கணக்கு வாக்கெடுப்பு, சட்டத்திற்கும் அரசியலமைப்புக்கும் முரணானது:ஐ.தே.க. தெரிவிப்பு

சர்ச்சைக்கு மத்தியில் கருத்து தெரிவித்த பிரதி நிதியமைச்சரும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான சரத் அமுனுகம, "நாங்கள் அரசியல் செய்கின்றோம். இது எதிர்க்கட்சிக்கு விளங்காத விடயமாகும். இதற்கு முன்னர் 10 தடவைகள் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று சுட்டிக் காட்டினார். நாடாளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்குக் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர்,அரசாங்கத்தின் 2010 ஆம் ஆண்டுக்கான கணக்கு வாக்கெடுப்பு பிரேரணையை முன்வைப்பதற்கு பிரதி நிதியமைச்சரும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான சரத் அமுனுகம எழுந்தார்.
இதனிடையே ஒழுங்குப் பிரச்சினையைக் கிளப்பிய எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் எம்.பி.யுமன. ஜோசப் மைக்கல் பெரேரா, "கணக்கு வாக்கெடுப்பை முன்வைப்பதற்கு முடியாது. எந்த சட்டத்திட்டத்தின் கீழ் இது சமர்ப்பிக்கப்படுகின்றது? அதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன" என்று சுட்டிக்காட்டினார்.
குறுக்கிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆதாரங்களை காட்டுமாறு கோரினர். இதனிடையே எழுந்த எதிர்க்கட்சி தலைவரும் ஐ.தே.க.தலைவருமான ரணில் விக்ரமசிங்க, "அரசியலமைப்பின் பிரகாரமும் சட்டத்தின் பிரகாரமும் கணக்கு வாக்கெடுப்பை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்க முடியாது. அரசாங்கம் அரசியலமைப்பின் 150ஆவது உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் பிரகாரம் சமர்ப்பிக்கின்றது. அவ்வாறு சமர்ப்பிக்க முடியாது. கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பிக்க வேண்டுமாயின் 26ஆம் பந்தியின் கீழ், அப்பால் சென்று செயற்படுவதற்கான யோசனை ஒன்றை முன்வைக்க வேண்டுமென அரசியலமைப்பின் 4ஆம் உபபிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.2003 (3)ஆம் பிரிவின் பிரகாரம் நிதி முகாமைத்துவ பொறுப்புச் சட்டத்தின் கீழும் இதனை கொண்டுவர முடியாது. அரசியலமைப்புக்கும், சட்டத்திற்கும் தலைவணங்கி நாம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமையினால் இரண்டுக்கும் கட்டுப்பட்டு செயற்படுவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
நாடாளுமன்றத்தின் மூலமே சட்டம் உருவாக்கப்படுகின்றது. சட்டத்தை மீறிச் செல்ல முடியுமென அரசியலமைப்பில் எங்குமே குறிப்பிடப்படவில்லை என்பதுடன்,நிதி முகாமைத்துவ பொறுப்புச் சட்டம் இதற்கு பொருந்தாது. யோசனையொன்றை முன்வைத்து அதற்கு பின்னர் கணக்கு வாக்கெடுப்புக்கான யோசனையை முன்வைக்க முடியும்" என்று சுட்டிக்காட்டினார்.
இதனிடையே குறுக்கிட்ட பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம, "அரசியலமைப்பின் (2) ஆம் பந்தி இங்குச் சவாலுக்கு உட்படுத்தப்படுகின்றது. கணக்கு வாக்கெடுப்பு இதற்கு முன் 10 தடவைகள் கொண்டு கொண்டுவரப்பட்டுள்ளன. இங்கு மட்டுமல்ல இந்தியாவிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.
கணக்கு வாக்கெடுப்பை முன்வைப்பதா இல்லையா? என்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் தீர்மானிக்க முடியாது. சபாநாயகரே தீர்மானிக்க வேண்டும். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே யோசனை ஒழுங்கு பத்திரத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.நாம் அரசியல் செய்கின்றோம். எதிர்க்கட்சிகள் சட்டத்தில் சிறு காரணத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு 'பொடி டிக்ஷ்' செய்கின்றது" என்று சுட்டிக் காட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கும் பிரதி அமைச்சர் சரத் அமுனுகமவுக்கும் இடையில் இடம்பெற்ற வாத பிரதி வாதங்களை அவதானித்த சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டார 26 (01) பிரகாரம் விசேட சந்தர்ப்பத்தின்போது நாடாளுமன்றத்திற்குப் பிரேரணையைக் கொண்டு வர முடியும். இன்று கூட கட்சித் தலைவர்களின் இணக்கத்துடனேயே கணக்கு வாக்கெடுப்பு யோசனை முன்வைக்கப்படுகின்றது" என்றார்.
இதனையடுத்து அவையிலிருந்த ஆளுந் தரப்பினர் மேசையில் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததுடன் சபாநாயகரின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம உரையாற்றுவதற்கு ஆரம்பித்தார். இதன் போது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மேசையிலிருந்த புத்தகங்களை கொண்டு மேசையில் தட்டி சத்தம் எழுப்பிக் குழப்பம் விளைவித்தனர்.ஐ. தே. க.வின் செயற்பாடுகளை பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களும் ஜே. வி. பி., தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் அமைதியாக இருந்து அவதானித்துக் கொண்டிருந்தனர். இதனிடையே பின்வரிசையிலிருந்த பிரதமர் ஆசனத்திற்கு அருகில் வருகை தந்த அமைச்சர் மேர்வின் சில்வா தனது கைக்கடிகாரத்தில் நேரத்தை சுட்டிக்காட்டினார். (அப்போது நேரம் முற்பகல் 11.25 மணியாகும் ) இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.தே.கவில் ஓரிரு உறுப்பினர்களைத் தவிர ஏனையோரும் ஆளுந்தரப்பை பார்த்து விட்டு அவையை விட்டு வெளியேறினர்.இதனையடுத்து உரையாற்றிய பிரதிநிதியமைச்சர் சரத் அமுனுகம, "ஐ.தே.க. தோல்வி கீதத்தை பாடி விட்டு வெளியேறி விட்டது. இன்று வெளியேறியவர்கள் எதிர்வரும் நான்கு மாதங்களுக்குப் பின்னர் சபையை விட்டு நிரந்தரமாகவே வெளியேறிவிடுவர்.
ஜப்பான் விளையாட்டு பொருட்களில் பொத்தானை அழுத்தினால் குரங்கு பொம்மைகள் ஆடும். அதே போல் ரணில் பொத்தானை அழுத்திவிட்டார். பொம்மைகள் ஆடுகின்றன" என்று கூறி தனது உரையைத் தொடர்ந்தார்
Read Users' Comments (0)