jkr

தமிழ் மக்களின் இதயங்களையும் படையினர் வெற்றிகொள்ள வேண்டும்: ஜனாதிபதி


யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவ வீரர்களால் தமிழ் மக்களின் இதயங்களை வெற்றி கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை முழு உலகத்துக்கும் வெளிக்காட்டுவதற்கு இன்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நாட்டை மீட்கும் சவாலை ஒப்படைத்த இராணுவத்திடமே நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் சவாலையும் ஒப்படைக்கின்றோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அதேவேளை, தேசத்தின் சுதந்திரத்தைக் கட்டிக்காப்பதற்காக பல்வேறு தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் மேற்கொண்டு அயராத சேவையை வழங்கி வரும் பாதுகாப்பு தரப்பினருக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நேற்றுக்காலை வன்னிக்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி உள்ளிட்ட பாதுகாப்பு குழுவினர், முழங்காவில் பிரதேசத்தில் அமைந்துள்ள 651ஆவது படையணியின் தலைமையகத்தில் வன்னி மனிதாபிமானப் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு படைத் தலைமையகங்களைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களைச் சந்தித்தனர். இதன் பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

"படையினர் தமது சம்பளத்தையோ அல்லது கொடுப்பனவுகளையோ அதிகரிக்குமாறு ஒருபோதும் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டதில்லை. நாட்டுக்காக பாரியதொரு தியாகத்தைச் செய்துள்ள பாதுகாப்புத் தரப்பினரின் சம்பளத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த மூன்று வருடங்கள் மட்டுமல்லாது 30 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் எமது முப்படையினர் நாட்டின் விடுதலைக்காக துணிச்சல் மிக்க போரில் ஈடுபட்டனர். அதற்காகத் தமது பெற்றோர், சகோதரர்கள் மற்றும் பிள்ளைகளிடமிருந்து பிரிந்து சென்று மழை, வெயில் என்று பாராமல் நாட்டுக்காக அவர்கள் செய்த சேவை அளப்பரியது.

யார் காட்டிக் கொடுத்தாலும் யார் அவமானப்படுத்தினாலும் நாட்டின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த மற்றும் துணிச்சல்மிக்க அர்ப்பணிப்பை வெளிக்காட்டிய முப்படைகளின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது நன்றியினை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

இராணுவ வீரர்களின் தைரியம், வீரம் மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பில் எமது அரசாங்கம் நம்பிக்கை வைத்த அளவில் வரலாற்றில் வேறு எந்த அரசாங்கங்களும் நம்பிக்கை வைக்கவில்லை. அந்த நம்பிக்கையின் காரணமாகவே இராணுவ வீரர்கள் யுத்த களத்தில் உண்மையான வீரர்களாக தைரியத்துடன் போரிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பயங்கரவாதம் முடிந்துவிட்டது என்பதற்காக நாங்கள் ஓய்வுடன் இருக்க முடியாது. பல்வேறு சதித்திட்டங்கள் நாட்டில் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில் இராணுவ வீரர்கள் மீட்டுக் கொடுத்த நாட்டை யாரும் காட்டிக் கொடுப்பதற்கு இடமளிக்க முடியாது" என்றார்.

ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கிளிநொச்சி படைத்தலைமையகத்தின் கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் அத்துல ஜயவர்தன, முல்லைத்தீவு படைத் தலைமையகத்தின் கட்டளையிடும் அதிகாரி நந்தன உடவத்த, 651ஆவது படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அத்துருசிங்க உள்ளிட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஜனாதிபதியுடனான இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

வன்னிக்கான இந்த விஜயத்தின் போது படையினரால் மீட்கப்பட்ட முழங்காவில் அரச வைத்தியசாலையையும் நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், துணுக்காய் பிரதேசத்தில் மீளக் குடியேற்றப்பட்டுள்ள பொதுமக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தமிழ் மக்களின் இதயங்களையும் படையினர் வெற்றிகொள்ள வேண்டும்: ஜனாதிபதி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates