தமிழக அரசியல் கட்சிகள் குழு இன்று யாழ்ப்பாணம் செல்கிறது

ஐந்து நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமை யில் வந்துள்ள இக்குழுவில் எம்.பி.க் களான என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கவிஞர் கனிமொழி, ஏ.கே.எஸ். விஜயன், ஜே.எம். ஆரூண், டி.கே.எஸ். இளங்கோவன், தொல். திருமாவளவன், கே.எஸ். அழகிரி, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இடம் செய்துள்ளன.
யாழ். பல்கலைக்கழகத்துக்கும் இவர்கள் விஜயம் செய்யவுள்ளனர். அகதி முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு வேலனையில் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களை இவர்கள் சந்தித்துப் பேசுவர். இதற்கான ஏற்பாடுகளை சமூக சேவைகள், சமூக நலன்புரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்துள்ளார். இன்று மாலை வவுனியா செல்லும் தமிழக அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் குழு மெனிக்பாம் முகாமையும் பார்வையிடவுள்ளது.
நாளை திங்கட்கிழமை நுவரெலியாவுக்குச் செல்லும் இந்தக் குழுவினருக்கு அங்கும் பிரமாண்டமான வரவேற்பளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான கலந்துரையாடல்களிலும் இவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். பெருந்தோட்டத்துறை மக்களையும் இவர்கள் சந்திக்கவுள்ளதாக தெரியவருகிறது.
13 ஆம், 14 ஆம் திகதிகளில் இவர்கள் கொழும்பில் தங்கியிருந்து அரசியல் கட்சிப் பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளனர். நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர எம்.பி ஆகியோரைச் சந்திக்கவுள்ளனர்.
14 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகமவைச் சந்திக்கும் இவர்கள் அன்று மாலை தமிழகம் திரும்பவுள்ளனர். இதேவேளை கிழக்கு மாகாணத்துக்கான தங்களது விஜயத்தை இவர்கள் ரத்துச் செய்துள்ளனர்.
0 Response to "தமிழக அரசியல் கட்சிகள் குழு இன்று யாழ்ப்பாணம் செல்கிறது"
แสดงความคิดเห็น