இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவை யார் அனுமதித்தது?: ஜெயலலிதா

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடம்பெறாத எம்.பி.க்கள் குழுவை யார் அனுமதித்தது? என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் நிலையை நேரில் கண்டறிய முதல்வர் கருணாநிதிக்கு, இலங்கை அதிபர் ராஜபட்ச அழைப்பு விடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. இதைத்தொடர்ந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.
இந்தக் குழுவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடம்பெறவில்லை. பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் யாரும் இடம் பெறவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஆகிய இவர்களில் ஒருவர்கூட இந்த குழு குறித்தோ அல்லது இலங்கை பயணம் குறித்தோ எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களை யார் தேர்வு செய்தது? இந்த சுற்றுப்பயணத்துக்கு யார் அனுமதி அளித்தது? இந்தக் குழு இந்தியா திரும்பியதும் கருணாநிதியிடம் அறிக்கை அளிக்குமா அல்லது நாடாளுமன்றத்திடம் அறிக்கை அளிக்குமா? உண்மையான முகாம்களை காண இந்த குழுவுக்கு அனுமதி அளிக்கப்படுமா?
இந்திய நாடாளுமன்ற குழு வெளிநாட்டுக்கு அனுப்பும் அதிகாரத்தை மாநில முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி எப்படி தானே கையில் எடுத்துக்கொண்டார் என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
முகாம்களில் அவதியுறும் இலங்கைத் தமிழர்கள் குறித்து அங்கிருந்து வரும் செய்திகள் அனைத்தும், தணிக்கை செய்யப்படுகின்றன. மனித உரிமை நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கூட இவர்களை காண அனுமதிக்கப்படுவதில்லை. இதுதான் உண்மை நிலை. இந்த சோகத்தை கருணாநிதி, கேலிக்கூத்தான நாடகமாக நிகழ்த்துகிறார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவை யார் அனுமதித்தது?: ஜெயலலிதா"
แสดงความคิดเห็น