jkr

கே.பி. நீதிமன்றில் ஆஜர்செய்யப்படாமை பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது- ஐ.தே.க. குற்றச்சாட்டு


புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான கே.பி. என்றழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதனை கைதுசெய்து ஒன்றரை மாதமாகியும் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படாமலிருப்பதானது பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலில் கே.பி.யின் மூலமாக ஐ.தே.க.வின் மீதும் அதன் தலைமையின் மீதும் புலி முத்திரை குத்தி சேறு பூசுவதற்கு அரசு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, கே.பி.யை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் கருத்துக் கூறுகையில்,

இலங்கையின் நீதிமன்ற சட்டத்தின்படி கைதுசெய்யப்பட்ட ஒருவர் 24 மணித்தியாலங்களுக்குள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட வேண்டும். ஆனால், கே.பி.யை பொறுத்தவரை அவ்வாறு எதுவும் செய்யப்படவில்லை. எனவே, இது எந்த சட்டத்தின்படி மேற்கொள்ளப்படுகிறது என புரியவில்லை. அதேபோன்று, கே.பி.யை கைதுசெய்ததன் பின்னர் அவரின் வலையமைப்பின் ஊடாக எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டார்கள் போன்ற எந்த விபரங்களையும் அரசாங்கம் வெளியிடாமலேயே உள்ளது.

கே.பி.க்கு டென்மார்க், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ள வங்கிகளில் ஏராளமாக பணம் உள்ளது. இதை அரசு பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதா அல்லது ஏற்கனவே இந்த வங்கிகளில் பணத்தை எடுத்துள்ளதா போன்ற விபரங்களையும் அரசு வெளியிடாமல் உள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து பெறப்பட்ட தங்க நகைகளின் தொகை பற்றிய விபரங்களையும் அரசு வெளியிடாமல் உள்ளது. இந்த நிலையில், டுபாயில் உள்ள பாகூஸ் என்பவருக்கு தங்க நகைகளை விற்பதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டது. ஆனால், அது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. எனவே, அரசாங்கம் இந்த விடயத்தில் மூடுமந்திரமாக செயல்படாமல், சட்டத்தின் படி உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

அதேபோன்று தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்றோரை விடுதலை செய்த அரசாங்கம், 2 1/2 இலட்சம் மக்களை தொடர்ந்தும் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்துவைத்துள்ளது. இது எந்த விதத்தில் நியாயம் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கே.பி. நீதிமன்றில் ஆஜர்செய்யப்படாமை பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது- ஐ.தே.க. குற்றச்சாட்டு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates