jkr

செய்தியறிக்கை


பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் தற்கொலைத் தாக்குதல்கள்- பாகிஸ்தான் முழுவதும் யுத்த வலயம் என்கிறது தாலிபன்

பாகிஸ்தான் தாலிபன் உறுப்பினர்
பாகிஸ்தான் தாலிபன் உறுப்பினர்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல்களில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்களில் ஒன்று இஸ்லாமிய சட்ட பீட கட்டிடத்தினுள் இடம்பெற்றுள்ளது.

தாமே இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக பி.பிசிக்கு கருத்து தெரிவித்த தலிபான் பேச்சாளர் ஒருவர், பாகிஸ்தான் முழுமையும் தற்போது யுத்த வலயமாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

கிளர்ச்சியாளர்கள் வலுவாக நிலைகொண்டுள்ள முழுமையான பிரதேசத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கோடு தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்டுள்ள பாரிய படை நடவடிக்கையை எதிர்கொண்டு ஆயுததாரிகள் கடுமையான மோதல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.


அம்பானிகள் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில்

முகேஷ் அம்பானி, அனில் அம்பானி
முகேஷ் அம்பானி, அனில் அம்பானி
உலகின் பெரும் பணக்காரர்களில் இருவரான இந்தியாவின் அம்பானி சகோதரர்களுக்கு இடையிலான சண்டை தற்போது இந்திய உச்சநீதிமன்றத்தை எட்டியுள்ளது.

இந்தியாவின் இயற்கைவாயுப்படுகைகளில் இருந்து பெறப்படும் எரிவாயுவுக்கான விலையை நிர்ணயிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

சந்தை விலையை விட தனது நிறுவனத்துக்கு குறைந்த விலையில் எரிவாயுவை விற்பதற்கு இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தை தலைமைதாங்கி நடத்தி வரும் தனது சகோதரர் முகேஷ் அம்பானி முன்பு ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் அவர் அந்த ஒப்பந்தப்படி தற்போது நடக்கவில்லை என்றும் முகேஷிடமிருந்து விலகியுள்ள அனில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் எரிவாயுவின் விலையை நிர்ணயிக்கும் உரிமை இந்திய அரசுக்கு மட்டுமே இருக்கும் நிலையில், இந்த மோதல் மூலம் இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் நிலவும் குறைபாடு கள் வெளியில் வந்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.


இந்தியாவின் மேற்கு வங்கத்தில் தொடரும் மாவோயிய தாக்குதல்கள்

மாவோயிய போராளிகள்
மாவோயிய போராளிகள்
பட்டப் பகலில் ஒரு காவல் நிலையத்தையும் ஒரு வங்கியையும் மாவோயிய கிளர்ச்சியாளர்கள் தாக்கியுள்ளதாக இந்தியாவின் மேற்கு வங்க மாநில அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர். இதில் ஒரு போலிஸ் அதிகாரி கொல்லப்பட்டுள்ளார், மற்றொறருவர் கடத்தப்பட்டுள்ளார்.

மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள், கிளர்ச்சியாளர்கள் வங்கியை கொள்ளையடித்துச் சென்றதுடன், காவல் நிலையத்தில் இருந்து ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் எடுத்துச் சென்றாதாக கூறியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கு வங்க அரசு எடுக்கத் துவங்கியதில் இருந்து, நடைபெற்ற மிகவும் துணிகரமான மாவோயிய தாக்குதல் இது என்றும் அதிகார்கள் குறிப்பிடுகின்றனர்.


இரானில் அதிபர் தேர்தலைத் தொடர்ந்து அமைதிக் குலைவை ஏற்படுத்தியதாக இருவருக்கு சிறைத் தண்டனை

கியன் தஜ்பக்ஷ்
கியன் தஜ்பக்ஷ்
இரானில் ஜூன் மாதம் நடந்த சர்ச்சைக்குள்ளான அதிபர் தேர்தலைத்தொடர்ந்து அங்கு உருவான அமைதிகுலைவுக்கு காரணமாக விளங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நாட்டின் அரசியல் மறுசீரமைப்பு இயக்கத்திற்கு நெருக்கமான இரண்டு முக்கியஸ்தர்களுக்கு நீண்டகால சிறைதண்டனை விதித்து அந்நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இரானிய அமெரிக்க கல்வியாளர் கியன் தஜ்பக்ஷுக்கு 12 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை விதிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்ததாக அரசால் நடத்தப்படும் செய்தி நிறுவனமான இர்னா தெரிவித்துள்ளது.

