தமிழக இலங்கை அகதிகளுக்கு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு : முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் நிலை மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆராய்ந்து, எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
அறிக்கையின் அடிப்படையில், இலங்கை அகதிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக, 12 கோடி ரூபா நிதியை ஒதுக்கீடு செய்யுமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாக வந்த தகவலையடுத்து, தலைமைச் செயலகத்தில் நேற்று காலை சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி நடத்தினார்.
முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஸ்டாலின், நிதியமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, நிதித்துறை செயலர் ஞானதேசிகன், பொதுத்துறை செயலர் ஜோதி ஜெகராஜன், உளவுத் துறை ஐ.ஜி., ஜாபர்சேட் உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். காலை 10.45 மணியளவில் ஆரம்பமான கூட்டம், 11.30 மணி வரை நடந்தது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிருபர்களிடம் கூறுகையில்,
"தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 115 அகதி முகாம்கள் உள்ளன. அதில், 19 ஆயிரத்து 340 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 241 பேர் வசித்து வருகின்றனர். அரசு அனுமதியுடன், முகாம்களுக்கு வெளியே 11 ஆயிரத்து 288 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 802 பேர் தங்கியுள்ளனர்.
அகதிகளை, தமிழர்களாக பார்க்க வேண்டும் என்று கூட்டத்தில் முதல்வர் கூறினார். அவர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக, 12 கோடி ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன், மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களுக்கு நேரில் சென்று, அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிய வேண்டும் என்றும், அவர்களுடைய தேவையைக் கேட்டு அதை அறிக்கையாக வரும் 10ஆம் திகதிக்குள் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே, அரசு அளித்த நலத்திட்ட உதவிகள், அகதிகளைச் சென்றடைந்ததா என்பதையும் கேட்டறிந்து, அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
அறிக்கையின் அடிப்படையில், 12 கோடி ரூபா நிதியை செலவழிப்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும். அகதிகளுக்கு தேவையான வசதிகளைச் செய்திட 16 கோடி ரூபாவுக்கான திட்டம், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அகதிகளுக்கான நிதியை, மத்திய அரசு தான் தர வேண்டும்.
தமிழக அரசு திட்டத்திற்கு இன்னும் மத்திய அரசு அனுமதி தரவில்லை. எனினும், மத்திய அரசை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் நடப்பு பட்ஜெட்டில் ஐந்து கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. தற்போது, 12 கோடி ரூபாவை முதல்வர் ஒதுக்கியுள்ளார்" என்றார்.
0 Response to "தமிழக இலங்கை அகதிகளுக்கு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு : முதல்வர் உத்தரவு"
แสดงความคิดเห็น