jkr

நான்கு மாவட்டங்களைச் சேர்ந்தோரை மீள்குடியேற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பம்(பட இணைப்பு)


வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 9920 பேரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் இன்று 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 74 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட்ட முதல் தொகுதியினர் இன்று வவுனியா நகரசபை சைவப்பிரகாச மகளிர் கல்லூரியிலிருந்து பஸ்களின் மூலம் அனுப்பி் வைக்கப்பட்டனர். முன்னதாக வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும், வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவருமான பசில் ராஜபக்ஷ, இடைத்தங்கல் முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை அந்தந்த மாவட்ட அரச உயரதிகாரிகளிடம் வைபவ ரீதியாகக் கையளித்தார். இந்த வைபவத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி, ஆளுனர் மொகான் விஜேவிக்கிரம, வன்னிப் பிராந்திய ஆயுதப்படைகளின் தளபதி, பொலிஸ் உயரதிகாரிகள், வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எச்.எம்.கே.ஹேரத் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். அங்கு உரையாற்றிய பசில் ராஜபக்ஷ, "ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அரசாங்கத்திற்கும் இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களை இடைத்தங்கல் நிவாரண கிராமங்களிலேயே வைத்திருக்க வேண்டிய தேவை கிடையாது. அவர்களை எவ்வளவு விரைவாக அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்ப முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்களை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இதுவரை 19 ஆயிரத்து 360 பேர் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்” எனத் தெரிவித்தார். இந்த வைபவத்தின்போது வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிபரப் பட்டியலின்படி, 1474 குடும்பங்களைச் சேர்ந்த 4585 பேர் இரண்டு தொகுதிகளாக யாழ். மாவட்டத்தி்ற்கும் 49 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் அம்பாறை மாவட்டத்திற்கும், 520 குடும்பங்களைச் சேர்ந்த 1896 பேர் இரண்டு தொகுதிகளாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், 166 குடும்பங்களைச் சேர்ந்த 553 பேர் திருகோணமலை மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைவிட, 751 பேர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 7334 முதியவர்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 121 இந்து மற்றும் கிறிஸ்தவ குருமார்களும், அரச அதிகாரிகளான 7 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேருமாக இதுவரையில் 19 ஆயிரத்து 360 பேர் முகாம்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக 9920 பேரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் வெள்ளியன்று ஆரம்பமாகி, அடுத்தடுத்த தினங்களில் தொடர்ந்து இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்ததாவது: "உலகிலேயே எமது அரசாங்கம்தான் இடம்பெயர்ந்த மக்களை மிகவும் விரைவாக அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தின் எல்லைப்புறப் பிரதேசங்களில் தொடங்கி சம்பூர், மாவிலாறு, வெருகல், ஈச்சிலம்பற்று, தொப்பிகல என கிழக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் இடம்பெயர்ந்தோர் பெரும் எண்ணிக்கையில் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். எமது நாட்டில் மோதல்கள் நடைபெற்ற இடங்களி்ல் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியி்ருக்கி்ன்றது. அவற்றை அகற்றி மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்பே அந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்ய முடியும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. மோசமான ஒரு பயங்கரவாத நிலையில் இருந்து உங்களை மீட்டுள்ள இராணுவத்தினரும் பொலிசாரும், நிவாரண கிராமங்களில் தங்க வைத்து பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு உங்களைப் பாதுகாத்து வருகின்றார்கள். இந்த நடவடிக்கையில் வடமாகாண ஆளுனர், வன்னி்பிராந்திய கட்டளைத்தளபதி உட்பட இராணுவம் மற்றும் பொலிசாருடன் சிவில் அதிகாரிகளும் முழுமையாக ஈடுபட்டுச் செயற்பட்டு வருகின்றார்கள். ஆகவே, இவர்களது அர்ப்பணிப்பான செயற்பாடுகளினாலேயே இன்று நீங்கள் உங்களது சொந்த இடங்களுக்குச் செல்லுகின்றீர்கள். சொந்த இடங்களுக்குச் செல்லும் நீங்கள் மீண்டும் ஒரு பயங்கரவாத நிலைமை ஏற்படுவதற்கு ஆதரவளிக்கக் கூடாது. பல்கலைக்கழகத்திற்கு உங்களது கல்வியைத் தொடர்வதற்காகச் செல்கின்ற மாணவர்கள் உங்களது கல்வி நடவடிக்கைகளில் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும்." இவ்வாறு பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்த வைபவத்தில் அனுராதபுரம் மாவட்ட அரச அதிபரும் வவுனியா மாவட்ட பதில் அரச அதிபருமான எச்.எம்.கே.ஹேரத், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோரும் உரையாற்றினர்.








  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "நான்கு மாவட்டங்களைச் சேர்ந்தோரை மீள்குடியேற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பம்(பட இணைப்பு)"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates