'வடக்கின் வசந்தம்' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் 5 சேவை நிலையங்கள்

வடக்கின் வசந்தம்' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மக்கள் வங்கியின் ஐந்து சேவை நிலையங்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டன.
மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யு. கருணாஜீவ உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். 'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் புலோலி, கோப்பாய், கல்வியங்காடு, நாவலர் சந்தி, பண்டத்தரிப்பு ஆகிய இடங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட மக்கள் வங்கியின் சேவை நிலையங்களையும், காங்கேசன்துறை வீதியில் அமைக்கப்பட்ட தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் ஆகியவற்றையும் மேற்படி அதிகாரிகள் குழு திறந்து வைத்தது.
காலை 8 மணிக்கு புலோலியில்முதலாவது திறப்பு விழா நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து ஒவ்வொரு சேவை நிலையமாகத் திறந்துவைக்கப்பட்டன. புலோலியில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைவர் கருணாஜீவ, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு குளிரூட்டி பொருத்துவதற்காக ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான நிதியினை வழங்கினார்.
அதேவேளை நாவலர் வீதயில் திறந்து வைக்கப்பட்ட சேவை நிலையத்தில் வைத்து, யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் 8ஆம் விடுதியை நவீனமயப்படுத்த 5 லட்சம் ரூபாய் நிதியினை மக்கள் வங்கியின் தலைவர், யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி சிவன்சுதனிடம் வழங்கினார்.
ஓவ்வொரு சேவை நிலையத்திலும் வாடிக்கையாளர்களால் வைப்பிலிடப்பட்ட வைப்பை பெற்றுக் கொண்ட மக்கள் வங்கியின் தலைவர், வாடிக்கையாளர்களுக்கு பரிசில்கள் வழங்கினார். மக்கள் வங்கியின் தலைவர் சேவை நிலையங்களில் உரையாற்றும் போது,
"1982 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மக்கள் வங்கியினால் உரிய சேவையினை வழங்க முடியாமல் போய்விட்டது. அதற்கு நாங்களோ, நீங்களோ காரணமல்ல. 36 ஆண்டு கால யுத்தம் தான் காரணம். தற்போது அந்தக் குறையினைத் தீர்ப்பதற்காக சேவை நிலையங்களை இன்று திறக்கின்றோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நாம் தவறவிட்ட சேவைகளையும் அனைத்தையும் வழங்குவோம்.
சேவை நிலையங்களில் பணிபுரிவதற்காக 42 உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்துள்ளோம். மேலும் 25 பேரை இணைக்கவுள்ளோம். யாழ்ப்பாணம் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் ஒரு மாவட்டம். தென் பகுதியில் பெரும்பாலான வைத்தியர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். அதனைவிட பல பெரிய பதவிகளிலும் தமிழர்கள் உள்ளனர். நான் என் வாழ்க்கையில் 40 வருடங்களுக்கு மேலாக தமிழர்களுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளேன்.
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடம் சேமிப்புக்களைப் பெற்று நாம் கொழும்பு செல்லாமல் அவர்களின் பணத்தை இங்கேயே அவர்களுக்குக் கடனாக வழங்குகின்றோம். ஆரசாங்கத்தின் ஏற்பாட்டில் அதற்கான வட்டியை குறைத்துள்ளோம். எனவே பொதுமக்கள் எங்கள் வங்கியில் கடன்களைப் பெற்று உங்கள் தொழிற்றுறையை வளர்த்துக் கொள்ளலாம். மீன்பிடி, விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்த இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றது..
10 வருடத்திற்கு மேல் உரிமை கோரப்படாத பணத்தினை மத்திய வங்கி தமக்கு அனுப்புமாறு கேட்டுக்கொ
ண்டது. எனினும் நான் மத்திய வங்கியின் ஆளுநருடனும், ஜனாதிபதியுடனும் கதைத்து அதனை எங்கள் வங்கியிலேயே இருப்பில் வைத்துள்ளோம். இப்படியான வைப்புக்களை இனிவரும் காலங்களிலும் பாதுகாப்போம். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் அங்கு இருக்கும் போது மக்கள் வங்கியில் தமது நகைகளை அடவு வைத்திருந்தால், பணம் வைப்பிலிட்டிருந்தால் அதற்கான பற்றுச்சீட்டினை வைத்திருக்கும் பட்சத்தில் உரியவை கொடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
0 Response to "'வடக்கின் வசந்தம்' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் 5 சேவை நிலையங்கள்"
แสดงความคิดเห็น