புத்தளத்தில் கைதான பொறியியலாளர்,தொழில்நுட்ப அதிகாரிகள் பிணையில் விடுதலை

புத்தளத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மீள்குடியேற்ற,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் உலக வங்கி வீடமைப்புத்திட்ட பொறியியலாளர் இருவர் மற்றும் ஒரு தொழில் நுட்ப அதிகாரி ஆகியோரை இம்மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு புத்தளம் மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிறமாவட்டங்களில் இருந்து வந்து தங்குவோர் பதியும் 23 படிவங்களைப் பதிவு செய்யாததாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புத்தளம் அநுராதபுரம் வீதியில் தமது தங்குமிடத்தில் இருந்த போது, புத்தளம் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு புத்தளம் நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். தாங்கள் அரசாங்க நிறுவனத்தில் பணியாற்றுவதாகப் பொலிஸாரிடம் தெரிவித்த போதும், பலன் கிட்டவில்லை.
பின்னர் நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்திய போது,இவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஏ.எம்.கமர்தீன்,ஜ.நிஸ்மி ஆகியோர்,தமது கட்சிக்காரர்கள் அரச அதிகாரிகள் என்பதால் அவர்களுக்கு பிணை வழங்குமாறு விண்ணபித்தனர். இதன்போது,இம்மூவரையும் சரீர பிணையில் செல்ல அனுமதித்த நீதவான்,வார நாட்களில் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் கையொப்பமிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அதிகாரிகள் யாழ்ப்பாணம் புத்தூர்,யாழ்ப்பாணம்,சாவகச்சேரி பகுதிகளைச் சேர்ந்த விஜயநாதீஸ்வரன் துஷ்யந்தன்,குகனேஸ்வரன் பிரதீபன்,ஜெகதீஸ்வரன் பிரேம்குமார் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Response to "புத்தளத்தில் கைதான பொறியியலாளர்,தொழில்நுட்ப அதிகாரிகள் பிணையில் விடுதலை"
แสดงความคิดเห็น