இலங்கைக்குப் பத்திரிகையாளர்களை ஏன் அழைத்துச் செல்லவில்லை? : பாண்டியன் கேள்வி

இலங்கை சென்ற தமிழக எம்பிக்கள் குழு ஏன் பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்லவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இலங்கையில் உண்மை நிலவரம் அறிய சென்ற டி.ஆர். பாலு தலைமையிலான தமிழக எம்பிக்கள் குழு, சுற்றுலா தலத்திற்கு சென்றதுபோல் சென்று வந்துள்ளது. பிரச்சினை நடந்து 100 நாட்கள் ஆகிய பின்னர் ஏன் செல்ல வேண்டும்?
உண்மையை அறிய வேண்டும் என்கின்றவர்கள் கூடவே பத்திரிகையாளர்களையும் அழைத்துச் சென்றிக்க வேண்டும். ஏன் அவர்களின் சொந்த 'சன் டிவி' , 'கலைஞர் டிவி', தங்கபாலுவின் 'மெகா டிவி' ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்றிருக்கலாமே?
மத்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அவர்களுடைய நிலைப்பாட்டினை மூடி மறைப்பதற்காகவே இந்த பயணத்தை அனுமதித்துள்ளது.
இலங்கை தமிழர்களின் இன்னல்களைத் தீர்க்க வலியுறுத்தி கன்னியாகுமரி, நீலகிரி, சென்னை, திருச்சி ஆகிய தமிழகத்தின் 4 பகுதிகளில் இருந்து 27ஆம் திகதி ஊர்வலமாக புறப்பட்டு, 29ஆம் திகதி திருச்சியில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நான், நல்லக்கண்ணு, பாமக நிறுவனர் ராமதாஸ், இலங்கை தமிழர் பாதுகாப்பு ஒருங்ணைப்பாளர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கு அடுத்தக் கட்டமாக நவம்பர் 17ஆம் திகதி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பார்வர்ட் பிளாக் சார்பாக தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வைக் கண்டித்து மறியல் போராட்டம் நடைபெறும்" என்றார்.
0 Response to "இலங்கைக்குப் பத்திரிகையாளர்களை ஏன் அழைத்துச் செல்லவில்லை? : பாண்டியன் கேள்வி"
แสดงความคิดเห็น