jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஐக்கிய தேசிய கட்சி แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஐக்கிய தேசிய கட்சி แสดงบทความทั้งหมด

பொது வேட்பாளர் தொடர்பில் ஜே.வி.பி.யுடன் இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி கொள்ளலாம்-ஐ.தே.க செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க


ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் ஜே.வி.பி.யின் நிபந்தனைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு, பொது வேட்பாளர் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இது தொடர்பில் கட்சிக் கொள்கைகளை ஒதுக்கிவிட்டு பொது இலக்கை அடைவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் அரசாங்கத்தை சார்ந்தவர்களுடனும் நாம் உத்தியோகபூர்வமான பேச்சுக்களை நடத்தி வருகின்றோம். எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைவதற்கும் பொது வேட்பாளரை அறிவிப்பதற்குமான நிலைப்பாடுகள் இந்த பேச்சுவார்த்தையின் மூலம் எட்டப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். சதாசிவம் தலைமையிலான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இணைந்து கொண்டுள்ளது. இந்த நிகழ்வு நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த வைபவத்தின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்ததாவது:

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு கட்சிக் கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பொது இலக்கான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் தயாராகவுள்ளனர். எதிர்வரும் வாரங்கள் எமது நாட்டு அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாகும். பொது வேட்பாளாராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து 17 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து சுயாதீன ஆனைக்குழுக்களை நிறுவுவதோடு இடம் பெயர்ந்துள்ள மக்களை சொந்த இடங்களில் குடியேற்றுவது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை துரிதப் படுத்துவது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி. நிபந்தனை விதித்துள்ளது.

இந்த நிபந்தனைகளை ஐக்கியதேசியக்கட்சி கற்றுக் கொள்வதுடன் இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு பொது வேட்பாளர் தொடர்பில் இணக்கப்பாட்டை எமக்குள் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகள் பல எம்மோடு இணைய விருப்பம் தெரிவித்துள்ளதோடு, அரச தரப்பில் சிலரும் எம்மோடிருந்து வெளியேறிய பலரும் இணையவுள்ளனர். அதேவேளை, சில பிரதான எதிர்க்கட்சிகள் கொள்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொது இலக்குக்காக பொது வேட்பாளரை ஆதரிக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளன.ஜனாதிபதித் தேர்தலை நடத்துவோமென்று சவால் விட்ட அரசாங்கத்திற்கு இன்று அதிலிருந்து மீள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதித் தேர்தலை அறிவித்த அடுத்த வினாடியே பொது வேட்பாளர் யாரென்பதை நாம் பகிரங்கப்படுத்துவோம். அதேவேளை, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும். இதற்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரியுள்ளோம். அத்தோடு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த தேர்தலில் வேட்பாளர் என்பதால் அரச வளங்களை மற்றும் பிரசாரங்களுக்காக ஹெலிகொப்டர்களை பயன்படுத்த முடியாது. இன்று எம்மோடு இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இணைந்துள்ளமை மேலும் முன்னணிக்கு பலம் சேர்த்துள்ளது.

எஸ். சதாசிவம்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்தால் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்விலும் விடுதலை கிடைக்கவில்லை. எதிர்பார்த்த சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, அனைத்து தொழிலாளர்களையும் பொது வேலைநிறுத்தத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்று இங்கு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ். சதாசிவம் கூறினார். சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இணைந்துள்ளோம். எமது முன்னணியின் பேராளர் மாநாடு எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது பல்வேறு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம்.

இதுவரையில் ஜனாதிபதித் தேர்தலா? பொதுத் தேர்தலா? என அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அதன் பின்னர் எமது தீர்மானத்தை அறிவிப்போம்.

எமது முன்னணியில் 28000 அங்கத்தினர்கள் உள்ளனர். இவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது மட்டுமல்ல சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதே எமது அபிலாஷையாகும் என்றும் அவர் கூறினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஐ.தே.கவினர் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு உள்வருகை


அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சற்று முன்னர் மீண்டும் சபைக்கு திரும்பியுள்ளனர்.

ஒரு வாரத்துக்கு நான்கு நாட்கள் கூட்டப்பட வேண்டிய நாடாளுமன்றம் ஒரு நாளாகக் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, நாடாளுமன்றம் வாரத்திற்கு ஒருநாளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விசேட சட்டமூலத்தின் பிரகாரம் சபைக்கு அறியத் தருவதாக சபாநாயகர் லொக்கு பண்டார அறிவித்தார்.

இதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அங்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா,

"நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அதன்மூலம் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. ஜனநாயக நாட்டில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகளை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.அதனால் சபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம்" எனத் தமது கட்சியின் எதிர்ப்பினை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

சபைக்கு முன்னால் சுமார் 15 நிமிடங்கள் வரை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அவர்கள் மீண்டும் சபைக்கு வந்து அமர்ந்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பிரச்சினைகள் ஏற்பட்டபோதும் ஐ.தே.மு ஊர்வலம் தொடர்கிறது: ரவி கருணாநாயக்க


ஐக்கிய தேசிய முன்னணியினரின் ஊர்வலத்தின்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டபோதும் தாம் தொடர்ந்தும் பயணிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கொள்கை விபரக் கோவையை கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்த பௌத்த பீடங்களின் மாகாநாயக்கர்களுக்குக் கையளிப்பதற்காக ஐ.தே. முன்னணியினர் கண்டியை நோக்கி ஊர்வலமாக சென்றுகொண்டிருக்கின்றனர். அந்த ஊர்வலத்தில் சென்ற வாகனங்கள் மீதும் பொதுமக்கள் மீதும் நிட்டம்புவ நகரில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை விளக்கக் கோவையினை கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்த பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்கர்களுக்குக் கையளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊர்வலம் சுமார் 250 வாகனங்களுடன் இன்று முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர உள்ளிட்ட முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணியினர் கண்டியில் நாளை விசேட மத வழிபாடுகளில் ஈடுபட்டபின்னர் மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

எதிர்க்கட்சிப் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது எதிர்க்கட்சியே : ஐ.தே.க.தெரிவிப்பு


எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மிகவும் சந்தோஷமாகவும் சிறப்பாகவும் இருப்பதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது எதிர்க்கட்சியே என்பதை அரசாங்கத்திற்கு ஞாபகப்படுத்துவதாகவும் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் தற்போது எதிர்க்கட்சி வேட்பாளர்களை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தெரிவு செய்யுமளவுக்கு புதிய கலாசாரம் உருவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

இவ்வாறு அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தித் தேர்தலில் இவர் போட்டியிடலாம், இவரால் போட்டியிட முடியாது என்றெல்லாம் கருத்து தெரிவிப்பது, ஜனநாயகம் தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள தெளிவினைப் பறைசாற்றுவதாக உள்ளதெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் எந்தத் தேர்தலை நடத்தினாலும் தாம் வெற்றி பெறுவதற்குத் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், எவ்வாறான குளறுபடிகள் மற்றும் மோசடியில் ஈடுபட்டாலும் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கே.பி. நீதிமன்றில் ஆஜர்செய்யப்படாமை பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது- ஐ.தே.க. குற்றச்சாட்டு


புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான கே.பி. என்றழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதனை கைதுசெய்து ஒன்றரை மாதமாகியும் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படாமலிருப்பதானது பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலில் கே.பி.யின் மூலமாக ஐ.தே.க.வின் மீதும் அதன் தலைமையின் மீதும் புலி முத்திரை குத்தி சேறு பூசுவதற்கு அரசு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, கே.பி.யை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் கருத்துக் கூறுகையில்,

இலங்கையின் நீதிமன்ற சட்டத்தின்படி கைதுசெய்யப்பட்ட ஒருவர் 24 மணித்தியாலங்களுக்குள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட வேண்டும். ஆனால், கே.பி.யை பொறுத்தவரை அவ்வாறு எதுவும் செய்யப்படவில்லை. எனவே, இது எந்த சட்டத்தின்படி மேற்கொள்ளப்படுகிறது என புரியவில்லை. அதேபோன்று, கே.பி.யை கைதுசெய்ததன் பின்னர் அவரின் வலையமைப்பின் ஊடாக எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டார்கள் போன்ற எந்த விபரங்களையும் அரசாங்கம் வெளியிடாமலேயே உள்ளது.

கே.பி.க்கு டென்மார்க், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ள வங்கிகளில் ஏராளமாக பணம் உள்ளது. இதை அரசு பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதா அல்லது ஏற்கனவே இந்த வங்கிகளில் பணத்தை எடுத்துள்ளதா போன்ற விபரங்களையும் அரசு வெளியிடாமல் உள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து பெறப்பட்ட தங்க நகைகளின் தொகை பற்றிய விபரங்களையும் அரசு வெளியிடாமல் உள்ளது. இந்த நிலையில், டுபாயில் உள்ள பாகூஸ் என்பவருக்கு தங்க நகைகளை விற்பதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டது. ஆனால், அது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. எனவே, அரசாங்கம் இந்த விடயத்தில் மூடுமந்திரமாக செயல்படாமல், சட்டத்தின் படி உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

அதேபோன்று தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்றோரை விடுதலை செய்த அரசாங்கம், 2 1/2 இலட்சம் மக்களை தொடர்ந்தும் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்துவைத்துள்ளது. இது எந்த விதத்தில் நியாயம் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்திய தூதுக் குழு- எதிர்க் கட்சி இன்று சந்திப்பு


இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று புதன்கிழமை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியது.

கொழும்பிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் எதிர்க்கட்சி சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ஜயலத் ஜயவர்த்தன, ரவி கருணநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல , இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் தற்போது நிலவும் நிலவரம் குறித்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடன் விளக்கிக் கூறியதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரம்சிங்க தெரிவித்தார். அத்துடன் வவுனியாவில் இடம்பெயர்ந்த்வர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களிற்கு எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்ல அனுமதிக்கப்படாமை குறித்தும் அவர்களுக்கு தெளிவுபடுத்தியதாக மனோகணேசன் எம்.பி தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates