jkr

இந்தோனேஷியக் கப்பலில் இலங்கைத் தமிழர் தொடர்ந்தும் உண்ணாவிரதம்:இருவர் வைத்தியசாலையில்


இந்தோனேஷியக் கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கப்பலில் உள்ள 250க்கும் அதிகமான தமிழர்கள் புகலிடம் கோரி ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினாலும் அவர்களை ஏற்க ஆஸ்திரேலிய மறுத்து வருகின்ற நிலையில் இந்த உண்ணாவிரதம் தொடர்கிறது.

பிந்திக் கிடைத்த செய்தி

உண்ணாவிரதப் போராட்டத்தில், ஈடுபட்டுள்ள இலங்கையர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்று முன் கிடைத்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்னர், அவர்களுடன் இணக்கப்பாடு ஒன்றை காண்பது தொடர்பில் இந்தோனேஷிய கடற்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இதற்கிடையில் கப்பலில் உள்ள அகதிகள் தற்போது இரண்டாகப் பிரிந்துள்ளதாக இந்தோனேஷியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்கேனும் ஓர் இடத்தில் குடியமரும் திட்டத்துடன் ஒரு குழுவும், வாக்குவாதங்களில் ஈடுபட்டு அவுஸ்திரேலியா செல்லும் திட்டத்தைத் தொடர விரும்பும் இன்னொரு குழுவுமாக அவர்கள் பிரிந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் உள்ள குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கி வருவதாக இந்தோனேஷியாவின் பான்டென் மாகாணத்தின் குடிவரவுத் துறை தலைமை அதிகாரி ஹரி புருவான்டோ தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்கு ஆஸி. .தஞ்சமளிக்க வேண்டும் : ஐநாஅகதிகள் பேரவை

தமது நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அகதிகளை ஏற்றுக்கொள்ளாமை தொடர்பில் ஒரு நாடு என்ற அடிப்படையில் அவுஸ்திரேலியாவுக்கு மன்னிப்பு வழங்க முடியாது என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான பேரவை தெரிவித்துள்ளது.

தற்போது இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 260 இலங்கையர்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் இதனை தெரிவித்துள்ளது.

அதன் பிரதிநிதி ரிச்சட்டவல் கூறுகையில்,

"இந்தோனேஷிய அரசாங்கம் தடுத்து வைத்துள்ள இலங்கையர்களின் விபரங்களைத் திரட்டுமானால் அவர்களுக்கு உதவி செய்ய ஐக்கிய நாடுகள் தயாராக இருக்கின்றது.

அகதிகள் கோரும் பட்சத்தில் அவர்களை மீள குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும். அவுஸ்திரேலியாவிடம் அவர்களில் சிலரை ஏற்க கோரப்படும்.

அதேவேளை, குடிவரவு கொள்கையின் தெளிவின்மை மற்றும் இலகு தன்மை என்பன அகதிகளின் வருகையை அதிகரிக்கலாம்.

அவுஸ்திரேலியாவே அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்குச் சரியான பாதுகாப்பு கொடுக்கும் நாடாக நான் கருதுகிறேன். எனினும் அரசியல் தஞ்சம் வழங்கும்போது அவதானமாக இருக்கவேண்டும்.

தற்போது இந்தோனேஷிய கடற்கரையில் நங்கூரமிட்டிருக்கும் கப்பலிலுள்ள இலங்கையர்களுக்கு மன்னிப்பு வழங்குவதே பொருத்தமானதாக இருக்கும். அதுவே அவர்களுக்கான பாதுகாப்பாகவும் இருக்கும்" என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இந்தோனேஷியக் கப்பலில் இலங்கைத் தமிழர் தொடர்ந்தும் உண்ணாவிரதம்:இருவர் வைத்தியசாலையில்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates