jkr

தெற்குத் தமிழர்கள் எதிரணி பொது வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் : மனோ கணேசன்


தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஆட்சிமாற்றத்திற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

வடக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளை அடுத்து இறுதி முடிவு தேர்தல் நியமன தினத்திற்கு முன் அறிவிக்கப்படும் என்ற ஜனநாயக மக்கள் முன்னணி அரசியல் குழு எடுத்துள்ள முடிவை கட்சியின் தலைவர் மனோ கணேசன் எம்பி கொழும்பில் இன்று (03.12.2009) காலை கிராண்ட் ஒரியன்டல் விடுதியில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

இம்மாநாட்டில் மனோ கணேசன் எம்பியுடன், கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், தேசிய அமைப்பாளர் பிரபா கணேசன், ஜதொகா பொதுச்செயலாளர் எம்.சிவலிங்கம், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.ராஜேந்திரன், சிரேஷ்ட உபதலைவர் கங்கை வேணியன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் மொஹமட் ஷியாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் மனோ எம்பி தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது :

"ஆட்சி மாற்றத்திற்கான வாக்கு சரத் பொன்சாகாவுக்கு எந்தவித அரசியல் நிபந்தனைகளுமின்றி வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்களை நாம் கோரவில்லை. தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இன்றைய ஆட்சியை மாற்றும் வாக்காகும்.

யுத்த வெற்றியினை முன்னிலைபடுத்தி தேர்தல்களில் இலகு வெற்றி பெற்றிடலாம் என இந்த அரசாங்கம் மனப்பால் குடித்தது. ஆனால் யுத்த வெற்றிக்கு காரணமானவரையே பொது வேட்பாளராக எதிரணி நிறுத்துவதால் இன்று அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளது. இந்த ஆட்சியை மாற்றுவதற்கு இதைவிட சிறந்த வழி எதுவும் கிடையாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு

இன்றைய ஆட்சியை மாற்றியமைத்து புதிய தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தி, தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நமது செயற்திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

வடக்கு கிழக்கின் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வாழும் தமிழர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடத்தப்படும்.

இன்றைய அரசாங்கத்தை மாற்றிடவேண்டும் என்ற உணர்வுகள் இன்று வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மனங்களில் ஒலிப்பதாக எமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த உணர்வுகளை எதிரொலித்து ஆட்சிமாற்றம் என்ற ஒரே அடிப்படையில் எதிரணி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஆதரிக்கவேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மலையகக் கட்சிகளுக்கும் அழைப்பு

தென்னிலங்கையின் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல்மாகாணத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் மத்தியிலே இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற உணர்வு கொந்தளித்துக்கொண்டிருக்கின்றது. எவர் என்ன சொன்னாலும் இதுதான் யதார்த்தம்.

எனவே நமது மக்களின் எண்ணக்கருத்திற்கு ஏற்ப மலையகக் கட்சிகள் செயற்பட வேண்டும். ஆட்சி மாற்றத்திற்காக மலையக கட்சிகள் எதிரணி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கவேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழர் போராட்டம்

இந்நாட்டிலே இனியொரு ஆயுதப் போருக்கு இடம் கிடையாது. போர் முடிந்துவிட்டது. ஆனால் போராட்டம் முடியவில்லை. தமிழ் மக்களின் போராட்டத்தின் வடிவம் மாற வேண்டும். அது ஜனநாயக போராட்டமாக முன்னெடுக்கப்படவேண்டும். அதிகார பகிர்வுக்காகவும், நீதி, சமாதானம் ஆகிய நோக்கங்களுக்காகவும் அரசியல் முதிர்ச்சியுடனான சாணக்கியத்துடன் நாம் காய்நகர்த்த வேண்டும்.

எமது போராட்டத்தைச் சிங்கள அரசியல் அணிகளுடன் இணைந்து முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களை நாம் ஒருபோதும் தவறவிடக்கூடாது. புலம் பெயர் தமிழர்கள் இலங்கையிலே ஆட்சி மாற்றத்திற்கும், தமிழர்களின் போராட்ட வடிவத்தின் ஜனநாயக மாற்றத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டும்.

களத்தில் இருந்தபடி நேரடியாக ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழ்த் தலைமைகளை அடையாளங்கண்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இன்றைய அரசாங்கம்

இன்றைய அரசாங்கத்திற்கு வாக்களிப்பதற்கு தமிழ் மக்களுக்கு எந்தவொரு காரணமும் கிடையாது. தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலும், மனித உரிமைகள் தொடர்பிலும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களிடம் தோல்வியடைந்துவிட்டது. சொல்லொணா துன்பங்களை விளைவித்த யுத்தத்திற்கு இந்த அரசாங்கம் அரசியல்-இராணுவத் தலைமையைத் தந்தது.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்று சொல்லி தாமே ஆரம்பித்து வைத்த சர்வக்கட்சி கடையை இந்த அரசாங்கமே இழுத்து மூடிவிட்டது. இன்று இந்த யுத்தத்தையடுத்து தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தையும் இந்த அரசாங்கம் தவறவிட்டு விட்டது.

எதிர்க்கட்சி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிப்பதானது எமது வரலாற்று கடமையல்ல. அது நாம் வாழ்கின்ற காலத்தின் கட்டாயமாகும். சரத் பொன்சேகா நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரண்டு அணியிடமும் உறுதியளித்துள்ளார்.

கடந்தகால ஜனாதிபதிகளின் இத்தகைய உறுதிமொழிகளுக்கும், தற்போதை நடைமுறைக்கும் இடையில் இருக்கின்ற வேறுபாடுகள் சிந்திப்பவர்களுக்கு புரியும்.

13ஆவது திருத்தமும் தேசிய இனப்பிரச்சினையும்

பொது வேட்பாளர் சரத் பொன்சேகா 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என பகிரங்கமாக கூறியிருப்பது நல்ல விடயம். இந்த நிலைப்பாடுகூட இதுவரையில் ஆளுங்கட்சியின் வேட்பாளர் கூறவில்லை.

ஜனாதிபதி தேர்தலை அடுத்து ஐதேக, ஸ்ரீலசுக மக்கள் பிரிவு, ஜனநாயக மக்கள் முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணிக்கும், ஜேவிபிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுத்து சர்வ கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கத்தை ஜனாதிபதி நியமிப்பார்."

இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தெற்குத் தமிழர்கள் எதிரணி பொது வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் : மனோ கணேசன்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates