
எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளும் ஒத்துழைப்பது என்று இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இத் தகவலை பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
தென் கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பின் (ஆசியான்) 15ஆவது உச்சி மாநாடு தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங், சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ இருவரும் சனிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
சீனாவை ஒட்டி உள்ள அருணாசலப் பிரதேசத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் சென்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது, எல்லையில் சீன இராணுவம் அத்துமீறியது போன்றவற்றால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டு பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், மன்மோகன் - ஜியாபாவோ சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.
இதற்கிடையே, இந்தியா திரும்பும் முன் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சீனப் பிரதமர் வென் ஜியாபாவோவுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை வெளியிட்டு அவர் கூறியது:
"எல்லைப் பிரச்சினை, இரு நாடுகளிடையே ஓடும் நதிநீர்ப் பிரச்னை, திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு சீனாவின் ஆட்சேபம் ஆகிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்தோம். நான் எனது கருத்துகளை வெளிப்படையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் எடுத்துரைத்தேன்.
ராஜீய முறையிலும் ஒத்துழைப்பு உணர்வோடும் இப் பிரச்சினைகளை அணுகுவது என்று ஒப்புக்கொண்டோம்.
குறிப்பாக, இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னை மிகவும் சிக்கலானது. இது தொடர்பாக அண்மையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்.
இரு நாடுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் உறவுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்று இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்பதையும் அரசியல் ரீதியான நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்த உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் இருவரும் ஏற்றுக்கொண்டோம்.
சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜியசி திங்கட்கிழமை பெங்களூர் வருகிறார். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் இருவரும் விரிவாக விவாதிப்பார்கள்.
தலாய் லாமா விருந்தாளி
திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா இந்தியாவின் கௌரவ விருந்தாளி. மேலும் ஒரு மதத் தலைவர். அந்த அடிப்படையில்தான் அவரை இந்தியா அணுகுகிறது.
அதேநேரத்தில் இந்தியாவில் உள்ள திபெத்திய அகதிகள் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். ஒலிம்பிக் போட்டியின்போது திபெத்திய அகதிகளுக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கைகளே அதற்கு சாட்சி என்று சீனப் பிரதமரிடம் சுட்டிக்காட்டினேன்.
இரு நாடுகளுகும் இடையே ஓடும் நதிநீர் பிரச்சினை, பிரம்மபுத்திரா நதியில் சீனா அணை கட்டும் பிரச்சினை ஆகியவை குறித்தும் இருவரும் விவாதித்தோம். நதி நீர்ப் பிரச்சினை குறித்து ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள இரு நாட்டு நிபுணர் குழு தொடர்ந்து விவாதிக்கும்."
இவ்வாறு பிரதமர் மன்மோகன் தெரிவித்தார்.