிசை ஒதுக்கீடு புகார் தொடர்பாக, டெல்லியில் உள்ள மத்திய தொலைத் தொடர்புத்துறை அலுவலகத்தில் மத்தியப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் வியாழனன்று விசாரணை நடத்தியிருந்தனர்.
இதுதொடர்பாக, பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட ஆ. ராசா, எல்லா அலைவரிசைகளும் விதிமுறைகளின்படிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு நடவடிக்கையும் பிரதமரின் ஒப்புதலுக்குப் பிறகே முடிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், 2001ஆம் ஆண்டு அலைவரிசை ஒதுக்கீட்டுக்காக வகுக்கப்பட்ட வழிகாட்டு முறைகளில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், அதுதான் தொடர்ந்து பின்பற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.
தான் அமைச்சர் என்ற முறையில் வெளிப்படையாகவே நடந்துகொண்டதாகவும், அதிகாரிகள் யாராவது சில நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, அந்த நிறுவனங்கள் பலனடைந்திருந்தால் அதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ராசா தெரிவித்தார்.
இதனிடையே, ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น