டெஸ்ட் அணி- ஸ்ரீசாந்த் சேர்ப்பு சரியா..?

மும்பை: பந்து வீச்சை விட சர்ச்சைகளால் பெரும் புகழ் பெற்ற ஸ்ரீசாந்த்தை மீண்டும் இந்திய அணியில் சேர்த்துள்ளது பலரையும் வியப்படைய வைத்துள்ளது. இந்திய அணியின் தேர்வு குறித்தும் காரசாரமான விவாதங்கள் எழுந்து விட்டன.
காயமடைந்தார் என்ற காரணத்தால் கடந்த ஒரு வருட காலமாக அணியில் இடம் பெறவில்லை ஸ்ரீசாந்த். ஆனால் அதற்கு முன்பும் கூட அவர் பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை என்பதே உண்மை. மேலும் விளையாட்டை விட சர்ச்சைகளிலும், கேளிக்கைளிலும் பெரும் ஆர்வம் கொண்டு திரிந்தார் ஸ்ரீசாந்த்.
எதிரணியினருடன் முறைப்பது, வாக்குவாதத்தில் ஈடுபடுவது, கேலி செய்வது என சரமாரியான சர்ச்சைகளில் சிக்கினார். இப்படித்தான் ஐபிஎல் போட்டியின்போது பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை கேலி செய்யப் போக அவர் பளார் என கன்னத்தில் அறைந்து நாட்டையே அதிர வைத்தார்.
கேவிக் கேவி அழுத ஸ்ரீசாந்த்தின் முகம் இன்னும் யாருக்கும் மறந்திருக்காது. இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த ஸ்ரீசாந்த் காயமடைந்து பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த ஒரு வருடமாக அவர் விளையாடவில்லை. உருப்படியாக பயிற்சிகள் எதிலும் கலந்து கொள்ளவும் இல்லை. பிட்னஸ் இருக்கிறது என்பதை முறையாக அவர் தெரிவித்துள்ளாரா என்பதும் தெரியவில்லை. இந்த நிலையில் அவரை தடாலடியாக அணியில் சேர்த்துள்ளது ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக் குழு.
இந்தியத் தேர்வுக் குழு எப்போதுமே சரியான அணியைத்தான் தேர்வு செய்யும் என்பதற்கு இதுவரை உருப்படியான ஆதாரம் எதுவும் இல்லை. எனவே ஸ்ரீசாந்த்தின் தேர்வும் கேள்விகளை எழுப்பியுள்ளதில் ஆச்சரியம் இல்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் ஓரளவு சிறப்பாகவே பந்து வீசிய ஆஷிஸ் நெஹ்ராவை அணியில் சேர்க்காமல், விளாயாடமேலேயே இருந்து வந்த ஸ்ரீசாந்த்தைப் பிடித்து அணியில் போட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.
ஒரு வேளை இதுதான் கட்டக் கடைசி வாய்ப்பு. இதில் பிழைத்தால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடலாம், இல்லாவிட்டால் நிரந்தரமாக சேர்க்க மாட்டோம் என்று கூறி அணியில் சேர்த்துள்ளார்களா என்று தெரியவில்லை.
இலங்கைத் தொடருக்கு எதிராக விக்கெட்களை வீழ்த்துவதில் ஸ்ரீசாந்த் சாதிப்பாரா என்பதை விட இலங்கை வீரர்களுடன் சண்டை போடாமல் சமர்த்தாக நடந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்புதான் நிறைய உள்ளது - ரசிகர்களிடம்.
0 Response to "டெஸ்ட் அணி- ஸ்ரீசாந்த் சேர்ப்பு சரியா..?"
แสดงความคิดเห็น