jkr

மோசடி...சின்னத் திரை விருதை திருப்பிக் கொடுத்த ராதிகா!


விருதுக்கான நடிகர் நடிகை பரிசீலனையில் மோசடி நடந்திருப்பதாகக் கூறி, தனக்கு அளிக்கப்பட்ட சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருதினை திருப்பி அனுப்பியுள்ளார் ராதிகா. மேலும் இது தொடர்பான தனது படங்களை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்புக்கு நடிகை ராதிகா கண்டன கடிதம் அனுப்பியுள்ளார். இன்று அதை தனி அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் ராதிகா கூறியிருப்பதாவது:

கடந்த 14 ந்தேதி மாலை சென்னை காமராஜர் அரங்கில் பெஸ்ட் (சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு) சார்பில் நடந்த விருது கள் வழங்கும் விழாவில் பல சங்கடமான நிகழ்வுகள் நடந்தேறின. அது சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் மனதையும் பெரிதும் பாதித்துள்ளது.

சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர் , கதை, வசன கர்த்தா வரிசையில் பல திறமைசாலிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்படவே இல்லை. என்ன காரணத்துக்காக அவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்டன? என்பதும் தெரியவில்லை. மேற்படி விழாவில் கலந்து கொள்ளமாட்டார்களோ என்ற சந்தேகத்தின் பேரில் சில பேரிடம், குறிப்பாக நடிகர், நடிகைகளிடம் உங்களுக்குத் தான் விருது தரப்போகிறோம் என்று உறுதியளித்து விழாவிற்கு வரவழைத்ததாக அறிகிறேன்.

தகுதியும், திறமையும் படைத்த யாராக இருந்தாலும் அவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து. ஆனால் விழாவிற்கு வரவழைப்பதற்காகவே பலரையும் அழைத்து அதைப் படம் பிடித்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காட்ட முனைவது தவறான முன்னுதாரணமாகவே அமையும்.

எனவே தகுதி, திறமையின் அடிப்படையில் எனக்கு விருது வழங்கப்பட்டு இருந்தாலும் இதே போல் திறமை வாய்ந்த பலபேர் புறக்கணிக்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகைக்கான விருதை ஏற்றுக்கொள்ள என் மனசாட்சி விரும்பவில்லை.
இந்த தவறுகள் மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காகவும் பெஸ்ட் அமைப்பின் எதிர்கால நலனை கருதியும் இது போன்ற நிகழ்வுகள் மேலும் தொடரக் கூடாது என்ற நல்ல எண்ணத்தோடும் எனக்கு வழங்கிய விருதை உங்களிடமே திருப்பி ஒப்படைக்கிறேன்.

மேற்படி விருது வழங்கிய நிகழ்ச்சியில் நான் இடம் பெறும் எந்த ஒரு புகைப்படம் அல்லது படக்காட்சிகள் உள்பட எவையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் இடம் பெறுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..." என்று ராதிகா கூறியுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மோசடி...சின்னத் திரை விருதை திருப்பிக் கொடுத்த ராதிகா!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates