போலி வாக்குறுதிகளை வழங்காதீர்கள் : ஐ.தே.முன்னணிக்கு மல்வத்த பீடாதிபதி அறிவுரை

மக்களின் நலன்கருதி வேறுபட்ட கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்திருப்பதை வரவேற்கும் அதேவேளை, பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதை அரசியல் கட்சிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கு ஆசி வழங்கிய கண்டி மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியினர் தமது கொள்கை விளக்கக் கோவையினை மல்வத்த பீடாதிபதியிடம் இன்று சனிக்கிழமை காலை கையளித்து ஆசிபெற்ற பின்னரே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகள் இணைந்து கொழும்பிலிருந்து வாகனத் தொடரணியாக கண்டிக்குச் சென்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
"மாகாண சபைகளினூடாக மக்களுக்கு உரிய சேவைகள் ஆற்றப்படுவதில்லை என்பதே எனது கருத்தாகும். நாட்டுக்கு நிறைவேற்று அதிகாரமில்லாத மக்கள் பலம் கொண்ட ஆட்சி பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். இது எனது சொந்த அபிப்பிராயமாகும்.
நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்வதற்கு அரசியல் தலைவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்" என பீடாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.
"நாட்டில் மனித உரிமைகளுக்கு இடமில்லை. பொருளாதாரம் நாளுக்கு நாள் அபிவிருத்தியில் குறைந்து வருகிறது. சுதந்திரமான ஜனநாயக நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே நாம் ஒன்றிணைந்தோம்.
நாட்டின் அபிவிருத்திக்காகவும் மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம்" என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
கொழும்பிலிருந்து தொடரணியாகச் சென்ற மேற்படி குழுவினர், இன்று காலை 9.00 மணியளவில் கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மல்வத்த பீடத்துக்குச் சென்றனர்.
கண்டி செல்வ விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதோடு கண்டி மீரா மக்காம் முஸ்லிம் பள்ளிவாசல், கண்டி மறைமாவட்ட ஆயர் இல்லம் ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று அவர்கள் வழிபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
0 Response to "போலி வாக்குறுதிகளை வழங்காதீர்கள் : ஐ.தே.முன்னணிக்கு மல்வத்த பீடாதிபதி அறிவுரை"
แสดงความคิดเห็น