ஐ.தே.கவினர் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு உள்வருகை

அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சற்று முன்னர் மீண்டும் சபைக்கு திரும்பியுள்ளனர்.
ஒரு வாரத்துக்கு நான்கு நாட்கள் கூட்டப்பட வேண்டிய நாடாளுமன்றம் ஒரு நாளாகக் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, நாடாளுமன்றம் வாரத்திற்கு ஒருநாளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விசேட சட்டமூலத்தின் பிரகாரம் சபைக்கு அறியத் தருவதாக சபாநாயகர் லொக்கு பண்டார அறிவித்தார்.
இதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அங்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா,
"நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அதன்மூலம் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. ஜனநாயக நாட்டில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகளை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.அதனால் சபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம்" எனத் தமது கட்சியின் எதிர்ப்பினை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
சபைக்கு முன்னால் சுமார் 15 நிமிடங்கள் வரை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அவர்கள் மீண்டும் சபைக்கு வந்து அமர்ந்துள்ளனர்.
0 Response to "ஐ.தே.கவினர் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு உள்வருகை"
แสดงความคิดเห็น