jkr

பசில் ராஜபக்ஷ எம்.பிக்கும்,அமைச்சர் ரிஷாட் பதியுதீனிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராட்டு


இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பியையும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராட்டுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. என்.ஸ்ரீகாந்தா நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

இடைக்கால கணக்கறிக்கை பிரேரணை மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-

"இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றுவதில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள். அவர்களது பணியைப் பாராட்டாது இருக்க முடியாது. அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருப்தியடைந்துள்ளது.

மீளக்குடியேற்றப்படும் மக்களுக்கு 25 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படுகின்றது. மீளக்குடியேறும் போது உடனடி தேவையின் நிமித்தம் 5 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. என்றாலும் தற்போது வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாவை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்து வழங்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன்.

யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளன. வீடுகள், வீதிகள், பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. ஆஸ்பத்திரிகளில் வைத்தியர்கள், மற்றும் தாதியர் பற்றாக்குறை நிலவுகிறது. இக்குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கு புனரமைப்பு பணிகளுக்கு கட்சி சார்பின்றி ஒத்துழைப்பு நல்க நாம் தயாராகவுள்ளோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கட்சி வேறுபாடுகளை மறந்து சகலரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். சிங்கள மக்களிடமிருந்து எந்தத் தீர்வையும் பறித்தெடுக்க தமிழ் மக்கள் விரும்பவில்லை. அதேநேரம், தமிழ் மக்கள் மீது எந்தத் தீர்வையும் திணிக்கவும் முடியாது.

எமக்கு அரசியல் அணிகள் குறித்து அக்கறை கிடையாது. நாம் எந்தக் கூட்டணியிலும் சிக்கிக்கொள்ளமாட்டோம். ஆட்சியைக் கைப்பற்றும் ஆசை எமக்குக் கிடையாது. அதிகாரப் போட்டி இந்நாட்டின் தேசியப் பிரச்சினையை இழுத்தடிக்கக்கூடாது. எமது கடமைகளைச் செய்யத் தயாராகவுள்ளோம். எம்மால் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். எல்லாக் கட்சிகளும். ஓரணியில் நின்றால் இந்நாட்டு மக்களுக்கு நல்லதொரு எதிர்காலம் கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பசில் ராஜபக்ஷ எம்.பிக்கும்,அமைச்சர் ரிஷாட் பதியுதீனிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராட்டு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates