jkr
แสดงบทความที่มีป้ายกำกับ மனோ கணேசன் எம்.பி. แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ மனோ கணேசன் எம்.பி. แสดงบทความทั้งหมด

மேல், மலையக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றி: மனோ கணேசன்


நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலிலே, இந்நாட்டின் மேற்கு, மலையக, வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் வாழும் தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்துள்ளார்கள். தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதில் நமது கட்சியும், நம்முடன் இணைந்து மலையகத்திலும், வடக்கிலும், கிழக்கிலும் செயற்பட்ட கட்சிகளும், மாணவர் மற்றும் சமூக அமைப்புகளும் பாரிய பங்களிப்புகளை வழங்கியுள்ளன என மனோ கணேசன் எம்.பி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை எமது கூட்டு செயற்பாடு பெற்றுக்கொடுத்தற்கு இணையாக, பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை எமது கூட்டணிக்கு பெற்றுக்கொடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கும்;, ஜேவிபிக்கும், ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் முடியாமல் போனது ஏன் என நாம் சிந்திக்கவேண்டும்.

இதன் பின்னணி தேர்தல் முறைகேடுகளா? என்ற கேள்விக்கு விடைதேட வேண்டும். எனவே தமிழ் பேசும் மக்கள் சரத் பொன்சேகாவின் தோல்விக்காக ஒப்பாரி வைக்க முடியாது. ஏனென்றால் நாம் அடைந்துள்ளது தோல்வியல்ல, வெற்றியேயாகும். தமிழ் மக்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்தி எமது அடுத்தகட்ட நகர்விற்கு நாங்கள் தயாராகவேண்டும். இதுதொடர்பில் ஆராய்வதற்காக நமது கட்சியின் மத்தியக்குழு பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திரத் தினத்தன்று கொழும்பிலே கூடி முடிவெடுக்கும்.

ஆட்சி மாற்றம் என்ற கருத்தை நாடெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலே முன்னெடுப்பதில் எமது கட்சி முதலிடம் வகித்தது. தேசிய ரீதியாக இந்த கருத்தை தமிழ் மக்கள் மத்தியிலே நாங்கள் தமிழ் மொழியிலே கொண்டு சென்றோம். அதேவேளையில் சிங்கள மக்கள் மத்தியிலே தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையை சிங்கள மொழியிலே கொண்டுசென்றோம்.

இந்த அடிப்படையில் எமது கட்சி வடக்கிற்கும், தெற்கிற்கும் பாலமாக செயற்பட்டது. தமிழ் மக்களின் வாக்குகளை மாத்திரம் வைத்துக்கொண்டு ஒருபோதும் வெற்றிபெற முடியாது. தமிழ் மக்களின் வாக்குகள் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளுடன் ஒன்று சேரும்போதே இந்த மாற்றத்தை ஏற்படுத்திட முடியும். இதை நாங்கள் தெளிவாக புரிந்துகொண்டு செயற்பட்டோம்.

சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுத்தருவது, ஐக்கிய தேசிய கட்சி, ஜேவிபி மற்றும் வேட்பாளர் சரத் பொன்சேகா ஆகியோரது பொறுப்புகளாகும். அதேபோல் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் அளிக்கும் வாக்குகளை பாதுகாப்பதும், தேர்தலிலே முறைகேடுகள் நடக்;காவண்ணம் அவதானத்துடன் எச்சரிக்கையாய் இருப்பதும் இந்த இரண்டு பெரும்பான்மை கட்சிகளின் பொறுப்பாகும். இந்த பொறுப்புகளை இந்த இரண்டு கட்சிகளும் சரிவர செய்துள்ளனவா என்பது பற்றிய விமர்சனம் இன்று எழுந்துள்ளது. இதற்கான விடைகளை சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் வேண்டி நிற்கின்றார்கள்.

கொழும்பு மாநகரத்தில் ஐந்து தொகுதிகளிலும், தெஹிவளை தொகுதியிலும் எமது கட்சியின் பொறுப்பாளர்கள் பிரசார பணிகளில் ஈடுபட்டார்கள். தமிழ் மக்கள் எமது கோரிக்கையை அடுத்து ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார்கள். இதனாலே இந்த ஆறு தொகுதிகளிலும் வெற்றி பெற முடிந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் போது செயற்படாத எந்தவொரு கட்சியும், அரசியல்வாதிகளும் எமது மக்களின் வாக்களிப்பிற்கு உரிமைக்கோர முடியாது. அதேபோல் கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, நீர்கொழும்பு தொகுதிகளிலும், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, மத்துகமை தொகுதிகளிலும் எமது பொறுப்பாளர்கள் பணியாற்றியதன் காரணமாக தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார்கள்.

அதேவேளையில் மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தில் எமது கட்சியும், தொழிலாளர் தேசிய சங்கமும், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியும் கூட்டாக செயற்பட்டுள்ளன. இந்த செயற்பாட்டின் காரணமாக நுவரெலியா மாவட்டத்தை வெற்றிக்கொள்ள முடிந்துள்ளது. அதுபோலவே கண்டி, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் எமது பொறுப்பாளர்கள் பணியாற்றியுள்ளார்கள். இந்த மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார்கள்.

வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், வன்னி ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் பால்வேறு இடறுபாடுகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார்கள். வன்னி மாவட்டத்தின் மன்னார், வவுனியா ஆகிய தொகுதிகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு, மட்டக்களப்பு, கல்குடா தொகுதிகளிலும் அம்பாறை மாவட்டத்திலும் எமது கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் தேர்தல் பணியாற்றினார்கள்.

அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அரசாங்கத்தின் சார்ப்பிலே தமிழ் மக்களின் வாக்குகளை கோரிய அனைத்து மலையக அமைச்சர்களும், வடக்கு, கிழக்கு அமைச்சர்களும் தங்களது மாவட்டங்களிலே படுதோல்வியடைந்துள்ளார்கள். இந்த உண்மையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகத் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

இத்தகைய தமிழ் தலைவர்களுக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடையாது என்பதை இன்று தமிழ் மக்கள் அறிவித்து விட்டார்கள். இந்நிலையில் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலையடுத்து பாராளுமன்ற தேர்தலிற்கு தயாராவதாக இன்று அறிவித்துள்ளது.

. எனவே நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காகவும், எமது கட்சியின் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிப்பதற்காகவும் நாடெங்கிலும் இருந்து பேராளர்கள் கலந்துகொள்ளும் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பிலே கூடுகின்றது. "எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழ்க் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுங்கள் : அரசிடம் மனோ கணேசன் கோரிக்கை


யாழ். வலி-வடக்கிலும், திருகோணமலை சம்பூரிலும் அமைந்துள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். யாழ்ப்பாணம், அநுராதபுரம், நீர்கொழும்பு, கொழும்பு, கண்டி ஆகிய சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இவை இரண்டு விடயங்களையும் உடனடியாக அரசாங்கம் செய்தாகவேண்டும்" என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற குழுவின் தலைவருமான மனோ கணேசன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற குழு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் குழுவின் செயலாளர் ஜயலத் ஜயவர்தன எம்பி, முஜிபர் ரஹ்மான் ஆகியோருடன் இணைந்து மனோ கணேசன் கலந்து கொண்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

இன்று உயர் பாதுகாப்பு வலயங்கள் எதற்கு?

"இன்று யாழ்ப்பாணத்தில் மழைபெய்தால் கொழும்பிலே சிலர் குடைபிடிக்கிறார்கள். யாழ்ப்பாண மக்கள் மழையில் நனைந்தால் இங்கே சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. இத்தகைய விசித்திரங்களுக்கு காரணம் ஒன்றும் பரம இரகசியம் கிடையாது.

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலே தமிழ் மக்களின் வாக்குகளை வாங்குவதற்கு தென்னிலங்கையிலே போட்டாபோட்டி நடந்து கொண்டிருக்கின்றது.

நான் இன்று யாழ்ப்பாணம் சென்று அங்கு நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளேன். எனக்கு அடிக்கடி யாழ்ப்பாணம் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. ஆனால் வடக்கிலும், கிழக்கிலும் வாழ்கின்ற மக்களுக்காக நாங்கள் இடைவிடாது குரல்கொடுத்துப் போராடி வருகின்றோம்.

எனவே நான் யாழ்ப்பாணத்திலே ஒரு அரசியல் விருந்தினர் அல்லர். யாழ் மக்களின் உணர்வுகள் எங்கள் உயிருடன் எப்பொழுதும் கலந்திருக்கின்றது.

போர் நடைபெறும் பொழுது விடுதலைபுலிகளின் பீரங்கி தாக்குதல் எல்லைக்குள் இராணுவ முகாம்கள் இருந்த காரணங்களை காட்டி அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலங்களை அமைத்தது. இன்று போர் இல்லை. விடுதலை புலிகளின் பீரங்கிகளும் இல்லை.

எனவே எந்த அடிப்படையில் இன்னமும் உயர்பாதுகாப்பு வலயங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன என இந்த அரசாங்கத்தை நான் கேட்கின்றேன்.

வலிகாமம் வடக்கிலே சுமார் 3800 ஏக்கர் நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் கூறியுள்ளனர். எங்கள் மக்களின் வீடு, வாசல், நிலம் ஆகியவை மாத்திரம் அல்ல, எங்கள் இனத்தின் வரலாறும் சுற்றி வளைக்கப்பட்டிருகின்றது.

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்

அதேபோல் இன்று இன்னொரு எரியும் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையாகும். இந்த ஊடக சந்திப்பு நடைபெறும் இந்நேரத்திலே யாழ்ப்பாணம், அநுராதபுரம், நீர்கொழும்பு, கொழும்பு, கண்டி ஆகிய சிறைச்சாலைகளிலே தமிழ்க் கைதிகள் சாகும்வரை உண்ணாநோன்பை கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

போர் முடிந்து நாடு விடுதலை பெற்றுவிட்டதாக கூறுகின்ற இந்த அரசாங்கத்திற்குப் பல்லாண்டுகளாக சிறைவாழ்க்கை வாழ்ந்து தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறைக்கம்பிகளுக்கு பின்னால் தொலைத்துவிட்ட இவர்களுக்கு விடுதலை அளிக்கவேண்டும் எனத் தோன்றவில்லையா?

கடந்த பல மாதங்களாக அமைச்சர் மிலிந்த மொரகொட தமிழ்க் கைதிகள் தொடர்பில் பல்வேறு அறிக்கைகளையும், உறுதிமொழிகளையும் அள்ளிவீசி கொண்டிருக்கின்றார்.

இனிமேல் எங்களுக்கு உறுதிமொழிகள் தேவையில்லை. பொது மன்னிப்பு அல்லது சட்ட ரீதியான பிணை அல்லது புனருத்தாபன திட்டங்களில் சேர்த்துக்கொள்ளல் ஆகிய ஏதாவது ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும். கைதிகளின் இத்தகைய உணர்வுகளை நான் அரசாங்கத்திற்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று அங்கு உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளைச் சந்திப்பதற்கும் விரும்புகின்றேன்.

கிழக்கில் புதிய ஆயுதக்குழு

கிழக்கிலே இன்று புதிதாக மக்கள் விடுதலை இராணுவம் என்ற அமைப்பு தோன்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது அரசாங்கத்தின் சதிவேலை என்றே நாம் சந்தேகிக்கின்றோம்.

எதிர்வரும் தேர்தல் காலத்தில் ஜனநாயக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி தலைவர்களைக் கொலை செய்வதற்கும் திட்டம் தீட்டப்படுகின்றதா என இந்த அரசைக் கேட்க விரும்புகின்றேன்.

உலகத்திலேயே சிறந்த இராணுவம் நமது நாட்டு இராணுவம் என மார்தட்டும் இந்த அரசாங்கம், தனது படைப்பிரிவை அனுப்பி வைத்து இந்த சட்டவிரோத ஆயுதக்குழுவைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாதா?

எனது பாதுகாப்புக்கு தொடர் ஜீப் அணியை வழங்கியது இந்த அரசாங்கம் அல்ல. அது நீதி மன்றத்தால் வழங்கப்பட்டதாகும். ஆனால் அந்த நீதி மன்ற உத்தரவையும் இந்த அரசாங்கம் இன்று மீறுகின்றது.

எனக்கு தருவதற்கு மேலதிக வாகனம் இல்லை என்று கூறுகின்ற பொலிஸ் திணைக்களம் நேற்று அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத தனிநபர்களுக்கூட பாதுகாப்பு வாகனங்களையும், அதிகாரிகளையும் வழங்கியுள்ளது.

இது அரச வளங்களைத் தமது கட்சி அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தும் செயலாகும். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை "என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தெற்குத் தமிழர்கள் எதிரணி பொது வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் : மனோ கணேசன்


தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஆட்சிமாற்றத்திற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

வடக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளை அடுத்து இறுதி முடிவு தேர்தல் நியமன தினத்திற்கு முன் அறிவிக்கப்படும் என்ற ஜனநாயக மக்கள் முன்னணி அரசியல் குழு எடுத்துள்ள முடிவை கட்சியின் தலைவர் மனோ கணேசன் எம்பி கொழும்பில் இன்று (03.12.2009) காலை கிராண்ட் ஒரியன்டல் விடுதியில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

இம்மாநாட்டில் மனோ கணேசன் எம்பியுடன், கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், தேசிய அமைப்பாளர் பிரபா கணேசன், ஜதொகா பொதுச்செயலாளர் எம்.சிவலிங்கம், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.ராஜேந்திரன், சிரேஷ்ட உபதலைவர் கங்கை வேணியன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் மொஹமட் ஷியாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் மனோ எம்பி தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது :

"ஆட்சி மாற்றத்திற்கான வாக்கு சரத் பொன்சாகாவுக்கு எந்தவித அரசியல் நிபந்தனைகளுமின்றி வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்களை நாம் கோரவில்லை. தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இன்றைய ஆட்சியை மாற்றும் வாக்காகும்.

யுத்த வெற்றியினை முன்னிலைபடுத்தி தேர்தல்களில் இலகு வெற்றி பெற்றிடலாம் என இந்த அரசாங்கம் மனப்பால் குடித்தது. ஆனால் யுத்த வெற்றிக்கு காரணமானவரையே பொது வேட்பாளராக எதிரணி நிறுத்துவதால் இன்று அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளது. இந்த ஆட்சியை மாற்றுவதற்கு இதைவிட சிறந்த வழி எதுவும் கிடையாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு

இன்றைய ஆட்சியை மாற்றியமைத்து புதிய தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தி, தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நமது செயற்திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

வடக்கு கிழக்கின் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வாழும் தமிழர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடத்தப்படும்.

இன்றைய அரசாங்கத்தை மாற்றிடவேண்டும் என்ற உணர்வுகள் இன்று வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மனங்களில் ஒலிப்பதாக எமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த உணர்வுகளை எதிரொலித்து ஆட்சிமாற்றம் என்ற ஒரே அடிப்படையில் எதிரணி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஆதரிக்கவேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மலையகக் கட்சிகளுக்கும் அழைப்பு

தென்னிலங்கையின் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல்மாகாணத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் மத்தியிலே இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற உணர்வு கொந்தளித்துக்கொண்டிருக்கின்றது. எவர் என்ன சொன்னாலும் இதுதான் யதார்த்தம்.

எனவே நமது மக்களின் எண்ணக்கருத்திற்கு ஏற்ப மலையகக் கட்சிகள் செயற்பட வேண்டும். ஆட்சி மாற்றத்திற்காக மலையக கட்சிகள் எதிரணி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கவேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழர் போராட்டம்

இந்நாட்டிலே இனியொரு ஆயுதப் போருக்கு இடம் கிடையாது. போர் முடிந்துவிட்டது. ஆனால் போராட்டம் முடியவில்லை. தமிழ் மக்களின் போராட்டத்தின் வடிவம் மாற வேண்டும். அது ஜனநாயக போராட்டமாக முன்னெடுக்கப்படவேண்டும். அதிகார பகிர்வுக்காகவும், நீதி, சமாதானம் ஆகிய நோக்கங்களுக்காகவும் அரசியல் முதிர்ச்சியுடனான சாணக்கியத்துடன் நாம் காய்நகர்த்த வேண்டும்.

எமது போராட்டத்தைச் சிங்கள அரசியல் அணிகளுடன் இணைந்து முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களை நாம் ஒருபோதும் தவறவிடக்கூடாது. புலம் பெயர் தமிழர்கள் இலங்கையிலே ஆட்சி மாற்றத்திற்கும், தமிழர்களின் போராட்ட வடிவத்தின் ஜனநாயக மாற்றத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டும்.

களத்தில் இருந்தபடி நேரடியாக ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழ்த் தலைமைகளை அடையாளங்கண்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இன்றைய அரசாங்கம்

இன்றைய அரசாங்கத்திற்கு வாக்களிப்பதற்கு தமிழ் மக்களுக்கு எந்தவொரு காரணமும் கிடையாது. தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலும், மனித உரிமைகள் தொடர்பிலும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களிடம் தோல்வியடைந்துவிட்டது. சொல்லொணா துன்பங்களை விளைவித்த யுத்தத்திற்கு இந்த அரசாங்கம் அரசியல்-இராணுவத் தலைமையைத் தந்தது.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்று சொல்லி தாமே ஆரம்பித்து வைத்த சர்வக்கட்சி கடையை இந்த அரசாங்கமே இழுத்து மூடிவிட்டது. இன்று இந்த யுத்தத்தையடுத்து தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தையும் இந்த அரசாங்கம் தவறவிட்டு விட்டது.

எதிர்க்கட்சி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிப்பதானது எமது வரலாற்று கடமையல்ல. அது நாம் வாழ்கின்ற காலத்தின் கட்டாயமாகும். சரத் பொன்சேகா நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரண்டு அணியிடமும் உறுதியளித்துள்ளார்.

கடந்தகால ஜனாதிபதிகளின் இத்தகைய உறுதிமொழிகளுக்கும், தற்போதை நடைமுறைக்கும் இடையில் இருக்கின்ற வேறுபாடுகள் சிந்திப்பவர்களுக்கு புரியும்.

13ஆவது திருத்தமும் தேசிய இனப்பிரச்சினையும்

பொது வேட்பாளர் சரத் பொன்சேகா 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என பகிரங்கமாக கூறியிருப்பது நல்ல விடயம். இந்த நிலைப்பாடுகூட இதுவரையில் ஆளுங்கட்சியின் வேட்பாளர் கூறவில்லை.

ஜனாதிபதி தேர்தலை அடுத்து ஐதேக, ஸ்ரீலசுக மக்கள் பிரிவு, ஜனநாயக மக்கள் முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணிக்கும், ஜேவிபிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுத்து சர்வ கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கத்தை ஜனாதிபதி நியமிப்பார்."

இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரதிநிதி ஒருவர் என்னைச் சந்தித்துப் பேசினார் -மனோகணேசன் எம்.பி


முப்படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரதிநிதி ஒருவர் தன்னைச் சந்தித்துப் பேசினார் என்று மனோகணேசன் எம்.பி. கூறியுள்ளார். இலங்கையில் உள்ள ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் தொடர்பாக அவரது நிலைப்பாட்டை ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவிக்க வேண்டும் என்றும் மனோகணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றக்குழு அறையில் நேற்று முன்தினம் இடம் பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மனோகணேசன் இதனைத் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரதிநிதி ஒருவர் இரு தினங்களுக்கு முன் என்னைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் தொடர்பான நிலைப்பாடுகள் பரிமாறப்பட்டன. பொன்சேகாவின் பிரதிநிதி என்னைச் சந்தித்துப் பேசுகிறார் என்றால் பொன்சேகா தமிழர் தொடர்பில் ஏதோ சொல்லப்போகின்றார் எனத் தெரிகின்றது. சரத் பொன்சேகாவுடனோ அல்லது ஜனாதிபதியுடனோ எனக்குப் பிரச்சினை இல்லை. நான் அவர்களை எதிரிகளாகப் பார்க்கவில்லை. ஆனால் தமிழர்களுக்குப் பிரச்சினைகள் வரும்போது அம்மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றேன். அம்மக்களுக்கு ஆதரவாக நான் குரல் கொடுக்காவிட்டால் அவர்கள் என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியதில் அர்த்தமில்லாமல் போய்விடும். ஆனால், தமிழ் உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளுக்காக சுகபோக வாழ்க்கைக்காக அரசுடன் இணைந்துகொண்டு தமிழ் மக்களைப் புறக்கணிக்கின்றனர். இந்நிலையில்தான் சரத் பொன்சேகா பற்றிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவர் யுத்தத்தின் பிரதான பங்காளி. தமிழ் மக்களை மீட்பதற்காகவே யுத்தம் செய்யப்பட்டது என்று பொன்சேகா கூறுகின்றார். அப்படியாயின் மீட்கப்பட்ட மக்களை ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன். இந்நாட்டில் உள்ள தமிழ்பேசும் மக்கள் தொடர்பாக சரத் பொன்சேகா தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறவேண்டும். கடந்த இரண்டு நாள்களுக்கு முன் என்னைச் சந்தித்த சரத் பொன்சேகாவின் பிரதிநிதியிடம் தமிழ் மக்கள் தொடர்பான எனது கருத்துகளை முன்வைத்தேன். நாட்டில் ஊழல், மோசடிகளை ஒழித்தல், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இல்லா தொழித்தல், முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியமர்த்தல், தமிழர்களுக்குத் தீர்வு வழங்குதல் போன்றவை தொடர்பாக சரத் பொன்சேகா அவரது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று நான் அவரது பிரதிநிதியிடம் கூறினேன் என்றும் மனோகணேசன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கைகூப்பி உயிர்ப்பிச்சை கேட்டவரை கொலைசெய்ட அராஜகத்திற்கு எதிராக 4 ஆம் திகதி ஆர்ப்பாட்டம்

கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பல நூறு பேர் பார்த்திருக்க, பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல், இன, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புகளும் கலந்துகொள்ள வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ எம்பி மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்நாட்டிலே இன்று இத்தகைய காட்டுமிராண்டி கலாசாரம் வேகமாக வளர்த்து வருகின்றது. இந்த கொலை சம்பவத்தில் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸ் அதிகாரி ஒருவரே முன்னின்று இத்தகைய பாவ காரியத்தை செய்து முடித்திருப்பதை கண்டு முழு நாடுமே தலைகுனிய வேண்டியுள்ளது.

கையெடுத்து வணங்கி உயிர் பிச்சை கேட்ட 26 வயது இளைஞரை அடித்து கடலில் தள்ளிய காட்சியை தொலைக்காட்சிகளில் செய்திப்படமாக பார்த்து அகில இலங்கையும் அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்த சம்பவத்தின் காரணமாக கைது இடம்பெற்று இருந்தாலும், இத்தகைய அராஜகப் போக்கை நாம் கண்டிக்காமல் அமைதியாக இருப்போமானால், இது தொடர்கதையாக மாறிவிடும். ஏற்கனவே அங்குலான பகுதியில் இரு இளைஞர்கள் பொலிஸ் அராஜகத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நாம் மறக்கமுடியாது.

எனவே அனைத்து தரப்பினரும் தங்களது வழமையான கடமைகளை ஒத்திவைத்துவிட்டு எதிர்வரும் புதன்கிழமை 4ஆம் திகதி பகல் 12.00 மணிக்கு கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றுக்கூடி எமது சாத்வீக எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்.

மேல்மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தலைமையிலான முஸ்லிம் உரிமைகள் இயக்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் தமது ஒத்துழைப்பை இந்த அராஜகத்திற்கு எதிரான நமது ஆர்ப்பாட்டத்திற்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், மாகாணசபை உறுப்பினருமான எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார
Video snapshots from an onlooker (Courtesy: Daily Mirror)
Video snapshots from an onlooker (Courtesy: Daily Mirror)






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழ் பேசும் மக்கள் எந்தவொரு தேர்தலுக்கும் தயாராக வேண்டும்:மனோ கணேசன்


வடக்குகிழக்கு மற்றும் தெற்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தல் ஆகிய எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்குத் தயாராக வேண்டும்.

பெரும்பான்மை கட்சிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து எமது மக்களின் அரசியல் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான அரசியல் தந்திரங்களை நாம் கையாள வேண்டிய வேளை வந்துவிட்டது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

விரைவில் கைச்சாத்திடப்படவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி, தமிழ்ப் பேசும் கட்சிகளிடையே ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும்,

நாடாளுமன்ற தேர்தலின் போதும், ஜனாதிபதி தேர்தலின்போதும் கையாளவேண்டிய வழிமுறைகள் பற்றி நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலின் போது ஒட்டுமொத்தமாக தமிழ், முஸ்லிம் கட்சிகள் எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பிரகடனப்படுத்தி அவற்றுக்கான பெரும்பான்øம கட்சிகளின் நிலைப்பாடுகளைக் கண்டறிந்த பின்னரே முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடாகும். இதுவே ஐக்கிய தேசியக் கட்சியுடனான எமது கூட்டணி தேர்தல் உடன்பாடுமாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சரத்பொன்சேகா பொது வேட்பாளரா? நாம் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நிறுத்தப்படும்போது தாம் பூரண ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக ஜேவிபி மற்றும் சில கட்சிகள் தெரிவித்துள்ளது. அதே நேரம் இம்முன்னணியில் பொது வேட்பாளராக பொன்சேகா நிறுத்தப்படும்போது நாம் முன்னணியில் இருந்து வெளியேறுவோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழகத் தலைவர்களின் பதில்களே தேசிய நல்லிணக்கத்திற்கு வழிகாட்ட முடியும் - மனோ கணேசன் எம். பி


தமிழ் மக்களின் மீதான பாரிய மனித உரிமை மீறல்களுக்கு தமிழகத் தலைவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தரக்கூடிய பொறுப்புள்ள பதில்களே இலங்கையில் தேசிய நல்லிணக்கத்திற்கு வழிகாட்ட முடியும் என தமிழ் மக்களாகிய நாம் நம்புகிறோம்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு அழைக்கப்பட்டதையும், அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அவர்கள் தூதுக் குழுவினராக இலங்கைக்கு வருகை தந்ததையும் நாங்கள் வரவேற்கின்றோம்.

ஆனால் இங்கு வருகை தரும் தமிழக அரசியல் தலைவர்களிடம் நற்சான்றிதழ் பெறுவதற்காக தமது ஆட்சியின் அலங்கோலங்களை மறைத்து புதிய காட்சிகளை அரங்கேற்றி காட்டுவதற்காக கடந்த ஒரு வாரகாலமாகவே இலங்கை அரசாங்கம் பாரிய முயற்சிகளை எடுத்து வருகின்றது என்பதை தமிழக தலைவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றோம்.

என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மனித உரிமைகள் தொடர்பிலான மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates