அல்லைப்பிட்டி மண்கும்பான் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்!

இன்று மாலை (07) அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது மோதல்கள் நிரந்தரமாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து தத்தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் பொருட்டு வன்னியிலிருந்து அழைத்து வரப்பட்ட குடும்பங்கள் தத்தமது சொந்த இடங்களில் குடியேறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்கி அப்பகுதிகளில் மக்கள் நிரந்தரமாகக் குடியேறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
அல்லைப்பிட்டி மண்கும்பான் மக்களின் கோரிக்கை தொடர்பாக நடைமுறைச்சாத்தியமான தீர்மானத்தை மேற்கொள்வதற்கு வசதியாக அப்பகுதிக்குப் பொறுப்பான கடற்படை உயரதிகாரி கப்டன் சில்வா வேலணைப் பிரதேச செயலாளர் மு.நந்தகோபால் ஈ.பி.டி.பி.யின் வேலணைப் பிரதேசப் பொறுப்பாளர் சின்னையா சிவராசா போல் ஊர்காவற்துறைப் பிரதேச ஈ.பி.டி.பி. அமைப்பாளர் ஜெயகாந்தன் மற்றும் அல்லைப்பிட்டி மண்கும்பான் கிராம சேவகர்களும் கலந்து கொண்டனர்.
அனைவரின் கருத்துக்களையும் செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாளை (08) காலை 10.00 மணிக்கு அல்லைப்பிட்டி மண்கும்பான் ஆகிய இடங்களில் மீள்குடியேற விரும்பும் இடம்பெயர்ந்த மக்களின் குடும்பங்களிலிருந்து ஒவ்வொருவர் யாழ்.மத்திய கல்லூரிக்குச் சமூகமளிக்குமாறும் அவர்கள் தமது சொந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக பஸ்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு உரிய பதிவுகள் மேற்கொள்ளப்படுவதுடன் மக்கள் அப்பகுதிகளில் குடியேறுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் கடற்படையினருடன் கலந்தாலோசிக்கப்பட்டு மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
அல்லைப்பிட்டி மண்கும்பான் பிரதேச மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஒரே நேரத்தில் சாத்தியமாகும் எனக் கருத வேண்டாம் என்றும் அவை கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் முன்னர் போன்று தற்போது குழப்பமான நிலைமைகள் இல்லை என்றும் அம் மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவதில் தான் மிகுந்த அக்கறை செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.






0 Response to "அல்லைப்பிட்டி மண்கும்பான் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்!"
แสดงความคิดเห็น