சனல் 4 வீடியோ தொடர்பான இராணுவ விசாரணைகளை அரசு இதுவரை நடத்தவில்லை : மங்கள சமரவீர

இராணுவத்தின் 60 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டாலும், இலங்கை இராணுவம் இன்று உலகில் பிரபல்யம் வாய்ந்த ஒரு படையணியாகப் போற்றப்பட்டாலும் இன்று சனல் 4 வீடியோ தொடர்பில் இராணுவத்தினர் மீது பல குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை" என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவின் அமைப்பாளரும் எம்பியுமான மங்கள சமரவீர இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,"இராணுவத்தினர் நாட்டுக்காக அரிய பல சேவைகளை செய்தாலும், தியாகங்கள் புரிந்தாலும் அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டியதவசியம்.
1982களில் கதிர்காம ரூபசுந்தரி என்ற பெண்ணைத் துஷ்பிரயோகம் செய்ததாக லெப்டினன் ஜெனரலாக இருந்த அல்பட் விஜயசூரிய மீது குற்றஞ் சுமத்தப்பட்டது. இவர் மீது விசாரணை நடத்தப்பட்டு, சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் 16 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
1970-1980 களில் நாட்டின் இறைமையைப் பாதுகாக்க இரணுவத்தினர் தமது உயிரைத் தியாகம் செய்தனர்.1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் கடந்த 20 வருட காலமாக நிலவிய யுத்தத்தின் போதும் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.மேலும் பலர் அங்கவீனர்களாயினர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் மேலும் 1994 ஆம் ஆண்டுஆகஸ்ட் மாதம் பொல்கொலை கங்கையில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பான நபர்களைக் கைது செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் 1996இல் இராணுவத்தினரால் கிரிஷாந்தி குமாரசுவாமி என்ற மாணவி மீதான துஷ்பிரயோக வழக்கில் பல இராணுவத்தினர் தொடர்புபட்டிருந்தனர். இவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நான் ஊடக அமைச்சராக இருந்த காலகட்டத்தில், 'சண்டே டைம்ஸ்' பத்திரிகையில் பாதுகாப்பு தரப்பு தொடர்பான கட்டுரைகளை எழுதிய இக்பால் அத்தாஸுக்கு சிலரால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பில் உடனடியாக ஆராய்ந்து நாம் நடவடிக்கை எடுத்தோம். விமானபப்டையினரே அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்பட்டது. சம்பந்தப்பட்ட விமான படையினக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உலகிலுள்ள சிறந்த இராணுவப் படைகளுக்கு எதிராகவும் கூட எத்தனையோ குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. உலகில் சிறந்த இராணுவமாகக் கருதப்படும் அமெரிக்க இராணுவத்தினர் மீதும் பல குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுக்கள் எழும்போதெல்லாம், உரிய விசாரணைகளை நடத்தி அவர்களுக்கு எதிராக அந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இது இவ்வாறிருக்க, எமது இராணுவத்தினர் 60 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் போது, வரலாற்றில் இல்லாத பல குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் எமது இராணுவத்தினர் மீதும் அரசு மீதும் பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆனால் இந்த அரசாங்கமோ இது தொடர்பில் எவ்வித விசாரணைகளையும் இதுவரை நடத்தவில்லை. இது எமது இராணுவத்தினருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.
சனல் 4 வீடியோ தொடர்பில் இராணுவத்தினர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கெதிராகவும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆரம்பத்தில் தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினர் பற்றிக் கதைத்தாலும் தற்போது அவர்களைப் பற்றி எவருமே பேசுவதில்லை.
யுத்தத்தை வெற்றிகொண்டவர்களை மறந்து விட்டார்கள். யுத்தத்திற்காகப் பாடுபட்ட இராணுவ தளபதி சரத் பொன்சேகா உட்பட பலரை இன்று மறந்து செயற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் யுத்த வெற்றியில் பங்கு கொண்ட வீரர்களுக்கு பதக்கம் வழங்குவதற்கான யோசனை முன்னர் முன்மொழியப்பட்டது. ஆனால் இன்று அதற்கும் கூட பணம் இல்லை என்று தட்டிக்கழித்து விட்டார்கள்.
சரத் பொன்சேகாவுக்கு ஏற்ற பதவிகள் வழங்கப்படவில்லை. அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக நியமனம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கபடுகிறது.
மேலும் அவரது பெயரைக் கூட ஐ.டி.என். மற்றும் ரூபவாஹினி தொலைக்காட்சிகளில் குறிப்பிடவோ அவர் தொடர்பான செய்திகளை வெளியிடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற இராணுவ ஆயுத கண்காட்சியில் கூட அவரது புகைப்படம் அகற்றப்பட்டு ஜனாதிபதியின் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. இது மேலிட உத்தரவு என்கிறார்கள்.
என்னை அன்று பலவாறாக ஏசிய மக்கள் இன்று ஏன் மௌனமாக இருக்கின்றார்கள்? இன்று சரத் பொன்சேகாவைப் பற்றி அவருக்கு ஏற்பட்டுள்ள அநீதி பற்றி ஏன் குரல் எழுப்ப மறுக்கின்றார்கள்?
57 ஆம் படையணி பிரிகேடியர் சவீந்திர சில்வாவின் பதவி தரமும் கூட இன்று கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. இது குறித்தும் எவரும் எந்தக் கருத்தும் கூறுவதாகத் தெரியவில்லை" என்றார்.
0 Response to "சனல் 4 வீடியோ தொடர்பான இராணுவ விசாரணைகளை அரசு இதுவரை நடத்தவில்லை : மங்கள சமரவீர"
แสดงความคิดเห็น