மசூத் பஸ்தானி என்கிற ஊடகவியலாளருக்கு ஆறு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், எதிர்கட்சித்தலைவர் மிர் ஹுசைன் மௌசாவி நாட்டின் புகழை குலைத்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ள இரானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர், அவர் மீது வழக்கு தொடுக்கப்படவேண்டும் என்று கோரியுள்ளனர்.

செய்தியரங்கம்
ஜசிதரன் மற்றும் திசைநாயகம் (ஆவணப்படம்)
ஜசிதரன் மற்றும் திசைநாயகம் (ஆவணப்படம்)

"ஜசிதரனையும் அவரது மனைவியையும் விடுதலை செய்ய தயார்"- இலங்கை அரசு

அரசாங்கத்தின் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கோடு சதித் திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள, நோர்த் ஈஸ்டன் என்ற சஞ்சிகையின் அச்சீட்டாளரான வெற்றிவேல் ஜசீதரனையும் அவரது மனைவியையும் நிபந்தனையின் பேரில் விடுதலை செய்ய தயாராகுமாறு இலங்கையின் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது, பயங்கரவாத புலனாய்வு பணியகத்திற்கு எதிராக, பிரதிவாதிகளால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவினை அவர்கள் விலக்கிக் கொண்டால் பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை விலக்கிக் கொள்ள சட்டமாதிபர் தயாராகவுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்துக்கு பதிலளித்த பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி, முதலில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரத்தை விலக்கிக்கொண்டு குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ததன் பின்னர் தமது அடிப்படை உரிமை மனுவை விலக்கிக்கொள்வதாகக் கூறினார்.

இதன்போது, குறிக்கிட்ட நீதிபதி இரண்டு தரப்பினரும் இணக்கங்கண்டு வழக்கினை விலக்கிக் கொள்ள முன்வரவேண்டும் எனவும் எதிர்வரும் 26ம் திகதி அவர்கள் தமது தீர்மானத்தை அறிவித்ததன் பின்னர் பிரதிவாதிகளை விடுவிப்பது குறித்த தமது முடிவை அறிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

இதே நோர்த் ஈஸ்டன் சஞ்சிகையின் ஆசிரியர் ஜே.எஸ் திஸ்ஸநாயகத்திற்கு கொழும்பு மேல்நீதிமன்றம் அண்மையில் 20 வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.


டெல்லி அருகே தொழிலாளி கொலை விவகாரம் - கார் உதிரிப்பாக தொழிற்சாலைகளில் பணிகள் முடக்கம்

இந்தியாவில் தயாராகும் சுசுக்கி வகை கார்
டெல்லியை ஒட்டியுள்ள ஹரியாணா மாநிலத்தின் குர்காவ்ன் – மனேசர் – பவல் பகுதியில், தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டதை எதிர்த்து நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், அந்தப் பகுதியில் தொழில் நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரை கடுமையாகத் தாக்கினார்கள். போலீஸ் பாதுகாப்புடன் ஆலைக்குள் வந்த நிலையிலும் அவர் தாக்குதலுக்கு உள்ளானார். அந்த நிறுவனத்தின் ஊழியர்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தொழிலாளர்களில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் அந்தத் தொழிலாளி கொல்லப்பட்டதாக நிர்வாகம் கூறுகிறது. ஆனால், ஊதிய ஊயர்வு கோரிப் போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் துவக்க முற்பட்டதால், நிர்வாகம் குண்டர்களை வைத்து தங்களைத் தாக்கியதாக தொழிலாளர் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

தொழிலாளியின் மரணத்துக்கு நிர்வாகம் தான் காரணம் என்று கூறி, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

அந்தப் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளின் ஊழியர்களும் அதில் கலந்துகொண்டார்கள். அதில், ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவன ஊழியர்களும் பங்கேற்றார்கள். அதனால் பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.


"ஆப்கனில் அதிபர் தேர்தலுக்கான மறு வாக்குப்பதிவு நவம்பர் 7 இல்" - ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆப்கன் அதிபர் ஹமீட் கர்சாய், ஐ.நா தூதுவருடன்
ஆப்கன் அதிபர் ஹமீட் கர்சாய், ஐ.நா தூதுவருடன்
ஆப்கானிய அதிபர் தேர்தலுக்கான மறு வாக்குப் பதிவு வரும் நவம்பர் மாதம் 7 ஆம் தேதி நடைபெறும் என்று ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற குழு தெரிவித்திருந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஆகஸ்ட் தேர்தல் குறித்து வெளி வந்த ஆரம்ப கட்ட முடிவுகளில் கர்சாய்க்கு 55 வீத வாக்குகள் கிடைத்ததாகவும், அவரின் பிரதான எதிர் வேட்பாளரான அப்துல்லா அப்துல்லாவுக்கு 28 சதவீத வாக்குகள் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் 210 ஒட்டுச் சாவடிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படக் கூடாது என்று ஐ நா அங்கீகாரம் கொண்ட தேர்தல் புகார் அமைப்பு உத்திரவிட்டதன் பிறகு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கர்சாய் பெற்ற மொத்த வாக்குகளில் எண்ணிக்கை 50 வீதத்தை விட குறைவாகவே இருந்தது. இதனால் மறு வாக்கு எண்ணிக்கைகு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆப்கான் தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற்றது என்பது தொடர்பாக சர்வதேச சந்தேகங்களும் அழுத்தங்களும் அதிகமான நிலையில் இன்றைய அறிவிப்பு வந்துள்ளது. முதலில் தேர்தல் வாக்குப் பதிவுகளில் நடைபெற்றதாக்க கூறப்படும் மோசடிகளைப் புறம் தள்ளிய அதிபர் ஹமிட் கார்சாய் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.


உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை புறக்கணிப்பதாக அ.இ.அதிமுகவும் மதிமுகவும் அறிவிப்பு

வைகோ மற்றும் ஜெயலலிதா
வைகோவுடன் ஜெயலலிதா
கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கிற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிக்கபோவதாக அ.இ.அதிமுகவும் அதன் கூட்டணிக்கட்சியான மதிமுகவும் அறிவித்திருக்கின்றன.

இலங்கை மற்றும் மலேசியாவில் தமிழர்களின் அவல நிலையில் வாடும்போது உலகத்தமிழ் மாநாட்டிற்கு அவசியமென்ன என்று வினவும்
அ.இ. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் உலகத்தமிழ் மாநாடு நடத்த அனுமதி மறுத்ததாலேயே கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்துகிறார், 2011ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டே தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவே அவர் இப்படி மாநாடு நடத்துகிறார், எனவே தனது கட்சி அதனைப் புறக்கணிப்பதாகக் கூறியிருக்கிறார்.

அதைப்போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தனது கட்சியும் மாநாட்டைப் புறக்கணிக்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இரண்டுநாட்களுக்கு முன்புதான் அனைத்து சட்டமன்றக் கட்சித்தலைவர்களுக்கும் மாநாட்டில் பங்கேற்குமாறு முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார்.

உலகத்தமிழ் மாநாடு ஒரு கட்சி சார்பான நிகழ்வாக இல்லாவிட்டாலும், கடந்த காலங்களிலும், எம்.ஜீ.ஆர். மற்றும் ஜெயலலிதா முதல்வர்களாக இருந்தபோது நடத்தப்பட்ட மாநாடுகளில் எதிர்க் கட்சித்தலைவராக இருந்தும் உரிய அழைப்பில்லை எனக்கூறி கருணாநிதி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates