jkr

தமிழர் இறந்தால் என்ன? இந்திய-இலங்கை உறவு நன்றாக இருந்தால் போதும் என்ற நினைப்போ? : விஜயகாந்த் கேள்வி

திமுக காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்த சில மணிநேரங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

"தமிழகத்திலிருந்து இலங்கைக்குச் சென்று வந்த நாடாளுமன்றக் குழுவால் அங்குள்ள தமிழர்களுக்கு எதுவித நன்மையும் கிடையாது. அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷவுடன் இனித்துப் பேசி, கைகுலுக்கி, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துவிட்டு, நாடு திரும்பியுள்ளது நாடாளுமன்றக் குழு.

இந்தப் பயணம் ராஜபக்ஷவுக்குத்தான் அனுகூலமாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் தமக்குத் தாமே நற்சான்றிதழ் கொடுத்துவிட்டார்கள் என்று அவரை குறை சொல்லக்கூடிய ஐ.நா. சபைக்கும் மற்ற ஜனநாயக நாடுகளுக்கும் ராஜபக்ஷ இதை பயன்படுத்திக் கொள்வார்.

மாணவர்கள் கேள்வி

"இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டமைக்காக, இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் பழிவாங்கப்பட்டு விட்டனர்.

இன்னும் எத்தனை தமிழர்களைக் கொல்லப் போகிறீர்கள்" என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நாடாளுமன்றக் குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை இலங்கை இராணுவம் சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தபோது, போர் நின்றுவிட்டது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதியை உலகத் தமிழர்களின் தலைவர் என்று எப்படி அழைக்க முடியும் என்று மற்றொரு மாணவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தக் கேள்விகளுக்கு நாடாளுமன்றக் குழு பதிலளித்ததாகத் தெரியவில்லை.

"எங்கள் கூட்டணி சார்பில் பிரதமரை சந்தித்து மனு கொடுத்தோம். அதை ஏற்றுக்கொண்டு இலங்கை செல்ல அனுமதி அளித்தார். இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் எதிர்க்கட்சிகளும் இதுபோல் செய்யட்டும்" என்று முதல்வர் கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்திலேயே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒற்றுமை வேண்டும் என்றபோது அதை அன்று சீரழித்தவர் இதே கருணாநிதிதான்.

பிரித்தாளும் சூழ்ச்சி

இவர் என்றைக்கு அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகம் அறியும்.

நாடாளுமன்றக் குழு இங்கிருந்து இலங்கை சென்றுதான் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றால் இலங்கையில் இந்தியத் தூதரகம் எதற்கு?

பேராபத்தில் தமிழர்கள் இருந்தபோது, இந்திய அரசு, மௌனம் சாதிப்பது யாருக்காக? இந்த அரசு எவருக்காக செயற்படுகிறது என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை இந்திய - இலங்கை உறவு நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது" என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தமிழர் இறந்தால் என்ன? இந்திய-இலங்கை உறவு நன்றாக இருந்தால் போதும் என்ற நினைப்போ? : விஜயகாந்த் கேள்வி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates