‘திமுக’ இலங்கை பயணம் : உருப்படியான பயணம் அல்ல - விஜயகாந்த்

திருச்சி வந்த அவர் அங்கு பெண்கள் நாட்டின் கண்கள் திட்டத்தின் 80 ஏழைப் பெண் குழந்தைகளுக்குத் தலா ரூ. 10,000 நிதியுதவியை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமரை சந்திப்பதற்காக டெல்லி சென்றேன். பிரதமரை பார்க்க எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலுவுக்கு மட்டும் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள்.
தமிழக நலன்களை கூறு போட்டு விட்டனர்…
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை, காவிரி நீர் பிரச்சினை, கச்சத்தீவு தாரை வார்ப்பு என தமிழகத்தின் நலன்கள் எல்லாம் கூறுபோடப்பட்டு விட்டன.
இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என எம்.பி.க்கள் மனு கொடுக்கலாம். ஆனால் மத்திய உள்துறை அமைச்சரே பிரதமரிடம் மனு கொடுக்கிறார் என்றால் யாரை ஏமாற்ற இந்த வேலை? இலங்கைக்கு எம்.பிக்கள் குழுவை அனுப்புவது கபட நாடகம். அந்த குழுவில் எங்களை அழைத்தாலும் நாங்கள் செல்ல மாட்டோம் என்றார்.
பா.ம.க. தலைமையில் 3-வது அணி அமைக்க போவதாக டாக்டர் ராமதாஸ் கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்றார் விஜயகாந்த்.
மேலும் கூட்டணி குறித்து கேட்ட கேள்விக்கு, தேர்தல் வரட்டும் பார்க்கலாம். இப்போதே அது பற்றிய யூகம், வதந்திகளுக்கு எல்லாம் பதில் தேவை இல்லை.
கூட்டணி அமைத்து மற்ற கட்சிகளுக்கு உழைக்க தேமுதிக தயாராக இல்லை.
தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்வோம் தமிழகத்தில் தேமுதிக தலைமையில் ஆட்சி அமையும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார்.
விருத்தாசலத்தில்..
இந் நிலையில் விருத்தாச்சலம் தொகுதிக்கு இன்று சென்ற விஜயகாந்த் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விருத்தாசலம் தொகுதியை தமிழக அரசு தொடர்ந்து புறகணித்து வருகிறது. பெரிய அளவிலான நலத் திட்டங்களோ, அரசு திட்டங்களோ இந்த தொகுதில் செயல்படுத்தவில்லை.
இத்தொகுதியில் என்னுடைய எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் இருந்து தான் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சாலை சீரமைப்பு மற்றும் சிறுபாலம் அமைப்பதற்கும் இந்த நிதி செலவிடப்படுகிறது.
தமிழக எம்பிக்கள் இலங்கை தமிழர்களின் நிலை குறித்து உண்மை கண்டறிய இலங்கைக்கு இன்று செல்வதாக கூறுகிறார்கள். இது வெறும் நாடகம் தான். இவர்கள் இலங்கைக்கு சென்று வந்தவுடன் வணங்காமுடி கப்பலில் இருந்து நிவாரண பொருட்கள் இறக்கி விட்டார்கள் என்று எப்படி பொய் சொல்லப்பட்டதோ அதே பொய்யை தான் இவர்களும் கூறுவார்கள். இந்த பயணம் உருப்படியான பயணம் அல்ல.
முல்லை பெரியார் அணை பிரச்சனை விவகாரத்தில் திமுக தொடர்ந்து கபட நாடகம் நடத்தி வருகிறது. இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருப்பதும் ஒர் நாடகம் தான்.
எதற்கெடுத்தாலும் கோர்ட் உத்தரவு என்று கூறுகிறார்கள். இதே முல்லை பெரியார் அணையில் 6 அடி உயர்த்தி கொள்ளலாம் என்ற கோர்ட் உத்தரவை ஏன் இவர்கள் முதலில் பின் பற்றவில்லை.
தேமுதிக சார்பில் பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் 25ந் தேதி பிறந்த பெண் குழந்தைகள் 500 பேருக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காப்பீடு வழங்கி வருகிறோம். இது போன்ற பல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார் விஜயகாந்த் .
0 Response to "‘திமுக’ இலங்கை பயணம் : உருப்படியான பயணம் அல்ல - விஜயகாந்த்"
แสดงความคิดเห็น