ஆதரவாளர்களை அநாதையாக்காமல் யானை சின்னத்தில் கட்சி வேட்பாளரை நிறுத்த வேண்டும்

பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்திருப்பதன் மூலம் கட்சியின் ஆதரவாளர்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். ஆதரவாளர்களின் கண்களை கட்டி காட்டுக்குள் தள்ளி விட்டுள்ளனர் . .
ஆதாரவாளர்களை அநாதையாக்காமல் ஜனாதிபதி தேர்தலில் கட்சி வேட்பாளரை நிறுத்தி யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கவேண்டும். அதற்கு இன்னும் அவகாசம் இருக்கின்றது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் குருணாக்கல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்தார்..
நான் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் , கட்சிக்கு ஜனநாயக ரீதியில் தலைவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையேல் அரசியலிருந்து வீட்டுக்கு செல்வதா? ஓய்வெடுப்பதா? என்பது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றுக்கு வருவேன் என்றும் அவர் சொன்னார். கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலியுடன் நிப்போன் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். .
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது, .
அரசாங்கம் தேர்தலொன்றை நடத்துவதற்கு தயாராகிவருவதனால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாமும் தயாராகவேண்டும் என்று கட்சியின் தலைவரிடம் கேட்டுக்கொண்டோம் . அவரை பல தடவைகள் கௌரவமாக பாதுகாத்தோம். அவருக்கு எதிராக 1999 ஆம் ஆண்டு சூழ்ச்சி செய்யப்பட்டது அன்றிலிருந்தே நாம் பாதுகாத்தோம்..
பிரதி தலைவர் கரு ஜயசூரிய அரசாங்கத்துடன் இணையும் போது தலைவரே நாமே பாதுகாத்தோம். கட்சிக்குள் காணப்படுகின்ற குறைப்பாடுகளை சுட்டிக்காட்டினோம் அதற்கு தீர்வு காணமுடியாவிடின் தலைமைப்பதவியிலிருந்த விலகி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினோம். கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் வாதாடினோம். அப்போதெல்லாம் அரசாங்கத்தின் ஒப்பந்தத்தின் பிரகாமே முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தனர். சார்பான ஊடகங்களின் மூலமாக எங்களுக்கு சேறுபூசினர். கட்சிக்குள் காணப்படுகின்ற குறைப்பாடுகளை கண்டறிந்து கட்சியின் தலைமையின் கவனத்திற்கு கொண்டுவந்தமையினால் கருத்துக்களை தெரிவிப்பதற்கு எங்களை ஊடகங்களுக்கு செல்வதற்கு அனுமதிப்பதில்லை. அமைப்பாளர்கள் இன்றியே மாகாண சபைத்தேர்தல்களுக்கு முகம்கொடுத்தோம். அத்தருணத்தில் கருஜயசூரியவை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டு தனது தலைமைத்துவத்தை காத்துக்கொண்டார். ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் அமைப்பாளர்கள் நியமிக்கப்படவே இல்லை. ஜனநாயகத்தை பற்றியே குரல் எழுப்பப்படுகின்றது. எனினும் கட்சியின் செயற்குழுவிற்குள் ஜனநாயகம் இல்லை. ஜனநாயக ரீதியில் தலைவரை நியமிக்குமாறு கோரினோம் அதற்கும் செவிசாய்க்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் கட்சியையும் யானை சின்னத்தையும் மாற்றவேண்டாம் என்று கோரினோம். .
தலைவர் பதவியை பாதுகாத்துக்கொள்வதற்காக கட்சியின் பெயர் விற்கப்பட்டு விட்டது. தேர்தலில் ரணில் முன்வந்தால் தோல்வியடைவார் என்று தெரியும். அதனால் தான் எஸ்.பி போட்டியிடுவதற்கு தயராக இருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிடுவதற்கு கட்சிக்குள் பலர் இருக்கின்றனர். ஆசிய ஜனநாயக குழுவின் தலைவரும் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதாக கூறுகின்றவரிடம் ஜனநாயகம் இல்லை. கட்சி ஆதரவாளர்களை கண்ணை கட்டி காட்டுக்குள் தள்ளிவிட்டுள்ளனர். கனவுலோகத்திலிருந்து வெளியே வரவேண்டும் அப்போது தான் அநாதையாக்கப்பட்டுள்ள ஆதரவாளர்களை பாதுகாக்க முடியும். .
ஐக்கிய தேசியக்கட்சியினரே அச்சுறுத்தி செயற்குழுவினரை பயமுறுத்தி தீர்மானங்களை எடுக்காமல் ஜனாதிபதி தேர்தலில் கட்சி வேட்பாளர், கட்சி சின்னத்தை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் விரைவில் தீர்மானமொன்று எட்டப்படும். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவிலயாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், .
கட்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கு நடவடிக்கை எடுக்காவிடின் அரசியலிருந்து வீட்டுக்கு போவதா? ஓய்வு பெறுவதா? அல்லது அரசாங்கத்துடன் இணைவதா? என்பது தொடர்பில் பின்னர் தீர்மானிக்கப்படும். அரசாங்கத்தில் பதவிகளை ஏற்பதாயின் பலர் செல்வதற்கு முன்னரே நான் பதவியேற்றிருப்பேன் என்றார். .
அசாத் சாலி கருத்து .
ஊடகவிலயாளர் மாநாட்டில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் அசாத் சாலி கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; செயற்குழுவிலிருந்து என்னை நீக்கியதை இட்டு நான் சந்தோஷமடைகின்றேன் அதற்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். பொது வேட்பாளர் சரத் பொன்சேகா 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இது சிங்கள நாடு, பௌத்த சிங்களவர்களுக்கே உரித்துடையது. சிறுபான்மையினர் எதனையும் கேட்கமுடியாது அவர்கள் வெளியிலிருந்து இங்குவந்தவர்கள் என்று கூறியிருந்தார்..
அவரின் கூற்று தொடர்பில் அரசாங்கத்திலிருக்கு அமைச்சர்கள், சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள், எதிர்க்கட்சியினர் அல்லது முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர்கள் குரல் கொடுப்பார்கள் என எதிர்பார்த்திருந்தேன் அது நடைபெறவில்லை..
இதனையடுத்தே 12 கட்சிகளை இணைத்துக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதற்கு நான் தலைமையேற்றேன். கடந்த தேர்தல்களில் யானை சின்னத்திற்கு சிறுபான்மையினர் கண்ணை மூடிக்கொண்டு புள்ளடியிட்டனர் ஆனால் இன்று யானை சின்னமோ, ஐக்கிய தேசியக்கட்சியோ, கட்சியின் தலைவரோ தேர்தலில் இல்லை. .
இது வரலாற்றில் பதியப்படவேண்டிய விடயமாகும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் நாம் அவருக்கு பின்னால் சென்றோம் கட்சிக்கு சிறுப்பான்மை இனத்திற்கு இடமில்லை என்பதுடன் தொடர்ச்சியாக ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி முக்கிய விடயங்களை வெளிப்படுத்துவோம் என்றார்.
0 Response to "ஆதரவாளர்களை அநாதையாக்காமல் யானை சின்னத்தில் கட்சி வேட்பாளரை நிறுத்த வேண்டும்"
แสดงความคิดเห็น