jkr

கண்ணிவெடிகள் அகற்றும் பணியை துரிதப்படுத்த இந்திய நிபுணர்கள்குழு-பிரதமர் மன்மோகன் சிங் தெரிவிப்பு


வன்னியில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில், நிபுணர்கள் குழுவொன்றை அனுப்புமாறு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை வழங்கியுள்ளார். வடக்கில் யுத்த நடவடிக்கைகள் இடம்பெற்ற மன்னார், கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்ற அங்கு நிலக் கண்ணிவெடிகள் தடையாக இருப்பதையடுத்து அவற்றை துரிதமாக அப்புறப்படுத்தும் வகையிலேயே, நிபுணர்கள் குழுவொன்றை அனுப்ப பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இத்தகவலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.பி.தங்கபாலு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த தமிழக பாராளுமன்ற குழுவினர் கடந்தவாரம் பிரதமர் மன்மோகன் சிங்கை புதுடில்லியில் சந்தித்து பேசினார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.பி.தங்கபாலு தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். எனினும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. மேலும் இக்குழுவினர் முதல்வர் கருணாநிதியிடம் சமர்ப்பித்த அறிக்கையை ஒத்த மற்றுமொரு அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரிடம் கையளித்தனர்.

இதில் இலங்கையில், பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இந்தியா புனரமைப்புப் பணிகளுக்கு உதவ வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இடம்பெயர்ந்தவர்களின் 50 ஆயிரம் பேரை மீள் குடியமர்த்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த கே.பி. தங்கபாலு அங்கு நிலக் கண்ணிவெடிகளை அகற்றுவதிலுள்ள தாமதமே மீள் குடியேற்றப்பணிகள் தாமதமடைய காரணமென எடுத்துக் கூறியுள்ளார். இச்சந்திப்பைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் நிலக் கணணிவெடிகளை அகற்றும் வகையில் நிபுணர்கள் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கு உத்தரவிட்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கண்ணிவெடிகள் அகற்றும் பணியை துரிதப்படுத்த இந்திய நிபுணர்கள்குழு-பிரதமர் மன்மோகன் சிங் தெரிவிப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates