நாட்டு மக்களின் உயிர்களுடன் சுகாதார அமைச்சர் விளையாடுகிறார்- ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு

ருபெல்லா தடுப்பூசி ஏற்றப்பட்டமையினால் இரு சிறுமிகள் பலியானமைக்கான முழுப் பொறுப்பினையும் சுகாதார அமைச்சும் சுகாதார அமைச்சருமே ஏற்க வேண்டும். நாட்டு மக்களின் உயிர்களுடன் சுகாதார அமைச்சர் விளையாடுகின்றார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. ரேணுகா ஹேரத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் போது நாட்டின் சுகாதாரத் துறை மிகவும் மேம்பட்ட நிலையிலேயே காணப்பட்டது. அதற்குக் காரணம் அன்று சுகாதாரத்துறை அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் மனித உயிர்களுடன் விளையாடாமல் மக்களுக்காக தம்மை அர்ப்பணித்து தமது அமைச்சுப் பொறுப்பினை நிறைவேற்றியமையே ஆகும் என்றும் அவர் கூறினார். கொழும்பு 07இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது,
ருபெல்லா தடுப்பூசியேற்றிய இரு பிள்ளைகள் அண்மையில் மரணமானமை குறித்து நாட்டு மக்கள் நன்கு அறிவர். முதலில் மாத்தறையைச் சேர்ந்த ஓர் சிறுமியே மரணமானார். இதனையடுத்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் உடனடியாக ருபெல்லா தடுப்பூசிக்கு தடையை ஏற்படுத்தி பரிசோதனைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் நடந்தது என்ன? முதலாவது மரணம் ஏற்பட்ட ஒரு சில தினங்களில் ருபெல்லா தடுப்பூசி ஏற்றப்பட்டு மற்றுமொரு சிறுமி மரணமாகியுள்ளார். இந்த இரு மரணங்களுக்கும் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் அவரது அமைச்சுமே பொறுப்பேற்க வேண்டும். தற்போது ருபெல்லா தடுப்பூசி ஏற்றப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும் அவர் ஏதேதோ கூறி சமாளித்து தப்ப முனைகிறார்.
இலங்கையில் பயன்படுத்தப்படும் ருபெல்லா தடுப்பூசியானது இந்தியாவிலுள்ள சீரியல் கம்பனியொன்றிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. இது சோமாலியா, இலங்கை போன்ற மூன்றாம் வளர்முக நாடுகளுக்கே இறக்குமதி செய்யப்படுகின்றதே தவிர இந்தியõவில் அது பயன்படுத்தப்படுவதில்லை. அவர்கள் மேலைத்தேய நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர்.
இந்த உண்மையை சுகாதார அமைச்சு இதுவரை மூடி மறைத்தே செயற்பட்டு வந்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த ருபெல்லா தடுப்பூசியை அவர்களே பாவிக்காத நிலையில் நாம் எதற்கு அதனைப் பாவிக்க வேண்டும்? சுகாதார அமைச்சர் அதனை ஏன் இங்கு இறக்குமதி செய்கின்றார்?
ருபெல்லா மட்டுமல்ல எந்தவொரு மருந்தோ, தடுப்பூசியோ பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் அவை உற்பத்தி செய்யப்பட்ட திகதி, காலாவதியாகும் திகதி, உற்பத்தியின் தரம் போன்றன குறித்து நன்கு ஆராயப்பட வேண்டும்.
ஆனால் இம்முறை இரு அப்பாவி சிறுமிகளின் பரிதாப மரணத்துக்குக் காரணமாக இருந்த ருபெல்லா தடுப்பூசியில் நான் இப்பொழுது குறிப்பிட்ட உற்பத்தி செய்யப்பட்ட திகதி, காலாவதியாகும் திகதி போன்றன பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. சாதாரண மிளகாய்த்தூள் பக்கட்டில் கூட காலாவதியாகும் திகதி போடப்பட்டிருக்கும். அவற்றை பார்த்தே எம்மவர்கள் கடைகளில் வாங்குவார்கள். அப்படியானால் மனித உயிர்களுடன் தொடர்புடைய இந்த ஊசி குறித்து எவ்வளவு அவதானத்துடன் சுகாதார அமைச்சு செயற்பட்டிருக்க வேண்டும் என்பதை செய்தியாளர்களாகிய நீங்களே சற்று எண்ணிப் பாருங்கள்.
இங்கு பயன்படுத்தப்படும் மருந்துகளும் தடுப்பூசிகளும் மருத்துவ நிபுணர் குழுவினரால் நன்கு பரிசீலிக்கப்பட்ட பின்பு இறுதியாக சுகாதார அமைச்சரின் இறுதித் தீர்ப்புக்கு பின்னரே அவை பாவனைக்கு அனுமதிக்கப்படல் வேண்டும். ஆனால் அமைச்சர் இது குறித்து ஆராயாமல் அனுமதி வழங்கியது ஏன்? மக்களது, சிறுவர் சிறுமியரது உயிர்களுடன் அவர் விளையாடி வருகின்றார்.
முதலில் ஏற்பட்ட மரணத்துடனேயே ஊசியினை தடை செய்திருந்தால் மற்றுமொரு மரணம் ஏற்பட்டிருக்காது. ஏனைய உலக நாடுகளில் இந்நிலை ஏற்பட்டிருந்தால் அந்நாடுகளது சுகாதார அமைச்சர்கள் உடனடியாக தமது பதவியினை இராஜினாமா செய்திருப்பார்கள். ஆனால் நிமால் சிறிபால டி சில்வாவோ மழுப்பல் பேச்சுக்களை பேசிக் கொண்டு இன்னும் அமைச்சுப் பதவியில் அமரவே ஆசைப்படுகின்றார். அவருக்கு மக்களது உயிர்கள் குறித்து கிஞ்சித்தேனும் அக்கறை கிடையாது. இத்தகையவர்களே இன்றைய ஆட்சியில் அமைச்சுப் பதவிகளில் அமர்ந்துள்ளனர்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த ருபெல்லா தடுப்பூசி விலை குறைவென்பதற்காக அவற்றை இறக்குமதி செய்து எமது பிள்ளைகளுக்கு ஏற்றலாமா? மனித உயிர்களை பணத்துடன் ஒப்பிட முடியுமா?
கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் போதிய மருந்துகள் கிடையாது. நூற்றுக்கு எண்பது வீதமான மருந்துகளை பார்மஸிகளில் வாங்கும்படி வைத்தியர்கள் நோயாளிகளுக்குக் கூறுகின்றனர். இதுதான் இன்றைய ஆட்சியின் சுகாதாரத்துறை அமைச்சினதும் அமைச்சரதும் இலட்சணமாக உள்ளது. சற்று ஓய்ந்துவிட்டிருந்த டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. அரச நிறுவனங்களிலும் ஏன் சுகாதார அமைச்சிலும் நுளம்புகள் பெருகிக் காணப்படுகின்றன. இவற்றுக்கு பரிகாரம் காணப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிப் போகும்.
0 Response to "நாட்டு மக்களின் உயிர்களுடன் சுகாதார அமைச்சர் விளையாடுகிறார்- ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு"
แสดงความคิดเห็น