jkr

உப்புச்சப்பற்ற கூட்டணியின் பிரதான கட்சியொன்று ஆளும் கட்சிக்கு ஆதரவு : லக்ஷ்மன் யாப்பா


உப்புச் சப்பு இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுகின்ற பிரதான கட்சியொன்று, அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகள் இடம்பெற்று முடிந்து விட்டன.

விரைவில் இது குறித்து அறிவிப்போம் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். ஆளும் கட்சியே நாட்டின் மிகப்பெரிய கூட்டமைப்பாகத் திகழ்கின்றது. இந்த கூட்டமைப்பில் 18 கட்சிகள் அங்கத்துவம் பெறுவதுடன் 14 கட்சிகள் ஆதரவளிக்கின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில்,

இந்த நாட்டின் வரலாற்றில் பல அரசியல் கூட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகப் பெரியதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான கூட்டணி என்றால் அது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாகவே இருக்க முடியும். எமது கூட்டணியில் 18 அரசியல் கட்சிகள் இடம்பெறுகின்றன. மேலும் 14 கட்சிகள் ஆதரவளிக்கின்றன. முக்கியமாக வாக்கு வங்கியுள்ள கட்சிகளே எமது கூட்டணியில் உள்ளன. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்கு தளங்களைக்கொண்ட அமைப்புக்களே எமது அமைப்பில் இடம் பெறுகின்றன.

எனவே ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பு எந்தவகையிலும் எங்களுக்கு சவாலானது அல்ல என்பதனை முதலில் தெரிவிக்க வேண்டும். அது தொடர்பில் நாங்கள் எந்தக் கரிசனையும் கொள்ளவில்லை. முதலில் அதனை கூட்டமைப்பு என்றே கூற முடியாது. காரணம் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியில் இருந்தவர்களே தற்போது உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பிலும் இருக்கின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியில் இடம்பெற்ற கட்சியாகும். இதேவேளை மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியும் ஆளும் கட்சியில் இருக்கவில்லை. எனவே எந்தவிதமான புதிய மாற்றங்களும் ஐக்கிய தேசிய கட்சி கூட்டமைப்பில் இருப்பதாக தெரியவில்லை. மங்கள சமரவீர தரப்பு மட்டுமே புதிய அணியாக இடம்பெற்றுள்ளது என்று கூறலாம்.

ஆனால் முக்கியமான விடயம் ஒன்றை ஊடகங்களுக்கு கூறவேண்டும். அதாவது எதிர்வரும் வாரங்களில் பாரிய அரசியல் மாற்றங்கள் இலங்கையில் நிகழும். அதாவது தற்போதைய ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுகின்ற பிரதான கட்சியொன்று அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்ட விடயமாகும். விரைவில் ஜனாதிபதி அல்லது நாடாளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இரண்டு தேர்தல்களும் ஒரே தினத்திலும் நடைபெறலாம். எனவே எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் எதிர்க்கட்சி கூட்டமைப்பில் இடம்பெறும் பிரதான கட்சி ஒன்று ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கும். பொறுத்திருந்து பாருங்கள். எதிர்வரும் வாரங்களில் இந்த அரசியல் மாற்றம் நிகழும்.

அதேவேளை, அரசாங்கம் எந்தவிதமான நிவாரணங்களையும் மக்களுக்கு வழங்குவதில்லை என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஆனால் எவ்வளவு நிவாரணங்களை வழங்குகின்றோம் என்று மக்களுக்குத் தெரியும். 2009 ஆம் ஆண்டில் மட்டும் உர நிவாரணத்துக்காக 54000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது என்பதனை அறிவிக்கின்றோம்"என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "உப்புச்சப்பற்ற கூட்டணியின் பிரதான கட்சியொன்று ஆளும் கட்சிக்கு ஆதரவு : லக்ஷ்மன் யாப்பா"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates